top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-108 – மூளையை நிறைய கசக்குங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-108

மூளையை நிறைய கசக்குங்கள்!


  • பள்ளியில் பயில்கின்ற மாணவர்களுக்கிடையே கற்றல் திறனில் எண்ணற்ற வேறுபாட்டை நாம் பார்க்கிறோம். ஒரு சில மாணவர்கள் பாடங்களை அப்படியே மனனம் செய்து ஒப்புவிக்கின்றனர். ஒரு சிலருக்கு செய்யுளை நினைவுகூறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. அதேசமயம், நன்றாக மனனம் செய்து ஒப்புவித்த மாணவனிடம், அதே பாடத்தை / செய்யுளை ஓராண்டு கழித்து கேளுங்கள், அந்த மாணவனால் பாதியளவே நினைவு கூற முடிகிறது. நன்றாய் படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும், ஏன் அந்த செய்யுள் காலப்போக்கில் மறந்து போகிறது? கணிதபாடத்தில் தோல்வியடைந்த மாணவன், தன் தந்தையோடு மளிகை கடையில் வேலை செய்ய ஆரம்பித்து 2-3 மாதங்களில், கூட்டல்-கழித்தலில் அதிவேகம் காட்டினான். தன் சாகமானவர்களை விட வேகமாக கூட்டல்-கழித்தல் செய்ய இப்போது எப்படி அவனால் முடிகிறது?

  • 20 ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் எத்தனை தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருந்தீர்கள் இன்று உங்கள் நினைவில் எத்தனை தொலைபேசி எண்கள் இருக்கின்றன. 50-க்கும் மேற்பட்ட எண்களை நினைவில் வைத்திருந்த உங்களுக்கு ஏன் இன்று 5 எண்களை கூட ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை? உங்கள் நண்பர்கள், சக ஊழியர்கள் சிலர் நாளிதழ்களில் வரும் குறுக்கெழுத்துப் போட்டி, சுடொகு, விடுகதைகளை ஆர்வமாக செய்வதை கண்டிருப்பீர்கள். கல்வியறிவில் உங்களுக்கு சமமானவர்களாகவே அவர்கள் இருந்தாலும், சில சிக்கலான பிரச்சனைகளில், உங்களின் அணுகுமுறையும் அவர்களின் அணுகுமுறையிலும் உள்ள வேறுபாட்டை கவனித்திருக்கிறீர்களா?

அன்றாட பாடங்களை படிக்கும் மாணவருக்கு அது நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த வகுப்பினை கடந்து அடுத்த வகுப்புக்கு சென்றபின், பழைய பாடங்களைக் குறித்து சிந்திக்காததால், நாளடைவில் அது நினைவில் இருந்து அழியத்துவங்குகிறது. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பாடத்தை / செய்யுளை வாசித்து வருபவருக்கு அந்தப் செய்யுள் காலத்திற்கும் நினைவில் இருக்கிறது. கணிதத்தில் தேறாதவர்கூட, கடையில் 10 நிமிடத்திற்கு ஒருமுறை கூட்டல் கணக்கை போட ஆரம்பித்ததும், மெதுமெதுவாய் பழகிப்போய் கணிதத்தில் வேகம் வந்துவிடுகிறது. அன்றாட பயிற்சியினால், ஒற்றை இலக்க எண்களை கையாள்வது தாண்டி, இரண்டிலக்க எண்களாக கூட்டும் அளவிற்கு வேகம் வளருகிறது.


உங்கள் மூளை எந்த அளவிற்கு பயிற்சி எடுக்கிறதோ, அந்த அளவுக்கு சிறப்பாகவும், வேகமாகவும் செயல்படுகிறது. உங்களுக்கு பரிட்சயமான ஒருவிடயத்தை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டால், காலப்போக்கில் அது உங்கள் நினைவுகளில் இருந்து மறைந்துவிடுகிறது. 10 ஆண்டுகள் தினம் தவறாமல் பள்ளியில் சொன்ன காலை வணக்கப் பாடலை, இன்று உங்களில் எத்தனை பேரால் நினைவு கூற முடியும்.


கைபேசியில் எண்களை சேமித்து பயன்படுத்த துவங்கியதும், எண்களை மூளையில் சேமிப்பதை விட்டு விட்டோம். விளைவு கைபேசி இல்லாமல், யாருடைய எண்னையும் சொல்ல முடியாத நிலை. கணிதத்தில் புலியாக ஒரு சமயத்தில் இருந்திருப்பீர்கள், கணக்கு இயந்திரங்களை பயன்படுத்தத் துவங்கிய பின், சின்ன சின்ன கூட்டல்-கழித்தலுக்கும் உங்களில் எத்தனை பேர் இயந்திரத்தின் உதவியை நாடுகிறீர்கள்?


எப்படி நம் உடலை ஆரோக்கியமாக வைக்க சீரான உறக்கமும், அன்றாட உடற்பயிற்சியும் முக்கியமோ, அதேபோல உங்களின் மூளைக்கும் குறிப்பிட்ட நேர ஒய்வும், தொடர்ந்த பயிற்சியும் கட்டாயத் தேவையாகிறது. எவ்வளவுக்கெவ்வளவு கடுமையான பயிற்சிகளை உங்கள் மூளைக்கு கொடுக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் மூளையின் ஆற்றலும், நினைவுத்திறனும், பகுத்தாயும் ஆற்றலும், சிக்கலுக்கு தீர்வு காணும் ஆற்றலும், வளம்பெறும். உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனிப்பது போல, உங்கள் மூளையின் ஆற்றலை வளர்க்க, சிந்தனை திறனை பெருக்க,

  • நிறைய புத்தகங்களைத் தொடர்ந்து வாசியுங்கள்; பயனுள்ளவற்றை ஒன்றுக்கிரண்டு முறை வாசிப்பது சாலச் சிறந்தது;

  • சின்ன சின்ன கணக்குகளுக்கு, இயந்திர உதவியை நாடாமல் மனதில் போடுங்கள்;

  • விளையாட்டுக்காகவாவது பல விடுகதைகளை கேளுங்கள், பதில் கண்டுபிடிங்கள்;

  • சதுரங்கம் போன்ற திட்டமிடும் முலோபாய விளையாட்டுக்களை நிறைய விளையாடுங்கள்;

  • நீங்கள் மனனம் செய்ததை, குறிப்பிட்ட இடைவெளியில் திரும்ப நினைவு கூறுங்கள்;

  • உங்களுக்கு தேவையான 100 தொலைபேசி எண்களை நினைவில் வைத்து உபயோகியுங்கள்;

உங்கள் மூளையை பயிற்றுவித்தால் எண்கள் எல்லாம் விரல் நுனியில் விளையாடும். பயிற்சி எடுக்காமல் இருந்தால் சாதாரண கூட்டல்-கழித்தல்களுக்கும் திணற வேண்டிவரும்.


ஒவ்வொரு தனி மனிதனுக்கும், அவனுடையதென்று இருக்கும் ஒரே சொத்து, அவனது மூளையும், சிந்தனை திறனுமே. ஏனையவை யாவும் வந்துபோகின்றவையே. இந்த மூளையின் திறனை, சிந்தனை ஆற்றலை சிறப்பாக பயன்படுத்துவது அவரவர் கையில்;


பயிற்சியின் மூலம் உடல் வலுப்பெருவதுபோல

பயிற்சியின் மூலமே மூளையின் ஆற்றலும் வலுப்பெறும்;


கற்றவை நினைவில் நிலைத்திருக்க

எண்கள் விரல் நுனியில் விளையாட

மூளைக்கு தொடர்ந்து பயிற்சி கொடுங்கள்;


தன்னம்பிக்கை எண்ணங்களும்

ஆக்கபூர்வமான சிந்தனைகளும் நிறைந்து

மூளை தொடர்ந்து பயிற்றுவிக்கப்பட்டால்

புகைப்பட நினைவாற்றலும், மூலோபாய சிந்தனைகளும்

எளிதில் உங்களுக்கு வசப்படும்!


- [ம.சு.கு 25.01.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Commentaires


Post: Blog2 Post
bottom of page