top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-119 - இக்கணத்தில் வாழ்ந்திடுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-119

இக்கணத்தில் வாழ்ந்திடுங்கள்!


 • குழந்தை ஆசைப்பட்டு கேட்ட ஐந்து ருபாய் மிட்டாய் ஒன்றை வாங்கிக் கொடுக்கிறீர்கள். கூட இருந்த இன்னொரு குழந்தை, இரண்டு வெவ்வேறு ஒரு ரூபாய் மிட்டாய் கேட்கவே, அந்த இரண்டு மிட்டாய்களை அந்த குழந்தைக்கு வாங்கிக் கொடுத்துக் செல்கிறீர்கள். இப்போது முதலில் விலை உயர்ந்த மிட்டாய் வாங்கிய குழந்தை தனக்கு அது வேண்டாம் என்றும் அந்த இரண்டு மிட்டாய்கள் தான் வேண்டுமென்று அடம்பிடிக்க ஆரம்பிக்கிறது. நீங்கள் கண்டுகொள்ளாமல் விடவே, அந்த ஐந்து ரூபாய் மிட்டாயை வேண்டாவெறுப்பாக சாப்பிடுகிறது. ஆசைப்பட்டு வாங்கிய மிட்டாயின் மீதிருந்த மோகம்போய் இன்னொரு குழந்தையின் கையிலிருக்கும் விலைகுறைந்து இரண்டு மிட்டாய்களின் மீது கவனம் திரும்பி, கையிலிருக்கும் மிட்டாயின் சுவையை அனுபவிக்காமல் மனவேதனை கொள்கிறது.

 • உங்கள் குடும்பத்தினருடன் சிம்லாவிற்கு சுற்றலா சென்று பனிமலையில் விளையாடவேண்டுமென்று கனவரிடம் கேட்கிறீர்கள். இந்த ஆண்டு நிதிநிலை சரியில்லையென்று கூறி ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார். நீங்கள் கேட்ட ஊருக்கு அழைத்துச் செல்லாததில் உங்களுக்கு பெரிய வருத்தம். ஊட்டியில் மலர்கண்காட்சியில் அழகிய வண்ணமலர்கள் பூத்துக் குலுங்கினாலும், உங்கள் மனம் ஏனோ இன்னும் சிம்லாவையே நினைத்துக்கொண்டு கண்முன் இருக்கும் அழகை இரசிக்காமல், குழந்தைகளுடன் விளையாடாமல் மனஉளைச்சலில் இருக்கிறது. கண்முன் இருக்கும் இரம்மியமான அழகை கண்டு இரசிக்காமல் இல்லாததை எதிர்பார்த்திருப்பதனால் நஷ்டம் யாருக்கு?

குழந்தை அந்த விலையுயர்ந்த மிட்டாய் ஒன்றை ஆசைப்பட்டுதான் வாங்கியது. ஆனால் தன்னுடன் இருந்த அடுத்த குழந்தைக்கு இரண்டு மிட்டாய் கிடைத்ததும் மனம் மாறிவிட்டது. தன்னிடம் ஒருமிட்டாயிருக்க, அடுத்த குழந்தையிடம் இரண்டு மிட்டாய் இருப்பதை கண்டதும் சற்று பொறாமை தலைதூக்கி தன்னிடம் இருக்கும் அந்த ஒரு மிட்டாயின் சுவையை இரசிக்க மறுக்கிறது.


மறுபுறம், அதேகுழந்தை கடைகளே இல்லாத சிற்றூரில் இருக்கும்போது, திண்பன்டம் ஏதும் கிடைக்காத நிலையில், தான் அவ்வளவாக விரும்பாத ஒரு மிட்டாய் கிடைத்தாலும், அப்போதைக்கு அதை அமிர்தமென்று ருசித்து சாப்பிடுகிறது. விரும்பி வாங்கிய மிட்டாயின் சுவையை இரசிக்க மனமில்லை. மறுபுறம் பிடிக்காத மிட்டாயை சுவைத்து இரசித்து உண்கிறது. விவரம் தெரியாத குழந்தைகள் வேறுபாடுகளை உணராமல் மனவருத்தம் கொள்கிறது. இருக்கின்ற சூழ்நிலையும், கையிலிருக்கும் பொருளும் உங்களை மனநிறைவடைய செய்கிறதா?


பனிமலை காண இந்த முறை சாத்தியமில்லாமலிருக்கலாம். ஆனால் இப்போது கண்முன்னிருக்கும் அழகு மலர்களை கண்டு இரசிப்பதும், குழந்தைகளுடன் ஆடிக் களிப்பதும் இத்தருணத்தில் வாழ்வதற்கான பொருளல்லவா? அதை உங்கள் மனம் ஏற்று செய்கிறதா? இன்று ஆற்றில் இருக்கும் நீர் நாளை இருக்காது. ஆறு இருந்தாலும் வேறுநீர்தான் இருக்கும். இன்றைக்கானவை இன்றைக்கு மட்டுமே. அதே கணம், அதே மனிதர்கள், அதே சூழ்நிலை, அதே நிகழ்வு திரும்பவராது. ஒரு வேளை வந்தாலும், நீங்களும் உங்கள் அனுபவமும் மாறுபட்டிருக்கும். உங்களின் அனுகுமுறை இப்போது மாறியிருக்கும். இக்கணத்தில், என்ன இருக்கிறதோ, அதை அவ்வண்ணமே கண்டும், கேட்டும் மகிழ்வது உங்களுக்கான இறைவனின் கொடை. அதை இரசிக்காமல் தவறவிடுவது உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்ளும் தண்டனை. இக்கணத்தை உணர்ந்து அனுபவிக்கத் தெரியாதவர்களுக்கு எக்கணமும் மகிழ்ச்சி கிடைக்காது.


உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் மனநிறைவுடன் வாழ்ந்திட

 • அன்பிற்குறியவர்களுடன் நேரம் செலவிடுங்கள்;

 • பயனங்களின் ஒவ்வொரு தருணத்தையும், காட்சியையும் இரசித்திடுங்கள்;

 • முக்கிய நிகழ்வுகளில் முழுமையாக பங்கெடுத்து எல்லோருடனும் மகிழ்ந்து களித்திடுங்கள்;

 • இயற்கையின் இனிமையில் இன்புறுங்கள் [சூரிய உதயம், அஸ்தமனம், மழை, வானவில், செவ்வானம்];

 • அலுவலகப் பணிகளை, அன்றாட வீட்டு வேலைகளை அற்பணிப்புடன் செய்து மனம் திருப்திகொள்ளுங்கள்;

 • படிக்கும் புத்தகத்தை, ஆசிரியரிடம் கற்கின்ற பாடத்தை முழுக்கவனத்துடன் கற்றறிந்திடுங்கள்;

 • விளையாடும் ஆட்டங்களில் கவனத்துடன் முழுத்திறனையும் வெளிப்படுத்தி கிடைத்த வாய்ப்பில் வெற்றிபெற முயற்சித்திடுங்கள்;

 • தேவைக்கு அதிகமானவற்றை யாசிப்பவர்க்கு கொடுத்துதவுங்கள்;

 • புதியவைகளை படைக்கும் முயற்சியில் கற்பனைகளில் இலயித்து படைப்பை சிறப்பாக்கிடுங்கள்;

 • பொழுதுபோக்கு எதுவானாலும், அதை முழுஈடுபாட்டுடன் செய்து மனநிறைவடைந்திடுங்கள்;

 • இறைவழிபாடோ, தியானமோ –மனதை ஒருநிலைப்படுத்தி அத்தருணத்தின் முழுமை உணர்ந்திடுங்கள்;

 • பொது சேவையோ, தானமோ – செய்வதை மனநிறைவுடன் செய்துகொடுங்கள்;

இப்படி இன்னும் ஆயிரமாயிரம் விடயங்களை எழுதிக்கொண்டே போகலாம். உங்களுக்கான தருணத்தை நீங்கள தான் கண்டுணர்ந்து களித்திடல் வேண்டும்.


மாண்ட மனிதரும், சென்ற நேரமும்

திரும்பிட வாய்ப்பே இல்லையென்பதால்

எக்கணத்திலும் அக்கணத்தை

அணுவணுவாய் சுவைத்து வாழ்ந்திடுங்கள்!


கண்ட மனிதரும், இருந்த சூழலும்

நிகழும் அதிசயங்களும்

திரும்பக் கிடைப்பது அபூர்வமாதலால்

வந்த வாய்ப்பில் மனநிறைவுடன்

சரியானதை சிறப்புடன் செய்திடுங்கள்!- [ம.சு.கு 05.02.2023]


Recent Posts

See All

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page