top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-113 - கனவுகளை தொலைத்தவரிடமும் கற்கவேண்டும்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-113

கனவுகளை தொலைத்தவரிடமும் கற்கவேண்டும்!


  • திரைப்படத் துறையில் எண்ணற்ற நடிகர், நடிகைகள் குறுகிய காலத்தில் பிரபலமாகி இருப்பார்கள். ஒரு சிலர், பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு அங்கீகரிக்கப்பட்டிருப்பார்கள். பள்ளியில் படிக்கும்போதே கதாநாயகியாக நடிக்க சிலருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். அவர்களில் ஓரிருவருக்கு அது பெரிய வெற்றியாகவும் அமைந்திருக்கும். மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்த நடிப்புக் கனவுகளுடன் சென்னைக்கு வந்து போராடி வென்றேன் என்று பல நடிகர்கள் நேர்காணலில் சொல்வதை கேட்டிருப்பீர்கள். அவர்கள் பாணியில் நீங்களும் பெரிய சாதனை படைப்பேன் என்ற சென்னைக்கு கிளம்ப ஆசைப்படுகிறீர்களா? அந்த வெற்றி பெற்ற நடிகர் சொன்னது உண்மையானாலும், அவரைப்போல சென்னைக்கு நடிக்கும் கனவுடன் வந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? அவர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

  • மென்பொருள் துறையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் நிறுவனங்கள் எல்லாமே முன்னொரு நாளில், ஒரு மூலையில், ஒரு சிறிய அறையில் துவக்கப்பட்ட கனவுகளே. ஒரு தனிநபரின் / சிறுகுழுவின் கனவுத் திட்டங்கள், பல போராட்டங்களைத் தாண்டி இன்று வளர்ந்து நிற்கிறது. அப்படிப்பட்டதொரு கனவு உங்களிடமும் இருக்கிறதா? உங்களாலும் சாதிக்க முடியுமென்று களம்காண விரும்புகிறீர்களா? அந்த வெற்றியாளர்களின் கதைகளை நிறைய கேட்டு, தங்களாலும் அப்படி சாதிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் தினமும் எத்தனை பேர் களமிரங்குகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? தினம் தினம் அந்த கனவுகளுடன் பெங்களூருவிற்கு வந்து மென்பொருள் நிறுவனம் தொடங்கிய இலட்சக்கணக்கான நிறுவனங்களின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா?

இலட்சம்பேர் நடிப்புக்கனவுகளுடன் சென்னைக்கு வந்தாலும், ஒருசிலருக்கு மட்டுமே கதாநாயகன் வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி கிடைத்து வெளிவரும் படங்கள் எல்லாமே வெற்றிபெற்று விடுவதில்லை. ஒரு வருடத்தில் வெளிவரும் 500 படங்களில் 10-20 படங்கள் மட்டுமே பெரிய வெற்றிப்படங்களாகின்றன. பாதிக்கும் மேற்பட்ட படங்களில், போட்ட முதலீட்டையே எடுக்கமுடியாமல் தயாரிப்பாளர் நஷ்டத்தில் சிக்குகிறார்.


நடிப்புக்கனவுகளுடன் நிறையபேர் வந்தாலும், ஒரு சிலர் மட்டுமே வெற்றிபெறுகிறார்கள். சிலருக்கு துணைநடிகராக வாய்ப்பு கிடைத்து காலத்தைக் கழிக்கின்றனர். ஏனையவர்கள் கிடைத்த வேலையை செய்து காலத்தை ஓட்டுகின்றனர் அல்லது ஊர்திரும்புகின்றனர். இதில் தவறானவர்களின் வளையில் சிக்கி, ஆசை வார்த்தைகளை நம்பி வாழ்க்கையை தொலைத்த பெண்களும் ஏராளம் என்பது வேதனைக்குரிய விடயம். இந்த நடிப்புக் கனவுகளைத் தாண்டி, இயக்குனராக, ஒளிப்பதிவாளராக, இசையமைப்பாளராக, பாடகராக, கவிஞராக, கதாசிரியராக எண்ணற்ற கனவுகளுடன் நிறையபேர் வந்து போகிறார்கள். எல்லோரும் வென்றவரை மட்டுமே பார்த்து வந்துவிடுகிறார்கள். களத்தின் யதார்த்தம் புரியும்வரை அவர்களால் தாக்குப்பிடித்து நிற்கமுடிவதில்லை.


நிறைய கனவுகளுடன் வந்து, வாழ்க்கையில் சாதித்தவர்களைப்பற்றி நீங்கள் பலநூல்களில் படிக்கலாம். பலகதைகளில் கேட்கலாம். அவை அனைத்துமே உண்மைதான். ஆனால் அந்த புத்தகங்களிலும், கதைகளிலும் சொல்லாமல்விட்ட பகுதி என்ன தெரியுமா? அந்த வெற்றியாளரைப் போன்று எத்தனை பேர் அதேமாதிரி கனவுகளுடன் வந்தார்கள், அவர்களில் எத்தனை பேரால் வெற்றிகாண முடிந்ததென்ற புள்ளிவிவரம் தான். தோற்றவர்களைப்பற்றி யாரும் எழுதுவதில்லை, ஏன் தோற்றார்கள் என்ற காரணத்தை யாரும் கதைப்பதில்லை. இங்கு உலகம் வென்றவரையும், அவரது புகழ், செல்வம் குறித்த கதைகளையுமே அதிகம் பேசுகிறது.


மென்பொருள் துறையில் கூகுல், முகநூல், கீச்சகம் போன்ற எல்லாமே ஒரு தனிநபரின் கனவிலிருந்து சாம்ராஜ்யமானவைகளே! ஆனால் அதற்கு ஈடான எத்தனை மென்பொருள்கள் வந்து போனதென்று தெரியுமா உங்களுக்கு? சந்தைக்கு வராமல் பாதியிலேயே நின்ற மென்பொருள்கள் எத்தனையென்று தெரியுமா? நல்ல திட்டங்களும், தீர்வுகளும் இருந்தும், சரியான முதலீட்டாளர் இல்லாமல் நசிந்துபோன நிறுவனங்கள் எத்தனை என்பது தெரியுமா? இது மென்பொருள் துறை என்று இல்லாமல், தேசத்தில் தொடங்கப்படும் எல்லா தொழில்களிலும் சாதாரணமாக காணக்கூடிய நிலைமையே! வெற்றியைக் குறித்த ஒரு மாயை மக்களிடம் இருக்கிறது. வியாபார களத்தின் யாதார்த்தம் குறித்த புரிந்துணர்வில்லாமல் களத்தில் குதித்து சேர்த்த செல்வத்தை இழப்பவர்கள் அதிகம். வியாபரம் மட்டுமல்லாது, பங்குச் சந்தையிலும் இப்படி நிறையபேர் வந்து இழந்திருக்கிறார்கள்.


வெற்றியைப் பற்றி அதிகம் பேசுவது ஒருவகையில் நம்பிக்கை அளிக்கும் விடயமானாலும், பல்லாயிரம் பேர் அதேபாணியில் முயன்று தோற்றுள்ளார்கள் என்ற விடயமும் மக்களுக்கு தெரிந்தால்தான், அந்த களத்தில் குதிப்பவருக்கு செய்யவேண்டியவை-செய்யக்கூடாதவைகள் குறித்த தெளிவு கிடைக்கும். வென்றவர்களுடன் மட்டுமே நேரம் செலவழித்து கற்பதில் எல்லாம் தெரிந்துவிடாது. ஒரு வெற்றியாளரிடம் கற்பதைப்போல, அந்த களத்தில் தோற்றவர்கள் சிலரிடமும் களத்தின் யதார்த்தம் குறித்து தெரிந்துகொள்வது முக்கியம்.


வென்றவர்களைக் காட்டிலும்

இங்கு தோற்று ஒதுங்கிய கூட்டம் மிகஅதிகம்;


வென்றவர்களிடன் செய்யக் கூடியவைகளையும்

தோற்றவர்களிடம் செய்யக்கூடாதவைகளையும்

கற்றுக் கொள்ள வேண்டும்;


வென்றவர்களின் கதைகளை மட்டும் நம்பி

களத்தில் குதித்து சிரமப்படாமல்

எழுதுவதற்கு ஆளில்லாமல் புதைக்கப்பட்ட

பல தோல்விகளின் கதைகளையும்

அவ்வப்போது அலசி படிப்பினைகளை பெறுவது

வெற்றிக்கு சிறந்த வழிகாட்டியாகும்!


- [ம.சு.கு 30.01.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page