“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-106
யாரும் நிரந்தர பலவீனமானவர்களல்ல!
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது, அதில் சிறப்பாக விளையாட போதுமான பயிற்சியை எடுத்துக் கொண்டிருந்தாலும், எதிர் போட்டியாளர் யார் என்பதை அறிந்து, அவரது பலம்-பலவீனம் குறித்து அலசி, உங்களை மேலும் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஒவ்வொரு பயிற்சியாளரும் கற்றுக் கொடுக்கிறார்கள். எவ்வளவுதான் தயாராகி இருந்தாலும், களத்தில் இருக்கும் வீரருக்கு வரும் ஒரு சிறு குழப்பம் - போட்டியில் தன்னுடைய பலத்தை பிரதானப்படுத்தி விளையாடுவதா? (அல்லது) எதிராளியின் பலவீனத்தைக் குறிவைத்து விளையாடுவதா? என்பது. இந்தக் கேள்விக்கான பதில் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் என்பது எல்லோரும் அறிந்ததே! இருந்தாலும், களத்தில் நிற்கும் ஒவ்வொரு வீரரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று, எதிராளியின் பலவீனம் என்று நாம் கருதியது எப்போது வேண்டுமானாலும் மாறலாம்! பயிற்சியின் மூலம், அந்த பலவீனத்தையே அவர்களின் பலமாக மாற்றிய இருக்கவும் வாய்ப்பிருக்கிறது அல்லவா?
அதிகபோட்டி நிலவும் ஒரு வியாபாரத்தில், புதிதாய் கடைதிறக்கும் ஒருவர், ஆரம்பத்தில் விலைகளை குறைத்துவிற்றால் நிறைய வாடிக்கையாளர்களை ஈர்க்கலாமென்று கணக்கு போட்டார். மற்ற கடைக்காரர்களின் அதிக விலையை, அவர்களது பலவீனமாக கருதினார். நடைமுறையில், இவர் 10% குறைத்த அடுத்த நாளே, மற்ற கடைக்காரர்களும் சுதாரித்துக் கொண்டு 10% விலையை குறைத்து விட்டனர். இவர் பலம்-பலவீனம் என்று கணக்கிட்டது, கடைசியில் ஒன்றுமில்லாமல் போனது. ஓரிரு மாதங்கள் எல்லாருமே 10% குறைந்த விலையில் விற்றனர். எல்லா வியாபாரிகளுக்குமே நஷ்டம் தான். புதியதாய் தொடங்கியவர், மூன்று மாதங்களில் தன் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லாத காரணத்தால், வியாபாரத்தை விட்டு விலகினார். இப்போது பழைய வியாபாரிகள், தங்களின் வழக்கமான பழைய விலைக்கு திரும்பினார்கள்.
எந்த ஒரு விளையாட்டிலும், உங்களுடைய பலம்-பலவீனங்களை அறிந்து, பயிற்சியை மேம்படுத்தி, உங்களின் எல்லா பலவீனங்களையும் மாற்றியமைக்க முயற்சிப்பீர்கள். இதே முயற்சியை மற்ற போட்டியாளர்களும் தொடர்ந்து செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறதல்லவா! சென்ற ஆண்டு போட்டியில் ஒரு குறிப்பிட்ட அணி சுழற்பந்து வீச்சில் திணறியதை அறிந்து, நீங்கள் அந்த அணிக்கு எதிராக சுழற் பந்துவீச்சாளர்களை அதிகம் வைத்து களம் இறங்க திட்டமிடலாம். ஒருவேளை கடந்த ஓராண்டில் அவர்கள் அந்த சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள அதிக பயிற்சி எடுத்து அதை பலமாக மாற்றி இருந்தால்?
விளையாட்டில் யாருடைய பலவீனமும் நிரந்தரமல்ல. நீங்கள் எதிராளியின் பலவீனத்தை இனங்கண்டு, அதைப் பயன்படுத்தி ஒருமுறை வெல்லலாம். அந்த பலவீனத்தை புரிந்த வீரர், கட்டாயம் அடுத்த முறை அதை சரி செய்திருப்பார். பழைய நிலையைக் கருத்தில் கொண்டு களம் கண்டால், நீங்கள் தான் திண்டாட நேரிடும்.
வியாபாரத்தில் நீங்கள் புதிய யுத்திகளை புகுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சிக்கலாம். அதே யுத்தியை போட்டியாளர்களும் உடனுக்குடன் அமைத்துக் கொள்ளக் கூடும். நீங்கள் ஒரு ரூபாய் விலை குறைத்தால், அவர்கள் ஒன்றுக்கு இரண்டாக குறைத்துக் கொடுத்தால், இருவருக்குமே நஷ்டம் தான். விலை குறைப்பது ஒரு போட்டி முறை என்றாலும், அதனால் உங்களுக்கும் நஷ்டமே. விலையில் போட்டியிடுவதற்கு பதிலாக, வாடிக்கையாளர் சேவை தரத்தில் உங்களை பலப்படுத்தி, வாடிக்கையாளர்களின் வரவேற்பை படிப்படியாக அதிக படுத்தினால், உங்கள் வியாபாரம் கட்டாயம் அதிகரிக்கும்.
எல்லா இடங்களிலும் எதிராளியின் பலவீனத்தை மட்டுமே குறிவைத்து போட்டி போடுவது வெற்றியைத் தந்துவிடாது. சில இடங்களில் அந்த பலவீனங்களே நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்ட தருணங்களில், உங்கள் பலத்தின் மீது அதிக கவனம் செலுத்தி களம் காண வேண்டும். உங்களுக்கு நன்கு வரக்கூடிய விடயங்களில் மேலும் கவனம் செலுத்துவது, உங்களுக்கு கூடுதல் பலம். ஏனெனில், அதில் எந்த ஒரு சவாலையும் உங்களால் திறம்பட சமாளிக்க முடியும். வாடிக்கையாளர் சேவை உங்கள் வியாபாரத்தின் பலம் என்றால், அதை முன்னிறுத்தி விளம்பரப்படுத்துங்கள். தரமான சேவை என்றென்றும் வாடிக்கையாளர்களை நிரந்தரமாக உங்கள் பக்கம் படிப்படியாய் வரவழைக்கும்.
பண்டைய போர்முறையில், ஒரு வீரன் தன் பலத்தை பிரதானப்படுத்தி போர் புரிவதுதான் வீரம். எதிராளியின் பலவீனத்தில் தாக்குவது கோழைத்தனம். ஆனால் காலம் மாறிவிட்டது. இன்று எதிரியின் பலவீனத்தை அறிந்து தாக்குவது சாதுரியம் என்றாகிவிட்டது. எதிரியின் பலவீனம் நமக்குத் தெரிந்தால் நாம் பயன்படுத்தி வெல்ல முயற்சிப்போம். ஒன்றை மறந்துவிடாதீர்கள் – அந்த பலவீனத்தை எதிராளியும் உணர்ந்து மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது, ஜாக்கிரதை! யாரும் நிரந்தரமாய் பலவீனமானவர்கள் இல்லை! பலவீனமானவர்கள் என்று கருதப்பட்ட கூட்டமும் ஒருநாள் பொங்கியெழுந்து புரட்சி செய்த வரலாறுகள் நிறைய உண்டு.
வீரனாய் பலத்தை முன்னிறுத்தி போரிடலாம்;
சாதுரியமாய் எதிராளியின் பலவீனத்தில் தாக்கலாம்;
சூழ்நிலைகள் எப்போது வேண்டுமானாலும் மாறும்;
உங்கள் பலவீனத்தில் எதிராளியும் தாக்கலாம்;
எப்போதும் எதிராளியின் பலவீனத்தை
குறைத்து எடை போட்டுவிடாதீர்கள்;
அது எப்போது வேண்டுமானாலும்
பலமாக மாற்றப்பட்டிருக்கலாம்;
எதிராளியின் பலவீனத்தை விட
உங்களின் பலத்தை நம்பி
களம் காண்பதில் தான்
வெற்றிக்கான வாய்ப்பதிகம்;
- [ம.சு.கு 23.01.2023]
Bình luận