top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-109 – முடிவதை முடிப்போம் முதலில்!"

அத்தியாயம்-109

முடிவதை முடிப்போம் முதலில்!


  • உங்களுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எழுதிய ஒரு புத்தகம் உங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு மட்டும் கிடைக்கப்பெறுகிறது. பல நூறு பக்கங்கள் கொண்ட புத்தகத்தை ஒரு மணி நேரத்தில் படிப்பது சாத்தியமில்லை. அந்த புத்தகத்தை ஒரு வாரத்திற்கு இரவல் கேட்டும், கிடைக்கவில்லை. கையில் புத்தகம் இருக்கும் ஒரு மணி நேரத்தில் வேகமாக எவ்வளவு படிக்க முடியுமோ அதை படிப்போம் என்று எண்ணுவீர்களா? (அல்லது) ஒரு மணி நேரத்தில் எதையும் படித்தறிய முடியாதென்பதால், ஏதும் படிக்காமல் வைத்துவிட்டு, வேறு ஏதேனும் வேலையை பார்க்கப் போவீர்களா? எது சரியான முடிவாக இருக்கும்?

  • மட்டைப் பந்தாட்டத்தின் கடைசி கட்டத்தில் ஒரு அணி வெற்றிபெற 6 பந்தில் 7 ஓட்டங்களை எடுக்க வேண்டும். பந்திக்கு ஒரு ஓட்டம் வீதம் எடுத்தால், குறைந்தபட்சம் சமன் செய்யலாம். கையில் இன்னும் 4 வீரர்கள் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள். இதுவரையில் 114 பந்துகளில் 140 ஓட்டங்களை குவித்த அந்த அணிக்கு, இந்த 7 ஓட்டங்கள் பெரிய சவாலாக தோன்றவில்லை. மறுபுறம் பந்து வீசும் அணி, சூழ்நிலைகள் சாதகமில்லாத பட்சத்திலும் நம்பிக்கையோடு போராடினர். ஒரு சுழற்றில் ஆறு ஓட்டங்களை குவித்து வெற்றியை எளிதாக பிடிக்க சாத்தியம் இருந்தபோதிலும், ஏனோ பந்துவீசிய அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றியை சுவைத்தது. ஏன் இந்த திடீர் திருப்பம்?

உங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை படிக்க சிறிது நேரம் மட்டுமே கிடைக்கிறது. நேரம் போதாது என்பதற்காக அதை தொடாமலே விடுவது நல்லதா (அல்லது) கிடைக்கும் நேரத்தில் முடிந்தவரை படிப்போம் என்று சிறிது படிப்பது நல்லது.

  • உங்களுக்கு பிடித்த எழுத்தாளரோடு உரையாட வெறும் 3 நிமிடம் வாய்ப்பு வருகிறது. அவரிடம் கேட்க உங்களுக்கு நூறு கேள்விகள் இருக்கிறது. பல மணிநேரம் பேச விரும்புகிறீர்கள். 3 நிமிடம் போதாதென்று கிடைக்கும் வாய்ப்பை வேண்டாம் என்று சொல்வீர்களா?

  • காலையில் பள்ளிக்குச் சென்றவுடன் ஆசிரியர் இன்று மதியம் 2 மணிக்கு குறிப்பிட்ட பாடத்தில் சோதனை தேர்வு என்று திடீர் அறிவிப்பு செய்கிறார். முன்னர் ஏதும் படித்திராததால், இருக்கின்ற 2-3 மணி நேரத்தில் எப்படியும் முழுதாய் படிக்க முடியாது, எதற்கு அரைகுறையாய் செய்துகொண்டு என்று ஒன்றையும் படிக்காமல் விளையாட சென்றுவிடுவீர்களா?

கிடைக்கின்ற 3 நிமிடங்களில் எழுத்தாளரின் பொன்னான ஓரிரு அறிவுரைகளை கேட்கலாம். அந்த 3 நிமிடத்தில் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவருடன் தொடர்பில் இருக்க வழிவகை செய்யலாம்.

சோதனைத் தேர்விற்கு உள்ள 2-3 மணி நேரத்தில் மேலோட்டமாக புத்தகத்தை திரும்பி நடத்தப்பட்ட பாடத்தினை முடிந்தவரை நினைவு கூறலாம். எதையும் படிக்காமல் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுப்பதைவிட, ஏதாவது ஒன்றிரண்டு பாடத்தைப் படித்து முடிந்தளவு மதிப்பெண் எடுக்க முயற்சிப்பது சிறந்ததுதானே!


மட்டைப்பந்தாட்டத்தில் கடைசியாக மட்டை பிடித்த அணி வெற்றி பெற வாய்ப்பு நன்றாக இருந்தது. இருந்தாலும் பந்து வீசிய அணி வென்றது. அந்த அணியின் தலைவரிடம் பேட்டி கண்டபோது, அவர் இப்படி சொன்னார் “ஆட்டம் எங்கள் கைகளை மீறிவிட்டது என்று நினைத்தோம். ஆனால் எங்கள் பயிற்சியாளர் சொன்னார், 6 பந்துகள் என்பதை மறந்துவிட்டு, ஒவ்வொரு பந்தாக திட்டமிட்டு தாக்குதல் ஆட்டத்தை ஆடச்சொன்னார். நாங்கள் 11 பேரும் மீதமுள்ள பந்துகள் குறித்து எண்ணுவதை தவிர்த்து, அப்போதைக்கு வீசப்படும் பந்தில் ஒரு ஓட்டம் கூட கொடுக்காமல் எப்படி கட்டுப்படுத்தவதென்று திட்டமிட்டு போராடினோம்”. முதல் இரண்டு பந்தில் எதிரணியால் ஓட்டங்களை எடுக்க முடியாமல் போகவே, இப்போது போட்டியின் அழுத்தம் மட்டை பிடிக்கும் அணிக்கு அதிகரித்தது. அவசரகதியில் ஓரிரு தவறுகளை அவர்கள் செய்தனர். பந்து வீசிய அணி, அப்போதைய சூழ்நிலையில் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அப்போதைய ஒவ்வொரு பந்தை மட்டுமே குறிவைத்து தங்கள் கூட்டு முயற்சியில் முழுத்திறனை வெளிப்படுத்தினர். இறுதியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றனர்.

  • எந்த போட்டியும் சவாலானது தான்; எதிராளி மிகப்பெரிய வீரராக இருக்கலாம்; ஆட்டம் உங்கள் கைகளை மீறிப்போகும் சூழலில் இருக்கலாம்; மனம் தளர்ந்தால் முற்றிலுமாய் இழக்க நேரிடும்;

  • மொத்த சூழ்நிலையை பார்த்தால், உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று தோன்றும்; மொத்தமாய் பார்க்காமல், ஒவ்வொரு பகுதியாய் பிரித்துப் பாருங்கள். இருக்கும் சூழ்நிலையில் உங்களால் கட்டுப்படுத்தக்கூடியது எது என்று கவனித்து கட்டுப்படுத்துங்கள்;

  • உங்களால் கட்டுப்படுத்த முடிந்தவற்றை ஒவ்வொன்றாக உங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால், மீதமுள்ள சிக்கல்கள் சிறிதாகிவிடும். 60%-70% சூழ்நிலையையும், செயலையும் கட்டுப்படுத்தி விட்டால், ஏனையவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழி தானே தென்படும்;

  • பிரச்சனை மலைபோல் இருக்கிறது என்று பயந்து, ஒன்றும் செய்யாமல் இருந்தால், எல்லாமே அப்படியேதான் இருக்கும். இருக்கின்ற பிரச்சினையில், எதை உங்களால் முதலில் சரி செய்ய முடியுமோ, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், ஒவ்வொன்றாய் சரி செய்யத் துவங்குங்கள். படிப்படியாய் எல்லாம் சீரடைந்து உங்கள் கட்டுப்பாட்டிற்குள் எல்லாம் வரும்.

படிப்பு, விளையாட்டு, அலுவல்பணி, போரென்று,

களமும் காரியமும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்;

செய்ய வேண்டிய வேலைகளும் பிரச்சனைகளும்

மலையென குவியலாம்;


சாதிக்க வேண்டுமானால்

தைரியமாய் முதலடியை எடுத்து வைக்க வேண்டும்;

செய்ய முடிந்தவற்றை ஒவ்வொன்றாய் செய்து முடிக்க வேண்டும்;

மீதமுள்ளவற்றிற்கான வழி தானாய் தென்படும்;


தெரியாதவற்றை மட்டுமே முன்னிலைப்படுத்தி

என்னால் முடியாது என்று ஒதுங்கி விட்டாள் எதுவுமே நடக்காது.


முன்னிருக்கும் சவாலில் உங்களால்

முடிந்ததை முதலில் முடிப்பது மட்டுமே உங்களின் முதலாயப் பணி;

ஏனையவை தானே பின் தொடரும்.


- [ம.சு.கு 26.01.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page