top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-105 – மூன்றாம் நபரின் பார்வையில்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-105

மூன்றாம் நபரின் பார்வையில்!


  • வியாபார நிமித்தமாக ஒரு வாடிக்கையாளரை சந்திக்க குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதாக நீங்கள் ஒத்துக் கொண்டிருந்தீர்கள். வேறொரு வாடிக்கையாளர் சந்திப்பில் சிறிது தாமதமாகிவிட்ட காரணத்தினால், உங்கள் வாகனத்தை சற்று வேகமாக ஓட்டிச் செல்கிறீர்கள். தாமதமாகிவிட்ட சிந்தனையில், போக்குவரத்துக் குறியீடு (சிக்னல்) சிவப்பாக மாறியதை கவனிக்காமல், வெள்ளைக்கோட்டை கடந்து விடுகிறீர்கள். அனுகுசாலையில் இருந்து வந்த வாகனம் மோதி, சிறிய விபத்து நிகழ்ந்துவிடுகிறது. விபத்தின் காரணமாக, உங்களின் அவசர பயணம் அரைமணி நேரம் தாமதப்படுகிறது. அந்த சம்பவத்தை கண்டவர்களெல்லாம், எதற்கு இவ்வளவு வேகமாக வாகனத்தை ஓட்ட வேண்டும்? அப்படி என்ன அவசரம்? என்ன குடியா மூழ்கி போனது? என்று பேசுகிறார்கள். இந்த கேள்விகளுக்கு உங்களிடம் விடை இருக்குமா?

  • உங்கள் குடும்பத்தில் சொத்து தகராறில் பிரச்சனை முற்றுகிறது. சகோதர-சகோதரிகளுக்கு இடையிலும், பெற்றோருடனும் கடுமையான வாக்குவாதங்கள் வருகின்றன. சகோதர-சகோதரிகள் எல்லோரும், அவரவர்களுக்கு சற்று கூடுதலான சலுகை வேண்டும் என்று ஆளுக்கொரு காரணத்துடன் வாதிடுகிறார்கள். ஆளாளுக்கு ஒரு நியாயம் வைத்துக்கொண்டு பிடிவாதமாக இருப்பதால், பெற்றோர்களும் சமாதானம் செய்ய முடியாமல் திணறுகிறார்கள். நிலைமை நாளுக்கு நாள் மோசம் அடைவதும், உறவுகளுக்குள் விரிசல் அதிகரிப்பதும் கண்கூட தெரிகிறது. ஒரு கட்டத்தில் யாரும் விட்டுக்கொடுக்க முன்வராத்தால், இந்த சொத்துப்பிரச்சனை தீராது என்பதை உணர்ந்து, உங்கள் உறவுகளுக்குள்ளும், உங்கள் ஊரிலும் உள்ள பெரியவர்கள் சிலரை வைத்து பஞ்சாயத்து பேசி பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. எல்லாம் முடிந்து சமரசமான பின், சற்று யோசித்துப் பார்த்தால், ஆரம்பத்தில் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த எல்லாரும், ஒவ்வொன்றை விட்டுக் கொடுத்திருப்பார்கள். அது ஏன் பஞ்சாயத்தார் பேசுகையில் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சமரசமாகிறது?

ஏதோ சில காரணங்களால் நீங்கள் புறப்படுவது தாமதமானது. அதை சரிகட்ட வேகமாக வாகனத்தை ஓட்டுகிறீர்கள். உங்களைப் பொருத்தமட்டில் அது சரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் தனிநபரல்ல. போக்குவரத்து விதிகளை மீறி நீங்கள் அதிவேகமாக செல்வது, சமுதாயத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு சம்பந்தமே இல்லாத மூன்றாவது நபர் பாதிக்கப்படக்கூடும். ஒரு நிமிடம் உங்களால் பாதிக்கப்பட்ட அந்த மூன்றாவது நபரின் கண்ணோட்டத்தில் பாருங்கள். ஒரு வேலை உங்களின் அஜாக்கிரதையினால் அவருக்கு நிரந்தர இழப்பு ஏற்பட்டிருந்தால், அவற்றை உங்களால் ஈடு செய்ய முடியுமா?


உடன்பிறப்புகளுக்குள் விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை. தேவையில்லாத சண்டை சச்சரவுகள் வளர்கின்றன. உங்களுடைய தனிப்பட்ட தேவை என்றவொரு கண்ணோட்டத்தில் மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள். அது உங்களுக்கு நியாயமாக தோன்றலாம். ஒரு நிமிடம் உங்கள் பெற்றோரின் கண்ணோட்டத்திலிருந்து பாருங்கள். உங்கள் சகோதர-சகோதரிகளின் கண்ணோட்டத்தில் இருந்து யோசியுங்கள். யாருக்கு அவசரமும்-அவசியமுமான தேவையென்பதை பாருங்கள். கடைசியில் பஞ்சாயத்தார் வந்து சொல்லுவதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள், முன்னரே ஏன் அந்த விட்டுக்கொடுத்தலை செய்யவில்லை. நீங்களாக எல்லோருக்குமான பொது கண்ணோட்டத்தில் பார்த்து விட்டுக்கொடுத்திருந்தால், குறைந்தபட்சம் உங்களை பெருந்தன்மையானவரென்று மதித்திருப்பார்கள் அல்லவா? உண்மையில், உங்கள் குடும்பப் பிரச்சனை, சொத்து பிரச்சனையானது, சமுதாயத்தின் பார்வையிலும், ஒரு மூன்றாம் நபரின் பார்வையிலும் ஒரு பிரச்சனையே இல்லை.


மிக நுண்ணிய கணக்கீடுகளுக்குள் சென்று இலாப-நட்டங்களை பைசா அளவில் பார்க்காமல், பெருந்தன்மையோடு அந்த பிரச்சினையை பார்த்தால், அவற்றிற்கான தீர்வுகள் எல்லோராலும் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படும். அந்தப் பிரச்சனைகள் யாவும் சாதாரண விட்டுக் கொடுத்ததில் எளிதாக தீர்ந்துவிடும் என்பது பஞ்சாயத்தாருக்கும், ஒரு மூன்றாவது நபருக்கும் தெரிவது, ஏனோ முதல்கட்டத்தில் அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவதில்லை.


உங்களிடம் ஆயிரம் நியாயமான காரணங்கள் இருக்கலாம். அதேசமயம், உங்கள் எதிரியிடமும் சமமாக காரணங்கள் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் சரியாக இருக்கலாம். உங்களோடு வாதிடுபவரும் சரியாக இருக்கலாம். இரண்டையும் தாண்டி சரியானது வேறொன்றாகவும் இருக்கக்கூடும். உங்கள் கண்ணோட்டமும், கருத்துக்களுமே சரியானதென்றும், முழுமையென்றும் பிடிவாதமாய் நின்றுவிடாதீர்கள்.

  • எல்லா பிரச்சனைகளையும் அதனுள் மூழ்கி விடைதேட நீங்கள் முயற்சிக்கிறீர்கள். பிரச்சனைகளுக்கு உள்ளிருந்து விடை பிறப்பது கடினம். பிரச்சனைகளை வெளியில் இருந்து பார்த்தால் மட்டுமே, அந்தப் பிரச்சினைகளுக்கான காரணமும், தீர்ப்பதற்கான வழியும் தெளிவாக புலப்படும்;

  • எதையும் ஒரு கணம் கழுகு பார்வையில் பாருங்கள்; அந்தப் பிரச்சனையின் அளவு சிறிதென்பதை உணர்வீர்கள்;

  • பிரச்சனை இருவருக்கிடையில் இருக்கும். ஆனால் மூன்றாம் நபர் அதை எப்படி பார்ப்பார் என்று ஒரு நிமிடம் யோசித்தால், அந்த பிரச்சனையை தொடர வேண்டுமா? [அல்லது] விலக வேண்டுமா? [அல்லது] சமரசம் செய்து முடிக்க வேண்டுமா? என்பது குறித்து உங்களால் தெளிவாக முடிவெடுக்க முடியும்.

யதார்த்தத்தில் பிரச்சனையல்ல உங்களின் பிரச்சனை;

அதைப் பார்க்கும் கோணமும்

அணுகும் முறையுமே உங்களின் முக்கியமான பிரச்சனை;

கழுகு பார்வையில் ஒரு கண்ணோட்டம் விடுங்கள்;

மூன்றாம் நபராய் அவற்றை அனுகிப்பாருங்கள்;

எல்லா பிரச்சினைகளும் பிரச்சனை இல்லாமல் கரைந்து போக

ஆயிரம் வழிகளை நீங்களே கண்டுணர்வீர்கள்


- [ம.சு.கு 22.01.2023]

Recent Posts

See All

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page