top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-99 – இலக்கையும், தரத்தையும் உங்கள் செயல்களால் உயர்த்துங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-99

இலக்கையும், தரத்தையும் உங்கள் செயல்களால் உயர்த்துங்கள்!


  • கல்வி, விளையாட்டு என்று எந்தத் துறையானாலும், அதில் சிறப்பாக மிளிர்ந்திட, அனுதினமும் அதிகாலை எழுந்து படிப்பதும், பயிற்சி செய்வதும் அவசியம். தினமும் அதிகாலையெழுந்து படி/பயிற்சி செய் என்று நம் பிள்ளைகளுக்கு நாம் அறிவுரையாக கூறிவிட்டு, மறுபுறம் நாம் படுத்துறங்கினால், அவர்கள் எப்படி அதை கடைபிடிப்பார்கள். அவர்கள் எழுகின்ற போது, பெற்றோர்களும் எழுந்து தங்களின் கடமைகளைச் செய்தால், பிள்ளைகளும் எழுந்து அதன் பயிர்ச்சியை துவக்கும். நாம் உறங்கவேண்டும், ஆனால் பிள்ளைகள் எழுந்து படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சாத்தியப்படும். நீங்கள் புகை பிடிப்பீர்கள், மது அருந்துவீர்கள், ஆனால் உங்கள் மகன் அதை செய்யக்கூடாது என்று அறிவுரை கூற உங்களுக்கென்ன தகுதி இருக்கிறது.

  • அலுவலகம், அரசியல், ஆன்மீகம் எதுவானாலும் அங்கு தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழிதான். அலுவலகத்தில் உயரதிகாரி கையூட்டு வாங்கினால், கீழே இருக்கும் அதிகாரிகளும் வாங்குவார்கள். அதை உயரதிகாரியால் எப்படி தட்டிக்கேட்க முடியும்? அரசியலில் தலைவன் நேர்மனையானவனாக இருந்தால், தன் கட்சியினரின் தவறான செயல்களை கேள்வி கேட்கலாம். தேவைப்பட்டால் கட்சியைவிட்டு விலக்கலாம். அதே சமயம் தலைவன் நேர்மையற்றவனாக இருந்தால், எப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்? எதிர்கட்சியினரின் தவறுகளை எப்படி தைரியமாக கேள்விகேட்டு சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க முடியும்? ஆன்மீகத்தை வளர்க்கும் ஆசிரமங்களிலும் அதே நிலைதான். குரு மேன்மை பொருத்தியவரானால், ஆசிரமம் நல்வழிப்படும். குரு சுயநலம் மிக்கவரானால், அவருடைய சீடர்களும் அவ்வழிநடக்கவே வாய்ப்பதிகம். எதன் தலைவரானாலும், அந்த தலைமையின் கைகளும், எண்ணமும் சுத்தமாக இருந்தால், படிப்படியாக எல்லாம் சீரடையும்.

ஆரம்பகாலத்தில் தங்கள் பெற்றோர்களின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்துதான் பிள்ளைகள் பல வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொள்கின்றனர். எப்போதும், எதற்கும் பொய் சொல்லக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் அதே குழந்தையிடம், நீங்கள் ஏதாவது சிக்கலில் இருந்து தப்பிப்பதற்காக, பாட்டியிடம், தாத்தாவிடம் பொய் சொல்லச் சொன்னால், உங்கள் வார்த்தைகளின் மீதான மதிப்பும், மரியாதையும் என்னவாகும்? பெற்றோர்கள் மது அருந்துபவராக இருந்தால், பிள்ளைகளிடம் போதை பொருட்களை தொடக்கூடாது என்ற ஒழுக்கத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? உங்கள் பிள்ளைகள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வளரவிரும்பினால், அதற்காக முதலில் மாற வேண்டியவர்கள் நீங்கள்தான்! உங்கள் வாழ்க்கை முறையில் எந்த அளவிற்கு ஒழுக்கத்தை கடைபிடிக்கிறீர்களோ, அதுதான் உங்கள் பிள்ளைகளுக்கான ஒழுக்கத்தின் அடிப்படை அளவுகோளாக நிர்ணயமாகிறது.


பிள்ளை வளர்ப்பைத் தாண்டி, நம் சமுதாயம், நாம் பணிபுரியும் அலுவலகம், நம் தேசம் என்று எல்லா மட்டத்திலும் மக்களிடம் நல்லொழுக்கத்தையும், நன்னடத்தையையும் நாம் எதிர்பார்க்கிறோம். அந்த எதிர்பார்ப்பிற்கேற்ப நாம் நடந்து கொள்கிறோமா என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? சமுதாயத்தில் எல்லா வகையான தவறுகளையும், அநீதிகளையும் தனிமனிதனாக நீங்கள் செய்யலாம், ஆனால் சமுதாயம் உங்களிடம் எப்போதும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஔவை சொன்ன “தொல்லுலகில் நல்லாரொருவர் உளரேல், அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற வரிகளை எல்லோரும் படித்திருப்பீர்கள். அந்த “நல்லவர்” அடுத்தவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அது ஏன் நீங்களாக இருக்க முயற்சிக்கக்கூடாது?


உங்கள் வீடு, உங்கள் அலுவலகம், நீங்கள் சார்ந்த சமுதாயம், உங்கள் தேசமெங்கும் நல்லொழுக்கம் நிறைந்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து எல்லோருமே வெற்றிகான வேண்டுமானால், முதலில் அது உங்களிடமிருந்து துவங்கட்டும். உங்கள் நடத்தையின் மூலம், உங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு அடிப்படை நிலையை நிர்ணயுங்கள். மற்றவர்கள் தரம் உயரட்டும், அதன் பின்னால் நான் மேம்படுத்துகிறேன் என்று சொல்லாமல், நீங்கள் முன்னோடியாக இருந்து நிர்ணயித்தால், கட்டாயம் உங்களை சுற்றிய சமுதாயம் படிப்படியாய் மேன்மையடையும்.

  • உங்கள் பேச்சிலேயே கனிவும், நேர்மையும் இருந்தால், உங்களுக்கு பதிலும் அவ்வண்ணமே கிடைக்கும்;

  • கேளிக்கைக்கான நேர்தை குறைத்து நூல்பல வாசிக்கத் துவங்கினால், குடும்பத்தினர் அனைவரும் படிப்படியாக நூல்களை வாசிக்க துவங்குவார்கள்;

  • சீக்கிரமாக எழுவது, அன்றாட உடற்பயிற்சி, சத்தான உணவென்று நீங்கள் மாறினால், உங்கள் குடும்பமும் படிப்படியாக மாறும்;

  • அலுவலகமோ, அரசியலோ, கரைப்படியாத கரங்களோடு நீங்கள் இருந்தால், தவறுகளை தட்டிக் கேட்கும் தகுதி உங்களிடம் இருக்கும்;

நான் ஒருவன் மாறினால் உலகம் மாறிவிடுமா என்று நீங்கள் கேட்கலாம்? உங்கள் கோணத்தில் கேள்வி சரியாக இருப்பது போல தோன்றும். ஆனால் சமுதாயத்தின் கோணத்திலிருந்து பாருங்கள். தனிமனிதனாக நீங்கள் மாறிட தயாராக இல்லாதபோது, சமுதாயம் மட்டும் மாறவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்;


தனியொருவர் முன்னுதாரணமானால்

அவர் குடும்பம் படிப்படியாக மாறும்;

ஒரு குடும்பம் முன்னுதாரணமானால்

சுற்றமும், நட்பும் படிப்படியாக மாறும்;


ஒரு புள்ளியில் சிறிதாய் துவங்கும் மாற்றம்

சமுதாயத்தில் படிப்படியாக மாற்றத்தினை ஏற்படுத்தும்;

அந்த மாற்றத்திற்கான துவக்க புள்ளியாய் நீங்கள் இருங்கள்;


உங்கள் செயல், நடத்தை, பேச்சால்

உயர்ந்த தரத்தை நிர்ணயுங்கள்;

உங்கள் சாதனைகளால் இலக்குகளை உயர்த்துங்கள்;


நீங்கள் முன்னின்று செய்து காண்பித்த பின்

முடியாது என்று யாரால் மறுக்க முடியும்;


மாற்றத்தின் துவக்கப்புள்ளி எப்போதுமே ஒரு தனிமனிதன்தான்;

அந்த தனிமனிதன் நீங்களாக ஏன் இருக்கக் கூடாது?


- [ம.சு.கு. 16-01-2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page