“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-110
சுத்தம் சோறு போடும்!
கணினித்திரையில் நிறைய கோப்புகளை சேமித்து வைத்திருப்பார்கள். கணினியை திறந்ததும் கண் முன்னே 100-க்கும் மேற்பட்ட கோப்புகள் குவிந்திருக்கும். எல்லாவற்றையும் சீக்கிரம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், முன்பக்கத்திலேயே சேமித்து வைப்பார்கள். ஒரு குறிப்பிட்ட கோப்பை கேட்டால், குறைந்தது 5 நிமிடம் தேடி கண்டுபிடிப்பார்கள். அவரைத் தவிர, வேறெவராலும் அந்த கணினியில் குறிப்பிட்ட கோப்பை தேடி எடுத்து விட முடியாது. இப்படி ஒரு ஊழியர் வேலை செய்வதை, நீங்களொரு முதலாளியாய் ஏற்றுக்கொள்வீர்களா? ஜப்பானியர்கள் எதற்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்து அதை அவ்விடத்தில் வைத்து 5-10 நொடிகளுக்குள் எடுக்க வழிவகை செய்து ஒழுங்குபடுத்துகின்றனர். ஆனால் நாமோ புத்தகமானாலும், கோப்பானாலும், கண்கண்ணாடியானாலும், கடிதமானாலும், சர்வசாதாரணமாய் 10 நிமிடம் தேடுகிறோம்.
ஒரு சில வீடுகள் அருங்காட்சியகம் போல சுத்தமாகவும், அந்தந்த பொருட்கள் அதனதன் இடத்திலும் சரியாக வைக்கப்பட்டிருக்கும். சர்க்கரை எட்டாவது குடுவை என்று தொலைபேசியில் சொன்னால், சரியாக எட்டாவது குடுவை சர்க்கரையாக இருக்கும். இப்படி உரியதை உரிய இடத்தில் எப்போதுமே சரியாக வைத்தெடுக்கும் குடும்பங்கள் வெகுசில இருக்கின்றன. பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குறிப்பிட்ட நிற கைக்குட்டையை எடுத்து வர அந்த வீட்டு ஆடவரிடம் சொல்லுங்கள், முதலில் கைகுட்டை எங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று தேடுவதில் துவங்கி, குறைந்தது 5 நிமிடம் கழித்து அந்த குறிப்பிட்ட நிறக் கைக்குட்டை எடுப்பார். சில சமயம் கிடைக்காமலே கூட கைவிரிப்பார். எதையும் அதற்குரிய இடத்தில் உடனுக்குடன் வைக்கும் பழக்கம் குடும்பத்தில் பலருக்கு வருவதில்லை. விளைவு நாள் முழுவதும் ஏதாவது ஒன்றை யாராவது தேடிக் கொண்டே இருப்பார்கள்.
ஜப்பானியர்கள் “5S” என்ற ஒரு முறையை தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் கடைபிடிக்கின்றனர். நீங்கள் கையாளும் எந்த ஒரு பொருளானாலும், அந்தந்த பொருளுக்கு உரியதொரு இடத்தை நிர்ணயித்து, அதை அவ்விடத்தில் வைப்பதை அன்றாட கடமையாக வரையறுக்கின்றனர். அந்தப் பொருள் அதற்குரிய இடத்தில் இல்லாவிட்டால் பார்த்தவுடன் கண்டுபிடிக்கும் வண்ணம் குறியீடுகளை அமைக்கின்றனர். உத: கல்லாப்பெட்டியில் பணத்தை அப்படியே பலர் போடுவார்கள். அவ்வப்போது சில்லறை கொடுக்க ரூபாய் தாள்களை தேடுவார்கள். அதேசமயம், ரூபாய் தாள் வாரியாக சீராக அடுக்கி வைப்பவர்கள், சில்லறையை சரியாக நொடிப்பொழுதில் எடுத்துத் தருகின்றனர். அலுவலக கோப்புகளானாலும், மருந்துக்கடையானாலும், கல்லாப்பெட்டியானாலும், கணினி சேமிப்பானாலும், அந்தந்த பொருளை அதற்குரிய இடத்தில் வைத்து சுத்தப்படுத்தினால் மட்டுமே பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு எடுத்துப் பயன்படுத்துவதற்கும் எளிமையாக இருக்கும்.
சில வீடுகளில் சமையல் அறைக்குள் நுழைந்தால் உங்களால் சற்று நேரம் கூட தாக்கு பிடித்து நிற்கமுடியாது. அவ்வளவு அசுத்தமாகவும், சற்றே துர்நாற்றம் வீசும் வகையிலும் வைத்திருப்பார்கள். அதேசமயம், வெகுசில வீடுகளில் சமையலரையானது பளிங்கு கல்லை போல் சுத்தமாக இருக்கும். சமையலறை மட்டுமல்லாது, உடை வைக்கும் அலமாரிகள், கட்டில்-மெத்தைகள், மேசை இருக்கைகள், வீட்டிற்கு வெளியே விட்டிருக்கும் செருப்பு வரை எல்லாம் சீராகவும் சுத்தமாகவும் இருக்கும். அந்த வீட்டில் ஏதாவது ஒன்று கேட்டால், இந்த குறிப்பிட்ட அலமாரியில், இந்த வரிசையில், இது இருக்கும், என்று வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தெளிவாக சொல்வார்கள். உங்கள் வீட்டை எப்படி வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? இப்போது உங்கள் வீடு எப்படி இருக்கிறது?
என்ன இது வாழ்க்கையில் வெற்றி பெற யோசனைகள் குறித்து எழுதிக் கொண்டிருக்கும் தொடர்கட்டுரையில், திடீரென்று இடையில் வீட்டின் சுத்தம் பற்றி எழுதுகிறேன் என்று ஆச்சரியப்படாதீர்கள். வீட்டின் சுத்தம், வேலை செய்யும் தொழிற்சாலையின் சுத்தம், அலுவலகத்தின் சுத்தம்யாவும் வெற்றியின் அடித்தளங்களாகும்.
எந்த ஒரு செயலுக்கும் நேரம்தான் முக்கியம். 10 நிமிடத்தில் செய்யக்கூடியதை யாரொருவர் 5 நிமிடத்தில் சிறப்பாக செய்கிறாரோ, அவரால் மட்டுமே பெரிய வெற்றிகளை எளிதாக குவிக்க முடியும்.
குறைந்த நேரத்தில் செய்ய வேண்டுமானால் அதற்குத் தேவையானவை எல்லாம் அதற்குரிய இடத்தில் தயாராகவும், எடுப்பதற்கு எளிதாகவும் இருத்தல் அவசியம்; தேவைப்படும் பொருள், அதன் இடத்தில் எடுப்பதற்கு எளிதாக இருக்க வேண்டுமானால், அந்த இடம் முழுவதும் சுத்தமாகவும், சீராகவும் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்;
சுத்தம் தான் உங்கள் வெற்றியின் முதல் படி
நீங்கள் சுத்தமாக பல்துலக்காமல், குளிக்காமல் இருந்தால், உங்களின் அருகில் யார் வந்து பேசுவார்கள்? உங்கள் தொழிற்சாலை சுத்தமின்றி இருந்தால், யார் வந்து பொருட்களை வாங்குவார்கள்?
இன்று தொழிற்கூடங்களையும், அலுவலகங்களையும், சுத்தமாக வைப்பதற்கு, பயிற்சி வகுப்புகள் நிறைய நடக்கின்றன.
நீங்கள் வெற்றி பெற விரும்பினால்
செய்கின்ற வேலையை சிறப்பாகவும்
வேகமாகவும் செய்ய வேண்டும்;
வேகமாக செய்ய வேண்டுமானால்
செய்வதற்கு தேவையான எல்லாமும்
கைக்கெட்டும் தூரத்தில் தயாராக இருக்க வேண்டும்;
பொருள்கள் தீரத்தீர சரியாக நிரப்பப்பட வேண்டும்;
எடுத்ததை எடுத்த இடத்தில்
எல்லோரும் சரியாக வைக்க வேண்டும்;
சுத்தமும், ஒழுக்கமும், சீரான முறைமையும்
அன்றாட பழக்கவழக்கமானால்
செய்பவை எல்லாம் சரியாக இருக்கும்;
செய்பவை சரியானால்
வெற்றி எல்லோருக்கும் நிச்சயம் தானே!!
- [ம.சு.கு 27.01.2023]
Comments