top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-87 – செய்வதானால் திருந்தச் செய், இல்லையேல் விட்டுவிடு"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-87

செய்வதானால் திருந்தச் செய், இல்லையேல் விட்டுவிடு!


  • அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட திட்டச் செயலை செய்ய உங்களுக்கு விருப்பமில்லை. அதை உங்கள் மேலாளரிடம் நீங்கள் சொல்லவுமில்லை. வேலை முடிந்ததா என்று மேலாளர் கேட்கும் போது, இதோ செய்து கொண்டிருக்கிறேன் என்று அவசர அவசரமாக அந்த வேலையை ஏனோதானா என்று செய்து முடிக்கிறீர்கள். முழுமையான ஈடுபாடும் இல்லாமல் செய்யப்பட்ட வேலையில், தரமும் இல்லை, வேலையிலும் முழுமையில்லை. அதை பார்த்த மேலாளர், “எதற்கு இதை செய்தாய்” என்று மட்டமாக கேட்கும் அளவிற்கு இருக்கிறது !!..

  • விளையாடத் தயாராக இருக்கும் உங்கள் பிள்ளைகளிடம், அவர்களின் அறையை சற்று சுத்தம் செய்யச் சொல்லுங்கள். முதலில் மறுப்பார்கள். நீங்கள் சற்றே முறைத்தால், வேண்டா வெறுப்பாக எடுத்து சுத்தம் செய்வார்கள். மேசைக்கு அடியில், கட்டிலுக்கு அடியில் என்று எல்லா இடங்களையும் சுத்தம்செய்யாமல், மேம்போக்காக சுத்தம் செய்துவிட்டு, சிறிது நேரத்திலேயே வேலை முடிந்ததென்று விளையாட ஒடிவிடுவார்கள். அவர்களின் வேலை சுத்தத்தை பார்த்து எரிச்சல் அடைந்து, நீங்களே இன்னொரு முறை முழுமையாக சுத்தம் செய்வீர்கள். வேண்டா வெறுப்பாக செய்பவர்களிடம், “செய்” என்று சொல்லுவதைவிட “விட்டுவிடு” என்று சொல்வதே உங்களுக்கு மேலாக தோன்றும்.

விருப்பமில்லாத செயலை செய்ய ஒருவரை பணித்தால், அதில் ஈடுபாடில்லாமல் அரைகுறையாகவும், தரக்குறைவாவும் செய்துவைத்து, இவரிடம் ஏன்கொடுத்தோம் என்று வருந்துமளவிற்கு சிலர் செய்து விடுகிறார்கள். அதை செய்ய முடியாது என்று முதற்கண் சொல்லி விட்டால் கூட பரவாயில்லை. ஆனால் செய்கிறேன் என்று எடுத்து அவ்வளவு மட்டமாக செய்து நேரத்தையும் பொருளையும் வீணடிப்பது, எல்லோருக்குமே தேவையற்ற இழப்பாகிவிடுகிறது.


குழந்தைகள், தங்களுக்கு விருப்பமான வேலையாக இருந்தால், மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள். அதே சமயம் அவர்களுக்கு பிடிக்காமல் உங்கள் நிர்பந்தத்தின் பேரில் செய்யும்போது, ஏனோதானோ என்று தான் செய்து முடிப்பார்கள். வீட்டுவேலை, விளையாட்டு, கல்வி என்று எதுவானாலும், ஈடுபாடில்லாமல் செய்யும்போது, அது அரைகுறையாகவே நிற்கிறது. அவ்வாறு செய்வதில் பயனில்லை என்று அவர்களுக்கு புரியவைப்பது சற்று கடினம்.


செய்கின்ற வேலையை ஈடுபாட்டுடன் செய். ஒருவேளை அப்போதைக்கு கவனம் சிதறினால், ஈடுபாடு இல்லையென்றால், சற்று ஓய்வெடுத்து பின் மனதை ஒருமுகப்படுத்தி செய் என்று குழந்தைகளை முறைப்படுத்தினால் அவர்கள் சிறப்பாக செயலாற்ற எதுவாக இருக்கும். ஆனால் அந்தப் புரிதலை பெற்றோர்கள் ஏற்படுத்தத் தவறினால், குழந்தைகளின் பழக்கவழக்கத்தை எப்படி மேம்படுத்துவது?


ஒருவருக்கு அந்த வேலை தெரியாது, முயற்சிக்கிறேன் என்று ஈடுபாட்டுடன் முயற்சிக்கும்போது, சில தவறுகள் நேர்ந்தால் கூட பரவாயில்லை. அடுத்த முறை அந்த தவறை திருத்திக் கொண்டு மேம்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் வேலை நன்கு தெரிந்திருந்தும், செய்வதில் ஈடுபாடு இல்லாமல் செய்கிறபோதுதான் அந்த அரைகுறை வேலையில், அந்த பொருளே பயனற்றதாகி விடுகிறது. மேலும், அரைகுறையாக எல்லாவற்றையும் செய்வதால், எதையும் சாதிக்கமுடியாமல் சாமானியனாகவே சாகவேண்டியது தான்.

  • உடற்பயிற்சி செய்கிறேன் என்று இயந்திரங்களை வாங்கி வீட்டில் வைத்து ஓரிரு வாரங்கள் செய்துவிட்டு அப்படியே விட்டுவிடுவது;

  • தொப்பையை குறைக்க உணவை கட்டுப்படுத்துகிறேன் என்று வீரவசனம் பேசிவிட்டு, மறுநாளே துரித உணவுகளை அளவுக்கு மீறி உண்பது;

  • கவனம் இல்லாமல் சமையல் செய்து உப்போ, காரமோ கூடுதலாய் போட்டு வாயில் வைக்கமுடியாத அளவிற்கு சமைத்து வைப்பது;

  • புத்தகம் படிக்கிறேன் என்று நிறைய புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்கிவிட்டு, எதையும் தொடாமலே இருப்பது;

  • புதியவற்றை படைக்கிறேன் என்று புதிய வளைதள பக்கத்தை ஆரம்பித்து ஓரிரு கட்டுரைகள், படங்கள், விமர்சனங்களை பதிவிட்டுவிட்டு அப்படி நிறுத்திவிடுவது;

செய்ய வேண்டும் என்ற ஆசை இருப்பது முக்கியமல்ல! செய்வதை ஈடுபாட்டுடன் முழுமையாக செய்து முடிப்பதுதான் அதிமுக்கியம். செய்கிறேன் என்று துவக்கி எல்லாவற்றையும் பாதியிலேயே நிறுத்துவதற்கு, அதை முதற்கண் துவங்காமலே இருந்திருக்கலாம். உங்களால் சரிவர செய்ய முடியாதென்றால், பேசாமல் விலகிநில்லுங்கள். அடுத்தவர்களாவது பயன்படும் வகையில் ஏதாவது செய்வார்கள்.


யாருக்குமே பயன்படாத வகையில் அரைகுறையாக செய்து நேரத்தையும் பொருளையும் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கறளா என்று உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து பாருங்கள். உங்கள் செயல்களை அவ்வப்போது நீங்களே மறுபறுசீலனை செய்து, அரைகுறைகளை களைந்து உரிய மாற்றத்தை ஏற்படுத்தினால், நீங்கள் சாதிக்க நிறைப்பதை கட்டாயம் சாதிக்கமுடியும்.


செய்வதானால் திருந்தச் செய் – இல்லையேல்

முடியாதென்று விலகிவிடு;


செய்கிறேன் என்றெடுத்து – யாருக்கும்

பயனில்லாமல் பாதியிலேயே விடுவதால்

அரைகுறை தரத்தில் செய்வதால்

சாதிக்கப் போவதென்ன?


அரைகுறை செயலால்

நேரமும் பொருளும் விரயமாவதோடு

மற்றவர்களுக்கு உங்கள்மீதான

நம்பிக்கையும் குறைந்துபோகும்;


- [ம.சு.கு 04.01.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page