“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-96
காரணங்களா? காரியங்களா?
ஒவ்வொரு பாடத்திலும், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் புரிதல், வளர்ச்சி குறித்து அறிய சிறுதேர்வுகளை / சோதனைகளை அவ்வப்போது வகுப்புகளின் இடையே நடத்துவது வழக்கம். சில தேர்வுகளில் உங்கள் பிள்ளைகள் குறைவான மதிப்பெண் எடுக்கக்கூடும். எதனால் குறைந்ததென்று கேட்டுப்பாருங்கள், பிள்ளைகள் உடனே பத்து காரணங்களை பட்டியலிடுவார்கள். பாடம் சரியாகப் புரியவில்லை, முன்னறிவிப்பின்றி திடீரென்று தேர்வு வைத்துவிட்டதால் படிக்க முடியவில்லை, கல்யாணத்துக்கு போனதால் / விடுப்பு எடுத்ததால் படிக்க முடியவில்லை என்பார்கள். சிலசமயம் வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களும் இவ்வளவுதான் எடுத்துள்ளதாக தங்களை நியாயப்படுத்துவார்கள். எத்தனை தான் காரணங்கள் வந்தாலும், நிதர்சனம் ஒன்றுதான் - தேர்வுக்கு சரியாக தயாராகவில்லை அதனால் மதிப்பெண் வரவில்லை;
ஒரு விற்பனை பிரதிநிதிக்கு, மாதாந்திர விற்பனை இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். சுறுசுறுப்பான சில பிரதிநிதிகள், அந்த இலக்குகளை அடைந்துவிடுகிறார்கள். ஆனால் பெரும்பாலானோர், மாதாந்திர இலக்கை அடைய போராடுகிறார்கள். மாதக்கடைசியில் இலக்கை தவறவிட்டதற்கு ஏதேனுமொரு காரணத்தை கூறுகிறார்கள். “சந்தையில் மந்தநிலை”, “பொருளிலே இன்னின்ன குறைபாடு”, “வாடிக்கையாளர்கள் முடிவெடுக்க தாமதிக்கிறார்கள்” என்று ஏதேனும் ஒரு காரணம் வரும். ஒருபுறம் இப்படி ஆயிரம் காரணங்கள் வந்துகொண்டிருக்க, மறுபுறம் சில பிரதிநிதிகள் அதே சூழலில், அதே சந்தையில் தொடர்ந்து இலக்குகளை எட்டிவிடுவார்கள். என்ன வேறுபாடு இந்த பிரதிநிதிகளுக்கு மத்தியில்?
பள்ளிக் கல்வியாகட்டும், விளையாட்டுக் களமாகட்டும் - அவ்வப்போது தேர்வுகளுக்கும், சோதனைகளும் வந்த வண்ணம்தான் இருக்கும். எந்தக் கணமும் தேர்வுகளை சந்திக்க எந்தளவிற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது. திடீரென்று வைத்தார்கள், அதனால் முடியவில்லை என்ற காரணம் கூறுபவராக இருந்தால், காரணங்கள் நிறைய தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும். நீங்கள்
காரியத்தை முடிக்கும் நோக்கில் காத்திருக்கிறீர்களா? இல்லை
ஏதேனும் ஒரு காரணம் கிடைத்தால் அதைகொண்டு சமாளிக்கும் நோக்கில் காத்திருக்கிறீர்களா?
என்பதுதான் உங்கள் முன் இருக்கும் கேள்வி. ஒருசில சமயங்களில், கடினமாக முயற்சி செய்திருந்தும் தோற்றிருக்கலாம். அந்த தோல்விக்கான காரணத்தைச் ஆராய்ந்து அடுத்தமுறை சரிசெய்து வெல்லும் நோக்கில் காரணங்கள் சொல்லப்பட்டால், அந்த காரணங்களை கேட்பதில் அர்த்தமிருக்கிறது. எதையுமே செய்யாமல் காரணத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம், கேட்பதற்கு என்ன இருக்கிறது?
படிக்காமல் விட்டதற்கும், களத்தில் பயிற்சி செய்ய தவறியதற்கும் ஆயிரம் கதைசொல்கிறார்கள். இப்படி செய்யாமல் விட்டதற்கு ஆயிரம் காரணம் தேடுபவர்கள், ஏனோ அதை கட்டாயம் செய்துமுடிப்பதற்கென்று ஒரு காரணம் கூட தேடுவதில்லை.
விற்பனை இலக்குகளை பிரதிநிதிகள் யாரும் அடையாமல், எப்படி நிறுவனத்தை முன்னேற்றுவது. இலக்குகளை நிர்ணயிக்கும் போது, கருத்துக்களை கேட்கும்போது எதையும் சொல்லாமல் மாதக் கடைசியில், இலக்குகளை அடையாததற்கு காரணங்களை அடக்குபவர்களை வைத்துக்கொண்டு எப்படி நிறுவனம் முன்னேற்றம் காணும். என்னதான் கடினமான சந்தை சூழலானாலும், வெற்றபெற துடிப்பவர்கள்
இலக்குகளை அடைவது எப்படி என்ற கோணத்தில் தொடர்ந்து யோசிக்கிறார்கள்?
இலக்குகளை அடைவதில் சந்தை சிக்கல்கள் வரும்போது, அதை சமாளித்து சாதிக்க தேவையான முன்னேற்பாடுகளை திட்டமிடுகிறார்கள்;
சிக்கல்களை காரணமாக சொல்லாமல், அதை எப்படி சமாளித்து வெற்றி கண்டேன் என்று வெற்றிக் கதைகளை சொல்பவர்களை தேடிப் பணி அமர்த்துங்கள். இலக்குகளை அடைவதை குறியாக கொண்டு ஓடும் ஊழியர்கள் நிறைந்திருந்தால் மட்டுமே, நிறுவனங்களால் சாதனைகளை படைக்க முடியும்.
பள்ளித் தேர்வோ; விற்பனை இலக்கோ;
உற்பத்திக் களமோ; தேர்தல் களமோ;
விண்கலம் ஏவுதலோ; போர்க்கள சமரோ;
மீன்களை பிடிப்பதோ; காளையை அடக்குதலோ;
காரியம் எதுவானாலும்
இலக்குகளை அடைபவருக்கு மட்டுமே அங்கீகாரம்;
காரணத்தைச் சொல்லி ஆறுதல் தேடுபவர்களை
காலம் அன்றோடு மறந்துவிடும்;
வானிலை சரியில்லை; ஊழியர் வரவில்லை;
ஜாதகம் சரியில்லை; அதிர்ஷ்டம் துணையில்லை;
என்று காரணம் ஆயிரம் தேடாமல்
செய்து முடிக்கும் வழியை யோசியுங்கள்;
வெற்றி திருமகள் தானாய் உங்களிடம் குடியேறுவாள்!!
- [ம.சு.கு 13.01.2023]
Comments