top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-104 – நடந்தது நடந்து விட்டது! அடுத்து என்ன?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-104

நடந்தது நடந்துவிட்டது! அடுத்து என்ன?


  • மிகவும் பிடித்தமான ஒரு குறிப்பிட்ட பீங்கான் குவளையில் தேநீர் அருந்துவது உங்களுக்கு வழக்கம். பல நாட்களாக பத்திரமாக அதை பயன்படுத்தி வருகிறீர்கள். ஒரு நாள் உங்கள் பிள்ளையிடம் அதை எடுத்து வரச் சொல்கிறீர்கள். அவர்கள் எதேச்சையாக அதை கீழே போட்டு உடைத்து விடுகிறார்கள்! அதித கோபத்தில், பிள்ளையை சற்று அடித்து விடுகிறீர்கள். அடுத்தடுத்து வரும் நாட்களில், ஒவ்வொரு முறை தேநீர் அருந்தும் போதும், அந்த குவளை ஞாபகம் வருகிறது. ஆனால் உடைந்தது உடைந்ததுதான்! திரும்பத்திரும்ப பிள்ளையை திட்டுவதில் பயனேதுமிருக்கிறதா?

  • வியாபாரத்தில் ஒரு குறிப்பிட்ட பொருள் தயாரிப்பில் உங்கள் ஊழியர்கள் பெரிய தவறு செய்து விடுகிறார்கள். அதனால் அந்த பொருள் முற்றிலும் வீணாகி மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. அதனால் வியாபாரத்தையே இழுத்து மூட வேண்டிய சூழ்நிலை வருகிறது. நஷ்டத்தைப் பற்றி அறிந்ததும், முதற்கண் அதை ஏற்படுத்திய ஊழியரை அதிகபட்சம் வேலையை விட்டு நீங்கள் அனுப்பலாம். ஆனால் அது இறுதி தீர்வா? உங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக நிற்கும் சூழ்நிலையில், அடுத்தடுத்த நாட்களில் அதையே நினைத்து வருந்து கொண்டிருக்காமல், ஏற்பட்டுள்ள நஷ்டத்தை குறைக்க, மாற்று வழிகள் என்ன? சூழ்நிலையை சமாளித்து வியாபாரத்தை எப்படி தக்க வைப்பது? இழப்புக்களை எப்படி ஈடுசெய்வது? என்று யோசிக்கத் துவங்கினால்தான், ஏதாவதொரு வழி தோன்றும்.

உங்கள் பிள்ளைகள் அவ்வப்போது அஜாக்கிரதையினால் சிலபல தவறுகளை செய்வது இயல்பு. முக்கியமான பொருள்களை உடைக்கக்கூடும்! செய்யச் சொன்ன முக்கியமான வேலையை மறந்துவிட்டிருக்கக் கூடும்! நீங்கள் இல்லாத போது வாகனத்தை எடுத்து ஓட்டி கீழேவிழுந்து சேதப்படுத்தியிருக்கக்கூடும்! அவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்க, அவர்களை சற்று திட்டலாம்! அடிக்கலாம்! அவற்றைத் தாண்டி என்ன செய்ய முடியும்? நடந்தது நடந்தது தான். இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள என்ன செய்யவேண்டுமென்று யோசிக்க வேண்டும். தவறுகளை, இழப்புக்களை தடுக்க, எதை, எப்படி பொறுமையாய் கையாள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கலாம். அவ்வப்போது அவர்கள் செய்யும் காரியத்தில் என்ன தவறு நேரக்கூடும்? அதை ஜாக்கிரதையாக எப்படி கவனிக்க வேண்டும்? என்று அறிவுரை சொல்லலாம். குழந்தைகளுக்கு படிப்படியாய் சொல்லிக்கொடுத்து புரியவைக்க வேண்டியது பெரியவர்களின் கடமை.


மறுபுறம், பெரியவர்கள் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில இழப்புக்களும், தோல்விகளும் அவர்களுக்கும் வருகிறது. ஏதேனும் விபத்தில் அன்பிற்குரியவரை இழந்துவிட, அதனால் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டதாக நினைத்து அவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் வரக்கூடும். ஒரு சில பிள்ளைகள் 10-12-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததற்காக, மனவிரக்தியடைந்து தற்கொலைக்கு முயற்சிக்கக்கூடும். இந்த தோல்விகளுக்கும், இழப்புக்களுக்கும் தற்கொலை தான் தீர்வா? கடன் தொல்லை, துணைவர் இறந்துவிட்டார், தேர்வில் தோற்றுவிட்டேன், காதலில் தோற்றுவிட்டேன், என்ற காரணங்கள் எல்லாம் உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு பெரிய காரணங்களா?


வியாபாரத்தில் சில நஷ்டங்கள் வருவது இயல்பு. துரதிஷ்டவசமாக அவற்றில் ஏதேனுமொன்று மிகப்பெரிய நஷ்டங்களாக இருந்து, வியாபாரத்தையே முற்றிலுமாக இழக்க வேண்டிய சூழலும் வரலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்வந்த கொரோனா பெருந்தொற்றினால், நீண்ட ஊரடங்குகள் வந்தது. சிலரின் தொழில் முற்றிலுமாய் முடங்கியது. பல மாதங்களுக்கு வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டது. கொரோனா போன்ற சூழ்நிலைகளை யாரும் கணித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் வந்துவிட்டது; வியாபாரம் கெட்டுவிட்டது; இனி வருந்திக் கொண்டிருப்பதில் என்ன பயன்? அடுத்து என்ன செய்வதென்று யோசித்தவர்களுக்கு, ஏதாவதொரு வழி பிடிபட்டது. நடைபாதை கடைக்காரர்கள் பலர், வீடுவீடாகச் சென்று காய்கறி விற்று வருவாயீட்டினார்கள். பல அலுவலகங்கள், வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை அறிமுகம் செய்து வெற்றிகண்டனர். அப்போதைய இக்கட்டான காலகட்டத்தில் எது சாத்தியமாகக் கூடியதோ, அவற்றில் ஏதேனுமொன்றை செய்து கடினமான சூழ்நிலைகளை கடந்து வர வேண்டியதுதான். நடந்த இழப்புக்களை மட்டுமே யோசித்துக் கொண்டிருப்பதில் பயனேதுமில்லை.


சேர்த்த செல்வங்களை இழக்கலாம்;

அன்பு கொண்டு சொந்தங்களை இழக்கலாம்;

நம்பியவர்களால் ஏமாற்றப்படலாம்;

துரோகிகளால் முதுகில் குத்தப்படலாம்;

செய்த / செய்யாத குற்றங்களுக்காக தண்டிக்கப்படலாம்;


இவையாவும் உங்களுக்குத்

தெரிந்தே நடந்திருக்கலாம் – அல்லது

தெரியாமலே நடந்திருக்கலாம் – அல்லது

உங்களது கட்டுப்பாடுகளை மீறி நடந்திருக்கலாம்;

எப்படி நடந்திருந்தாலும் இழப்பு இழப்புதான்;


இந்த இழப்புகளைக் கண்டு மனவேதனை கொள்வது மனித இயல்புதான். ஓரிரு நாள் யோசித்து, அழுதுவிட்டு, எழுந்து அடுத்த வேலைக்குப் போனால்தான் மனித வாழ்க்கை நகரும். [“ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ” என்ற இயற்கை விதி எல்லோரும் அறிந்ததே].


இருக்கின்ற சூழ்நிலையில், அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் துவங்கினால் கட்டாயம் வழிபிறக்கும். பிரச்சினையிலிருந்து முழுமையாக வெளிவர ஒருவேளை உடனே வழி தெரியாவிட்டாலும், அப்போதைக்கு இருக்கும் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க ஒருபடி எடுத்து வைத்தால், மெதுமெதுவாய் அடுத்தடுத்த வழிமுறைகள் கிடைக்க வாய்ப்பாகும்.


பிரச்சனையைக் கண்டு துவண்டுவிடாமல், அடுத்து என்ன செய்யலாம் என்று நம்பிக்கையோடு பிரச்சனையை எதிர்கொள்வதுதான் உங்களின் முதல்கட்ட வெற்றி. ஒவ்வொன்றாய் செய்ய துவங்கினால் படிப்படியாக சூழ்நிலைகள் மாறும், இயல்பு நிலை திரும்பும். தன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்த பின்னும், பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியத்தை உருவாக்கிய எண்ணற்றவர்களின் கதையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களாலும் அது முடியும் என்று நம்பி, முயற்சியை துவக்குங்கள். கட்டாயம் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையையும் கடந்து சாதிக்க முடியும்.


தோல்விகளும் இழப்புக்களும்

வாழ்க்கைச் சக்கரத்தின் தவிர்க்க முடியாத அம்சங்கள்;

அவற்றிற்காக ஓரிரு நாள் வருந்தலாம்;

காலத்திற்கு வருந்துவதும், வாழ்க்கையை முடித்துக் கொள்வதும்

அதை சமாளிப்பதற்கான வழிகள் அல்ல!


அடுத்து என்ன செய்யலாம் என்று

நம்பிக்கையோடு சிக்கலை எதிர்கொண்டு

படிப்படியாய் மீண்டு வருவது தான்

ஆறறிவு கொண்ட மனிதனின் கடமை!!


- [ம.சு.கு 21.01.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page