“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-114
போட்டியின் கடைசி நொடிகள்!
குறுகிய தூர ஒட்டப்பந்தயத்தின் இறுதி கட்டத்தில், ஒவ்வொரு வீரரும் தங்களின் கால்களைக் காட்டிலும் தங்களின் உடலை முன்னோக்கி வளைத்து, வெற்றிக்கோட்டை கடக்க முயற்சிப்பார்கள். ஒரு வகையில் இந்த முன்னோக்கி வளையும் முறை அவர்களுக்கு சிறிது வேகத்தைக் கூட்டினாலும் இறுதி நொடியில் சிறிய வித்தியாசத்தில் வெற்றியை தவரவிட்டுவிடக்கூடாது என்பதற்காக, ஒடிக்கொண்டிருக்கும் கால்களையும் தாண்டி, தன் உடலின் மேல்பகுதியை மிகவும் கஷ்டப்பட்டு வளைத்து எல்லைக்கோட்டை அடைய முயற்சிக்கிறார்கள். இந்த கடைசி நொடிகளின் முயற்சி, பல வீரர்களுக்கு வெற்றியை தந்துள்ளது;
வீடுகட்டும் வேலைகளைப் பார்த்திருந்தால், ஆரம்பத்தில் மெதுவாகத்தான் அது நடந்துகொண்டிருக்கும். பாதிவேலைகளை முடிந்த நிலையில், புதுமனை புகுவிழாவிற்கான நாளைக்குறித்து பத்திரிக்கை அடித்துவிட்டால், வேலை தானாக சூடுபிடிக்கும். அதுவும் கடைசி வாரத்தில், மீதமுள்ள எல்லாவேலைகளையும் இரவுபகல் பாராமல் செய்துமுடிப்பார்கள். அன்றுவரை கட்டிட சாமான்கள் நிறைந்து ஒழுங்கற்றுக்கிடந்த இடம், புதுமனைக்கான பொழிவுடன் மிளிரும். நீங்கள் புகுவிழா நாளைக் குறித்து சொன்னபின்னர், கட்டிட மேஸ்திரி ஆட்களை அதிகப்படுத்தியும், மீதமுள்ள வேலைகளை முடிப்பதற்கான மற்ற எல்லாதிட்டங்களையும் நாள்வாரியாக, மணிகணக்கு வாரியாக திட்டமிட்டு வேலையை முடித்துக்கொடுப்பார். 6-7 மாதங்களாக நடந்துகொண்டிருந்த கட்டிட பணி, அந்த கடைசி வாரத்தில் தான் படுவேகமாக முடிக்கப்படும்;
ஓட்டப்பந்தயத்தில் வெற்றியை உறுதிசெய்திட, கடைசி நொடிகளில் உடலை வளைத்து கோட்டை கடக்க முயற்சிக்கிறார்கள். அப்படி வளைப்பதால் சமநிலை தவறி கீழே விழ வாய்ப்பிருக்கிறது என்று நன்றாக தெரிந்தே இந்த முயிற்சியை மேற்கொள்வார்கள். பலநொடிகளாக போராடி ஓடிவந்திருக்கிறோம், இந்த கடைசி நொடியில் வெற்றியை தவறவிட்டுவிடக்கூடாது என்ற முன்ஜாக்கிரதை உணர்வில் இந்த முயற்சியை மேற்கொள்கின்றனர். இது ஓட்டப்பந்தயம் என்றில்லாமல், எல்லா விளையாட்டுக்களிலும், பொதுவாக நிகழக்கூடிய ஒரு கடைசி நிமிட முயற்சியே.
கால்பந்தாட்டத்தின் முதல் 80 நிமிடத்தில் விளையாட்டு வீரர்களின் ஆட்டத்தின் வேகத்தையும், கடைசி 10 நிமிட வேகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், சில சமயங்களில் சம்பந்தமில்லாத அளவு வேறுபாடுகள் நிறைந்திருக்கும். அதுவும் புள்ளி(கோல்) எண்ணிக்கையில் சற்று பின்தங்கியிருக்கும் அணி, வெற்றிபெற வேண்டும் என்ற போராட்டத்தில் அந்த கடைசி நிமிடங்களில் மிக ஆக்ரோஷமாக தாக்குதல் ஆட்டத்தை முன்வைக்கும். மட்டைப்பந்து, இறகுப்பந்து என்று எல்லா விளையாட்டுக்களிலும் அந்த கடைசி நொடிகளில், தங்களின் ஆற்றல், திறமை எல்லாவற்றையும் ஒன்றுகுவித்து கடுமையான போராட்டத்தை முன்வைத்து வெற்றியை அடைய முயற்சிக்கிறார்கள். நீண்ட போராட்டதிற்குப்பின் இந்த இடத்திற்கு வந்துள்ளோம், எக்காரணத்தைக் கொண்டும் வெற்றியை தவறவிட்டுவிடக்கூடாது என்ற உந்துதலில் அவர்களின் உடலும் அசாத்தியங்களுக்கு அந்த கட்டத்தில் தயாராகியிருக்கும்.
வீடுகட்டும் திட்டம், அலுவலக வேலைகள், திட்ட அறிக்கை தயார் செய்வது போன்று எந்தவொரு வேலையிலும், அந்த கடைசி நிமிடங்களில் மீதமுள்ள வேலைகளை முடிக்க ஒட்டுமொத்த குழுவும் வேகமாக இயங்குவது கண்கூடாக பார்த்திருப்போம். எவ்வளவு பெரிய திட்டமானாலும், எத்தனை சிறப்பாக திட்டமிட்டு செய்திருந்தாலும், அந்த கடைசி நிமிட வேலையின் வேகம்தான் பலநேரங்களில் முழுமைபெற செய்கிறது. தேர்வுத்தேதி நெருங்கும் போதுதான் மாணவர்களும், தங்களின் கவனத்தை அதிகரித்து, படிப்பின் வேகத்தை அதிகரிக்கின்றனர்.
ஆம்! நாம் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ஒரு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருப்போம். எண்ணற்ற நேரத்தையும், உழைப்பையும் அதில் போட்டிருப்போம். அந்த திட்டத்தின் கடைசி நிமிடங்களில் எந்தவொரு கவனக்குறைவினாலும் வெற்றியை தவறவிட்டுவிடக்கூடாதென்று, கடைசி நிமிடங்களில் நம் கவனத்தை அதிகரித்து, வெற்றியை உறுதிசெய்கிறோம். மாறாக வெற்றிபெற்றுவிடுவோம் என்ற தைரியத்திலும், நம்பிக்கையிலும் கடைசி நிமிடங்ளில் சற்ற கவனக்குறைவாக அதே வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கையில், சகபோட்டியாளர் கடைசிமுயற்சியாக போராடி முந்திவிட்டால், உங்களின் அவ்வளவு நாள் போராட்டம் எல்லாம் நொடிப்பொழுதில் வீணாகிவிடும். இதுவரையில் எத்தனை சிறப்பாக செய்கிறீர்கள் என்பதைத் தாண்டி, கடைசி நிமிடங்களில் இன்னும் சிறப்பாக எப்படி முடிக்கிறீர்கள் என்பதை உலகம் எதிர்பார்க்கும்.
எல்லா திட்டங்களிலும், எல்லா விளையாட்டுக்களிலும், எல்லா தேர்வுகளுக்கும், வாழ்வின் எல்லா தருணங்களிலும் அந்த கடைசி நிமிடங்கள் / நொடிகள் மிகமுக்கயமானவை. அந்தகட்டம் வரை எவ்வளவு போராடி வந்திருக்கிறோம் என்பதை தாண்டி, எப்படி சிறப்பாக அதை செய்துமுடிக்கிறாம் என்பது அதிமுக்கியம். கடைசி நிமிடங்களில் எல்லைக்கோட்டிற்கு முன்னதாகவே வெற்றியைக் கொண்டாட எண்ணி, மமதையில் வெற்றியை கோட்டைவிட்ட சிலமுட்டாள்களைப் போலல்லாமல், எல்லைக்கோட்டை இன்னும் சிறப்பாக எப்படி அடைவதென்று கடைசி நிமிடங்களிலும் முழுஆற்றலுடன் முயற்சித்தால், வெற்றியை உறுதிசெய்வதோடு, பலநாள் போராட்டங்களின் பயனாய் சாதனைகளையும் படைக்கலாம்.
எங்கும், எதிலும் முடிவு முக்கியம்;
அந்த முடிவைநோக்கிய பயனத்தின்
இறுதி தருணங்கள் அதிமுக்கியம்;
கடைசி நிமிடங்களில்
ஆற்றலை ஒன்றுகுவித்து எடுக்கப்பட்ட
கடைசி முயற்சியும், உந்தலும்
பலவெற்றிச் சரித்திரங்களை மாற்றியிருக்கின்றன;
நீங்கள் இதுவரை என்ன செய்தீர்கள் என்பதைதாண்டி
கடைசியில் எப்படி சிறப்பாக செய்துமுடித்தீர்கள் என்பதை
உலகம் அதிகமாக அலசும்;
எல்லா முயற்சியின் கடைசி நொடிகளையும்
வாழ்வின் பொன்னான தருணங்களாக்கிட
உங்கள் ஆற்றல் முழுவதையும் ஒன்றுகுவித்து
சாதனைபுரிந்திட முயன்றிடுங்கள் – மீதிக்கதையை
சரித்திரமாய் உலகம் பேசிக்கொண்டிருக்கட்டும்;
- [ம.சு.கு 31.01.2023]
Comments