top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-126 - இங்கு எதுவும் இலவசமில்லை!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-126

இங்கு எதுவும் இலவசமில்லை!


  • பள்ளியில் நீங்கள் முதல்மதிப்பெண் எடுக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் ஆசைப்பட்டு கேட்கிறீர்கள் என்பதற்காக உங்கள் ஆசிரியர் நீங்கள் சரியாக எழுதாத தேர்வில் உங்களுக்கு முதல் மதிப்பெண் வழங்கிவிடுவாரா? பாடபுத்தகத்தை திருப்பி பல மணிநேரங்களை செலவழித்து படிக்காமல், முதல் மதிப்பெண் பெறுவது சாத்தியமா? பள்ளிப்படிப்பு மட்டுமல்லாமல், விளையாட்டில் பல மணிநேரங்கள், பல நாட்கள் / மாதங்கள் பயிற்சி செய்யாமல் தங்கப்பதக்கத்தை வென்றிட முடியுமா?

  • தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்று எண்ணற்ற பண்டிகை கொண்டாட்டங்களுக்கு, பல கவர்ச்சிகரமான தள்ளுபடி விலைகள், இலவசங்களை வாரிவழங்குவதாக விளம்பரம் செய்கிறார்கள். அவர்கள் சொன்ன வண்ணம், அவர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இலவசமாகத்தான் கொடுக்கிறார்கள். ஆனால் ஒருநிமிடம் யோசித்துப்பாருங்கள், அவைகள் யாவும் உண்மையில் இலவசமா? ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசமென்றால், அப்படி உண்மையாக ஆதாயமில்லாமல் இலவசமாக கொடுத்தால் அவருடைய தொழில் 1-2 மாதங்களிலேயே மூடப்படவேண்டியதுதான்.

படிப்பு, விளையாட்டு, கலைகள் என்று எந்தத்துறையில் வெற்றிபெறவேண்டுமானாலும், அதற்குரிய நேரத்தை / பணத்தை / ஆற்றலை செலவழித்தால் தான் முடியும். உடலை வளைத்து ஆடிப்பழகாமல் நாட்டியத்தாரகை ஆகிவிடமுடியாது. நூல் பல கற்காமல் / அனுபவத்தில் பயிற்சிக்காமல் எந்தத் துறையிலும் நிபுணராகிவிடமுடியாது. இன்றைய கலியுகத்தில், போதிய பணத்தை கொடுக்காமல், யாரிடமும் வேலை வாங்கிவிட முடியாது. ஒரு மாணவனாக, ஒரு இளைஞனாக, ஒரு குடும்பஸ்தனாக, ஒரு பெற்றோராக, ஒரு வயதானவனாக உங்களுக்கு எது வேண்டுமானாலும், அதற்குரிய விலையை கொடுத்தால் தான் தராசு சமன்படும். ஒரு வேலை சமன்படா விட்டால், நீங்கள் நிரந்தர கடனாளியாகவே காலம் கழிக்கநேரிடும்.


பண்டிகை விற்பனையில், வியாபாரிகள் சலுகைகள் கொடுப்பது வாடிக்கையாளரின் நன்மைக்காகவா? கட்டாயம் இல்லை... போட்டி அதிகரித்து விட்ட வியாபார சூழ்நிலையில், வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்க்க, இந்த கவர்ச்சிகரமான விளம்பரங்கள். சலுகைகள் அறிவிக்கப்பட்டதற்கு ஏற்ப, பொருளின் விலையை அவர்கள் மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். ஒரு வேளை விற்பனையாகாத சரக்கென்றால், அதிகமான கழிவுகளை கொடுத்து பெரிதாக இலாப-நஷ்டம் பார்க்காமல் உடனுக்கடன் காசாக்கி விடுகின்றனர். உங்களுக்கு அது மலிவு விலையில் கிடைத்ததாக நீங்கள் எண்ணலாம். ஆனால் அந்த வியாபாரி, விற்பனையாகாத சரக்கை ஏதோவொரு விலைக்கு காசாக்கியிருக்கிறார்.


இங்கு எதுவும் இலவசமில்லை. எதைப்பெருவதாயினும், அவற்றிற்கு ஒரு விலை கொடுத்தாக வேண்டும். அந்த விலையென்பது பணமாகவோ, நேரமாகவோ, உங்களின் ஆற்றலாகவோ இருக்கலாம். இந்த மூன்றில் ஒன்றை எதிர்பார்த்துத்தான் உங்களுக்கு எதுவுமே தரப்படுகின்றன. உங்கள் ஜனனம் முதல் மரணம் வரை, உங்களுக்கு எது கொடுக்கப்பட்டாலும், அதற்கு நீங்கள் ஒரு விலை கட்டாயம் கொடுத்தாக வேண்டும். அது உங்கள் தாயானாலும், தாரமனாலும், சேயானாலும், கட்டாயம் விலை கொடுத்தாகவேண்டும். ஒரு சில இடங்களில் காசாகவும், ஒரு சில இடங்களில் உங்களின் நேரமாகவும், ஒரு சிலவற்றிற்கு உங்கள் அறிவும், ஆற்றலும் சார்ந்ததாகவும் நீங்கள் கட்டாயம் பிரதிபலன் செய்தே தீரவேண்டும்.


எதை பெறுவதிற்கும் பணம் / நேரம் / ஆற்றல் என்கிற மூன்றில் ஒன்றை கட்டாயம் பிரதிபலனாக கொடுத்தாக வேண்டிய சூழலில், இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் ஒரு ரூபாய் சார்ந்த விலை நிர்ணயிக்கப்பட்து விட்டது.

  • கல்வியை கற்றுக்கொடுக்கும் ஆசான் அந்த கற்பித்தலின் மூலமாக வரும் வருமானத்தை கணக்கிடுகிறார். பள்ளியைத்தாண்டி, தனிப்பட்ட பயிற்சியென்று பல ஆயிரங்களில் வசூலிக்கிறார்;

  • காசு கொடுத்து உண்ணும் உணவங்களில் பரிமாறுபவருக்கு கடைசியில் அவர் சேவைக்கு சிறு சன்மானம் (டிப்ஸ்) தர வேண்டி உள்ளது;

  • கோவிலில் இறைவன் சிலையை அருகிலிருந்து தரிசனம் செய்ய காசு கொடுத்து சீட்டு வாங்க வேண்டும். உங்களுக்கு தெரியாத மொழியில் அர்ச்சகர் பரம்பொருளிடம் உங்கள் பெயரையும் நட்சத்திரத்தையும் சொல்லி உங்களுக்காக வேண்டுவதற்கு காசு கொடுக்க வேண்டும்;

  • திருமணம், காதுகுத்து, புதுமனைக்கு அழைத்தால் அன்பளிப்போடு போனால் தான் மரியாதை;

  • வீட்டு விசேடத்திற்கு வந்தவர் ரூ.100-க்கு மொய் செய்திருந்தால், நீங்கள் இப்போது அவர் வீட்டு விசேடத்தில் ரூ.100–க்கு அதிகமாக மறுமொய் செய்ய வேண்டும்;

  • அரசாங்கத்தின் ஒரு நியாயமான சலுகையை நீங்கள் பெற, குறிப்பிட்ட சதவிகிதத்தை (%) பகிர வேண்டும்.

இங்கு எல்லாமே பணத்தை சுற்றித்தான். தர்மசாலைகள்கூட விளம்பர விடுதிகளாகி விட்டன. கோவிலில் எங்கு திரும்பினாலும் “உபயம்:(இன்னார்)” என்ற விளம்பரம் தான். நன்கொடைகள் பெரும்பாலும் சேவை எண்ணத்தை தாண்டி விளம்பரம், தற்பெருமை, கௌரவம் சார்ந்து பிரதிபலனை எதிர்பார்த்து கொடுக்கப்படுகின்றன.


இந்த எல்லா உதாரணங்களும் உங்களுக்கு “எதையும் இலவசமாக எதிர்பார்த்திராதீர்கள்” என்ற ஒரே கருத்தை ஆழமாக பதியவைக்கத்தான். “எதற்கு என்ன விலை கொடுக்க வேண்டும்?” என்று உலகம் எதிர்பார்க்கிறதென்று முன்கூட்டியே தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்; உங்களால், மற்றவர் எதிர்பார்க்கும் விலையை சரியாக கொடுக்கமுடிந்தால், நீங்கள் எதிர்பார்ப்பது உங்களுக்கு சாத்தியப்படும்.


யாரிடமிருந்து எந்த உதவிபெறுவதானாலும்

அதற்கான விலையை அவர் கேட்கும் முன்னர்

நீங்களாக யூகித்து கொடுத்தால் - நீங்கள் கேட்டதை

கேட்கும் நேரத்தில் அவர்கள் முடித்துக்கொடுப்பார்கள்;


மற்றவர்களிடம் இருந்து பிரதிபலன் எதிர்பாராத விதம்

வியாபாரமும், விலையும் இருக்கவேண்டுமென்று எதிர்பார்த்தால்

அது உங்களின் அடிமுட்டாள்தனம்;


எல்லாவற்றிற்கும் ஒரு விலை கட்டாயம் நிர்ணயிக்கப்பட்டாயிற்று!

அந்த விலையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ

நீங்கள் கொடுக்கவேண்டுமென்பது காலத்தின் கட்டாயம்;

பணம் / நேரம் / அறிவு & ஆற்றல் என்ற ஏதேனுமொன்றை

நீங்கள் கொடுக்கத்தயாரானால்

நீங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் ஒருநாள் முடிக்கப்படும்;


- [ம.சு.கு 12.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page