top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-88 – தோல்வியை சமாளிக்க காரணம் தேடுகிறீர்களா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-88

தோல்வியை சமாளிக்க காரணம் தேடுகிறீர்களா?


  • தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரங்கள் நடந்து கொண்டிருக்கும்போதும், தேர்தல் தினத்தன்றும் எல்லா கட்சியினரும் தேர்தல் நடைமுறைகள் மீதும், அதிகாரிகள் மீதும் ஏதேனும் ஒரு குற்றம்குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். உத; வாக்கு இயந்திரம் சரியில்லை, அலுவலர்கள் ஒரு கட்சிக்கு சார்பாக செயல்படுகிறார்கள், மாற்றுக் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர், கள்ள ஓட்டு போடுகின்றனர் என்று எண்ணற்ற குற்றம் சொல்வார்கள். ஓட்டுக்கள் எண்ணப்பட்டு அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால், இந்த காரணங்கள் உடனே ஒதுக்கப்பட்டுவிடும். ஒருவேளை தோற்றுப்போயிருந்தால், முன்னர் சொன்ன காரணங்களை பெரிதாக்கி, வஞ்சிக்கப்பட்டோம் என்று வீரவசனம் பேசி தேர்தல் முறையின் மீது குற்றம் சாட்டி தோல்விக்கான காரணங்களை அடுக்குவார்கள்.

  • கால்பந்தாட்டத்தின் 0-1 என்ற கணக்கில் ஒரு அணி தோல்வி அடைகிறது. தன் கணிப்பில் ஒரு சிறு தவறு நேர்ந்ததால், அந்த அணியின் “கோல்கீப்பரால்” ஒரு கோலை தடுக்க முடியாமல் போகவே அந்த அணி தோல்வியை சந்தித்தது. ஆட்டம் முடிந்ததும் மொத்த அணியினரும் தோல்விக்கு அந்த கோல்கீப்பரையே குறை சொன்னார்கள். எல்லாவற்றையும் பார்த்த மேலாளர், சகவீரர்களிடம், “ஒரு நிமிட குழப்பத்தில் எதிரணியினர் ஒரு கோல் அடித்தனர் என்பதற்காக இப்போது கோல்கீப்பரை குறை சொல்கிறீர்களே, மீதமிருந்த 89 நிமிடங்களில் நீங்கள் ஏன் ஒரு கோல் கூட அடிக்கவில்லை?” என்று கேட்டார். யாரிடமும் பதில் இல்லை.

தேர்தலில் வெற்றி பெறுவோமா? இல்லையா? என்று கடைசி வரையிலும் உறுதியற்ற நிலையிலே தலைவர்கள் இருப்பார்கள். வென்றால் அவர்களின் கொள்கைகளை, திறமைகளை மக்கள் ஆதரித்ததாக விளம்பரப்படுத்துவார்கள். அதேசமயம் தோற்றால், அவர்களையும், அவர்களது கொள்கைகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நேரடியாக ஒத்துக்கொள்ளாமல், தேர்தல் நடத்தப்பட்ட முறை சரியில்லை, ஏமாற்றப்பட்டோம் என்று காரணங்களை சொல்லி சமாளிப்பார்கள். அதுவும், இந்த காரணங்களை தேர்தல் நடக்கும் சமயங்களில் முன்கூட்டியே சொல்லி வைப்பார்கள். ஒருவேளை தோற்றால் இவற்றை பெரிதாக சொல்லிவிடலாம் என்று ! இதை புத்திசாலித்தனமான சமாளிப்பாக அவர்கள் கருதினாலும், இந்த காரணங்களைச் சொல்வதில் ஏதேனும் பயனுண்டா?.


கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், மட்டைப்பந்தாட்டங்களில், ஓரிரு வீரர்களின் சிறு தவறுகளால் ஓன்றிரண்டு புள்ளிகளை, ஓட்டங்களை இழந்திருக்கலாம். ஆனால் அது மட்டுமே தோல்விக்கான மிகப்பெரிய காரணம் என்று குற்றம் சொல்லி சமாளிப்பது எப்படி நியாயமாகும். ஆடுகளத்தில் இருந்த பல மணி நேரங்களில், அந்த ஓரிரு மட்டுமே விளையாட்டை நிர்ணயிக்குமா? சில தவறுகள் அப்போதைக்கு எதிரணிக்கு சிறு முன்னேற்றத்தை கொடுத்திருக்கலாம். சூழ்சநிலையை புரிந்துகொண்டு மீண்டும் எல்லோரும் ஒற்றுமையாக, போராடினால் அந்த விளையாட்டை திரும்பவும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வெல்லலாமே! அதை விடுத்து அந்த ஒரு வீரரை குற்றம் சொல்லி, தோல்விக்கான காரணமாக சமாளிக்க முயன்றால், வெறுமனே அதை காலத்திற்கும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். காரணங்களால் சாதிக்க போவது ஒன்றுமில்லை.


விளையாட்டானாலும், வியாபார போட்டியானாலும், ஒருவர் வென்றால் இன்னொருவர் தோற்கடிக்கப்படுவது இயல்பு. இந்த தோல்விக்கு கட்டாயம் சில காரணங்கள் இருக்கும். தோற்றவர் கோட்டை விட்ட விடயத்தில் வென்றவர் ஜாக்கிரதையாக இருந்திருப்பார். அதனால் அவர் அப்போது வென்றிருப்பார். அந்த வெற்றியும், தோல்வியும் நிரந்தரமில்லை என்பது எல்லோரும் அறிந்ததே. தோல்வியின் காரணங்களில் இருந்து பாடத்தை கற்று, அடுத்த முறை இன்னும் கடுமையாக போராடுபவர்கள் கட்டாயம் வெற்றி பெறுகிறார்கள். மாறாக தோற்றதற்கான காரணத்தை பெரிதுபடுத்தி, அதற்கான நபர்களை தொடர்ந்து குறை கூறிக்கொண்டு இருந்தால், அடுத்த முறையும் தோல்வி ஏற்படுவது உறுதிதான்.


தோல்விக்கான காரணங்களை கட்டாயம் ஆராய வேண்டும். அதே சமயம் அந்த காரணத்தையே பற்றிக்கொண்டு உங்களை நியாயப்படுத்திக் கொண்டிருந்தால், அடுத்த வெற்றிக்கு திட்டமிடுவது எப்படி?

  • நீங்கள் தவறு செய்யவில்லை. மற்றவர்கள் தவறினால் தோற்றோம் என்று குற்றம் சாட்டி உங்களின் முகத்தைக் காக்க முயற்சிக்கிறீர்களா?

  • ஆடுகளம் சரியில்லை! நடுவர் சரியில்லை! காற்றும், மழையும் சதி செய்து விட்டது! என்று சூழ்நிலைகளை குற்றம் சொல்கிறீர்களா?

எல்லா சமாளிப்புக்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, பொறுமையாக நீங்கள் என்ன செய்யத் தவறினீர்கள் என்று யோசியுங்கள். உங்கள் வெற்றிக்கு பல சூழ்நிலைகள் ஒருபுறம் ஒத்துழைத்தாலும், சில சூழ்நிலைகள் தோல்விக்கு வழிவகுக்கக்கூடும். அவற்றை முன்கூட்டியே யூகித்து சமாளிப்பதெப்படி? கோட்டைவிட்ட விடயங்களை சரிசெய்து எப்படி வெற்றி காண்பது? என்பதை யோசியுங்கள்.


வென்றால் தன் திறமையால் வென்றோம்

தோற்றால், சதியால் - விதிவசத்தால் தோற்றோம்

என்று சொல்வதல்ல விளையாட்டு;


வென்றாலும் தோற்றாலும்

சரியாக செய்தவை, தவறாக செய்தவற்றை

அலசி ஆராய்ந்து குற்றம் குறைகளை சரிப்படுத்தி

அடுத்த முறை போராடி வெற்றியை பதிவு செய்வது தான்

திறமையான வீரனுக்கு அடையாளம்;


தோல்விக்கான காரணங்கள் - சமாளிப்பதற்கல்ல

தன் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கே;


காரணங்களைச் சொல்லி சமாளித்துக் கொண்டிருக்காமல்

அவை மீண்டும் நிகழாமல் வெற்றி பெற வழி தேடுங்கள்;


- [ம.சு.கு 05.01.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page