“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-92
தவறான புரிதல்களே - பிரச்சனைகளின் ஆரம்பம்!
உங்கள் பதின்மவயது பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாகஇருக்க, கவனமாக படிக்க வேண்டும், நண்பர்களுடன் வெளியில் அதிகம் சுற்றினால் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது என்று தொடர்ந்து அறிவுரை சொல்வீர்கள். அறிவுரைகளை பொருட்படுத்தாமல் மீறும்போது சற்றே அதட்டவும் செய்வீர்கள். நீங்கள் அவர்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு சொன்னாலும், பிள்ளைகள் அதே கோணத்தில் எடுத்துக் கொள்வார்களா என்பது சந்தேகமே? அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கவில்லை, அவர்களை நீங்கள் அதீதமாக கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள், மற்ற பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை நம்பும் அளவுக்கு நீங்கள் அவர்களை நம்புவதில்லை, என்றும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் எதிர்ப்பதமாக யோசிப்பார்கள்! நீங்கள் நல்லது நினைத்து செய்தாலும், அதை பிள்ளைகள் தவறாக புரிந்து கொண்டால் எப்படி சமாளிப்பது?
அரசியல் வட்டாரங்களில், தலைவர்களிடம் சில பத்திரிகையாளர்கள் சற்று வில்லங்கமான கேள்விகளை கேட்கக்கூடும். அப்போதைய சூழலில், சரி-தவறு குறித்து தலைவர் பதில் சொன்னாலும், கேட்கப்பட்ட கேள்விபற்றி ஏதும் குறிப்பிடாமல், அந்தக் கட்சித் தலைவர் இந்த சமுதாய மக்களை அவமதித்தார், பெண்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கவில்லை, என்று தலைப்புச் செய்தி ஆக்கிவிடுவார்கள். அந்த தலைவர் கேட்கப்பட்ட கேள்விக்கு என்னதான் சரியான பதில்சொல்லி இருந்தாலும், அதை பத்திரிக்கையாளர்களும், எதிர்க்கட்சியினரும் அவர்களுக்கேற்ற வடிவில்தான் திரித்துப் புரிந்து கொள்வார்கள். திரித்தும் புரிவதோடு நில்லாமல், அதை ஊதி பெரிதாக்கி ஆதாயம் தேட முயற்சிப்பார்கள்.
எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமையவேண்டும் என்ற ஆசையில் அவர்களுக்கு தொடர்ந்து அறிவுரை கூறுவார்கள். பதின்மவயதினரோ, உலகத்தை தற்போது புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்கியிருப்பதால், தினம்தினம் நிறைய கற்றுக் கொண்டிருப்பதால், அவர்களுக்கு சுதந்திரம் வேண்டும், தங்களால் சிந்தித்து முடிவெடுக்க முடியும்போது, ஏன் இந்த பெற்றோர்கள் தங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள்? என்று கேள்வி கேட்பார்கள். அவர்கள் கோணத்தில் அதுசரிதான். ஆனால் சமுதாயத்தின் சூதுவாது பிள்ளைகளுக்கு தெரியாது என்று பெற்றோர்கள் சொல்லும் கண்ணோட்டமும் சரிதான்.
கட்டுப்படுத்தப்படாத சில பிள்ளைகள், போதைப் பொருட்களுக்கு அடிமையாகி சீரழிந்ததை எல்லோருமே பார்த்திருக்கிறோம். பெற்றோரும்-பிள்ளைகளும் அவரவர் கண்ணோட்டத்தில் சரியாகவே இருந்தாலும், இருவரும் வெவ்வேறு கோணத்தில் புரிந்து கொண்டு மனக்கசப்பை ஏற்படுத்திக் கொள்வது குழந்தை வளர்ப்பில் வரும் ஒரு அன்றாட சவால்தான். சூழ்நிலைக்கேற்ப எப்படி சமாளிக்கிறோம் என்பது நமது சாமர்த்தியமே!
அரசியல் தலைவர்களின் பேச்சுக்களை தங்களுக்கு தேவைப்படும் கோணத்தில் திரித்துப்புரிந்து கொண்டு அதில் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகளும், பத்திரிக்கைகளும் முயற்சிப்பது போலவே, நம் அலுவலகத்திலும், வியாபாரத்திலும், நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், அதன் புரிதலும், அதனால் ஏற்படும் தாக்கமும் எப்படி இருக்கும் என்று சில சமயங்களில் கணிக்கமுடியாது. ஒரு ஊழியர் தவறாக செய்து நஷ்டம் ஏற்படுத்தி விட்டதற்காக நீங்கள் அவரை திட்டக்கூடும். அந்த ஊழியரோ, “என்னை இப்படி திட்டலாம், நான் என்ன அவர் அடிமையா” என்று கோபித்து, வேலையை இராஜினாமா செய்யக்கூடும். வியாபாரத்தில் நீங்கள் சொல்லும் பதிலை வாடிக்கையாளர் தவறாக புரிந்து கொண்டு வாதிடலாம்.
நம்மிடம் கேட்கப்படும் கேள்விக்கு, அப்போதைய சூழ்நிலைக்கேற்ப சரியான பதிலையே நாம் சொன்னாலும், அதை கேட்டவர் திரித்து வில்லங்கமாக்கினால் ஆபத்துதான். கலிகாலத்தில் கேட்பவரின் நோக்கமென்ன என்று யோசித்து பதில் சொல்ல வேண்டியுள்ளது. நம்முடைய வார்த்தையில் சுயலாபம் தேட முயற்சிப்பவர்களிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது!
தவறுகளை கண்டால் பொங்கியெழுவதில் தவறில்லை. ஆனால் அந்தத் தருணத்தில் யாரிடம் என்ன பேசுகிறோம்? எப்படிப்பட்ட வார்த்தைகளை பிரயோகிக்கிறோம் என்பதில் கவனம் தேவை. அதீத கோபத்தில் தவறான வார்த்தைகளை பிரயோகப்படுத்தினால், அவை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விபரீதமாகக் கூடும். எண்ணற்ற குடும்ப பிரச்சனைகளில், அவசரத்தில் சொல்லப்பட்ட சில தேவையற்ற வார்த்தைகளை மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும், சில உறவுகள் நிரந்தரமாக பிரிந்துவிட்ட நிகழ்வுகளையும் நிறைய கண்டிருக்கிறோம்.
நீங்கள் என்ன பேசினாலும், அதை நீங்கள் சரியாக பேசுகிறீர்களா என்பதை தாண்டி, அது அதே கோணத்தில் சரியாக புரிந்து கொள்ளப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டியது அது முக்கியம்.
கேட்பவரின் நோக்கம்
தற்போதைய சூழ்நிலை
யாரைப் பற்றிய கேள்வியென்பதை
ஒரு நிமிடம் ஆழமாக சிந்தித்து
பொறுமையாக பதிலளியுங்கள்;
நீங்கள் புரிந்து கொள்ளும் கோணத்தில்
கேட்பவர் புரிந்து கொள்கிறாரா – என்பதை
கவனிக்க தவறி விடாதீர்கள்!
புரிதல்தான் அதி முக்கியம்!
தவறான புரிதல் போரிலும் முடியலாம்;
ஆக்கத்திற்கு வழிவகுக்க
சரியான புரிதலை ஏற்படுத்துவது முக்கியம்;
எதைச் சொல்வதற்கு முன்னும்
நீங்கள் அவரிடத்திலிருந்தால்
எப்படி புரிந்து கொள்வீர்கள் என்பதை
ஒரு நிமிடம் யோசித்து பார்த்து பேசுங்கள்;
- [ம.சு.கு 09.01.2023]
Comments