top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-116 - குறிப்பெடுப்பது பலவகையில் உதவும்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-116

குறிப்பெடுப்பது பலவகையில் உதவும்!


  • ஆய்வுக்கூடங்களில், விஞ்ஞானிகள் தங்களின் ஒவ்வொரு சோதனை முயற்சியையும் தொடர்ந்து குறிப்பெடுத்துக்கொண்டே இருப்பார்கள். எந்தக் கலவையை தயாரிக்க, என்னென்ன பொருட்களை சேர்க்கிறார்கள், எவ்வளவு சேர்க்கிறார்கள், எந்த தருணத்தில் சேர்க்கிறார்கள், எத்தனை வெப்பநிலையில் சேர்க்கிறார்கள் என்று தொடர்ந்து தங்களின் ஏட்டில் குறித்துக்கொண்டே வருவார்கள். ஒவ்வொரு நாளும் பல சோதனை முயிற்சிகளை மேற்கொள்ளும் போது, எந்த முயற்சி வெற்றிபெரும் என்று முதலில் தெரியாது. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட முயற்சியில் அந்த கலவை கண்டுபிடிக்கப்படும்போது, என்னென்ன, எவ்வளவு சேர்த்தார்கள் என்று நினைவுகூறுவதில் குழப்பம் வரும். அந்த குழப்பங்களை தவிர்க்க, அவர்களின் குறிப்பு பேருதவியாய் இருக்கும்.

  • பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது, சின்ன சின்ன குறிப்புக்களை சிலமாணவர்கள் எடுப்பதை பார்க்கலாம். அந்த மாணவர்கள் எடுக்கும் அந்த சின்ன குறிப்பை மறுமுறை பார்த்த மாத்திரத்தில், அவர்களுக்கு ஆசிரியர் என்ன விளக்கினார் என்று ஞாபகம் வரும்வண்ணம் குறிப்புக்களை எடுப்பார்கள். சுயமாக தேர்வுக்கு படிக்கும்போது, புத்தகத்தில் முக்கியமானவற்றை தனியொரு கையேட்டிலோ, அல்லது அந்த புத்தகத்திலேயோ குறிப்பெடுப்பது பலருடைய வழக்கம். தேர்வு நாளன்று எல்லா பக்கங்களையும் புரட்டி படிக்க முடியாது என்பதால், தேர்வு நாளில் ஒரிரு மணிநேரங்களில் அனைத்தையும் ஒருமுறை புரட்டிவிடுவதற்கு ஏற்ற வண்ணம் இந்த குறிப்புக்களை எடுப்பார்கள். இந்த குறிப்புகள் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கவும் பேருதவியாய் இருக்கும்.

விஞ்ஞானிகளுக்கு, அவர்களின் குறிப்புக்கள் அவர்கள் சரியாக செய்தவற்றையும், தவறாக செய்தவற்றையும் அலசி ஆராய உதவி புரிகிறது. அதேபோல, மிகப்பெரிய திட்டங்களை செயல்படுத்துபவருக்கு, அன்றாடம் என்னென்ன வேலைகள் நடந்துள்ளன என்ற சிறுகுறிப்பு, அவர்களின் மொத்த திட்டத்தின் முன்னேற்றத்தை அவ்வப்போது அலசிப்பார்க்க உதவிபுரியும். எல்லாவற்றையும் ஒருவர் மனதிலே நிறுத்தி செயல்படுத்துவது சற்று சிரமமான விடயம். போனமாதம் 6-ஆம் தேதி என்ன சாப்பிட்டாய் என்று கேட்டால் உங்களால் பதில் சொல்லமுடியாது. அதே தினமும் நாளேட்டில் குறிப்பெடுப்பவரால், அதை திருப்பிப்பார்த்து சொல்லிவிட முடியும். என்ன சாப்பிட்டோம் என்று குறிப்பெடுத்து நேரம் வீணாக்குவதில் என்ன பயனென்று நீங்கள் கேட்கலாம். உடல் நலம் கண்காணிப்பில் இருப்பவருக்கு அது தேவைப்படலாம்.உங்களுக்கு எங்கு சென்றோம், யாரை சந்தித்தோம் என்ற குறிப்புக்கள் உதவலாம்.


ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, அவர்கள் ஒரு முழு பாடத்தை ஒரே மூச்சில் விளக்கிவிட்டு போய்விடுவார்கள். அப்போதைக்கு எல்லாம் புரிந்தது போல இருந்தாலும், ஒருவாரம் கழித்து புத்தகத்தை திருப்பிப் பார்த்தால், எதுவுமே ஞாபகத்திற்கு வராது. எல்லாமே குழப்பமாக இருக்கும். அதேசமயம், ஆசிரியர் நடத்தும்போது, அவர்கள் சொன்னதில் புரிந்ததை சிறு குறிப்பாக அப்போதே எடுத்துக் கொண்டால், அந்த விடயம் சற்ற ஆழமாக உங்கள் மனதில் பதியும். மறுமுறை உங்கள் குறிப்பை நீங்கள் திருப்பும் போது, உங்களுக்கு படித்ததும், புரிந்ததும் முழுமையாக நினைவுக்கு வரும். மேலும் இந்த சிறுகுறிப்புக்கள், தேர்வு நாளன்று இருக்கும் ஓரிரு மணிநேரத்தில் படிப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.


விஞ்ஞானிகள் குறிப்பெடுப்பதையும், மாணவர்கள் குறிப்பெடுப்பதையும் பற்றி பார்த்தோம். இந்த குறிப்பெடுத்தால் அவர்களுக்கு உதவுவதுபோல எல்லோருக்கும் உதவியாக இருக்குமா என்று நீங்கள் கேட்கலாம்?

  • பல வெற்றியாளர்கள் அன்றாடம் நாட்குறிப்பு (டைரி) கட்டாயம் எழுதுகிறார்கள். தங்களின் அன்றைய செயல்களை ஒருமுறை மறுசீராய்வு செய்ய அது வழக்கமான வாய்ப்பாகிறது.

  • எல்லா எழுத்தாளர்களும் தங்களுக்கு தோன்றும் கருத்துக்களை அவ்வப்போது குறித்துவைத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.

  • மருத்துவமனைகளில் நடைபெறும் எல்லா சிகிச்சை முறைகளும், கொடுக்கப்படும் மருந்துகளும் மணிவாரியாக குறித்துவைக்கப்படுகிறது;

  • எல்லா பெரிய நிறுவனங்களிலும், சேவையின் தரத்தை மேம்படுத்த / உறுதிசெய்ய, பணியாளர்கள் செய்யும் அன்றாட பணிகளை அவ்வப்போது குறித்துவைப்பதற்கு ஏற்ப நிறுவன செயல்பாடுகளை வடிவமைத்திருக்கின்றனர்;

இன்று அன்றாட பணிகளை பட்டியலிட்டு செய்திட எண்ணற்ற செயலிகள் வந்துவிட்டன. பட்டியலிடப்பட்ட பணிகள், எவ்வளவு முடிக்கபட்டிருக்கின்றன, யாரிடம் அந்த வேலை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது, அதை முடிப்பதற்கு எத்தனை நாள் உள்ளன என்று எண்ணற்ற தகவல்களை சேகரிக்கவும், அன்றாடம் மறுஆய்வு செய்யவும், இந்த செயலிகள் மிக உதவியாக இருக்கின்றன. அவரவர் செய்யும் வேலைகளுக்கு ஏற்ப, இந்த செயலிகள் மாற்றிக்கொள்ளும் வண்ணம் எண்ணற்ற தேர்வுகள் அவற்றில் இருக்கின்றன.


பணிகள் எதுவானாலும்

எதை? எப்போது? எப்படி?

செய்யவேண்டுமென்பதை திட்டமிடுவது போல


அன்றாடம் செய்யும் பணிகள்

அறிந்து கொண்ட விடயங்கள்

இனி செய்யவேண்டிய பணிகள்

என்று எல்லாவற்றையும் குறிப்பெடுத்து

நாள்தவறாமல் செயல்களை மறுஆய்வு செய்தால்

தவறுகளை திருத்தி வெற்றிகொள்ளும்

பொன்னான வாய்ப்பு எல்லோருக்கும் உண்டு;


- [ம.சு.கு 02.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page