ம.சு.கு
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-85 – புறங்கூறுதலை விட்டொழியுங்கள்!"
“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-85
புறங்கூறுதலை விட்டொழியுங்கள்!
மாணவர்கள் மத்தியில் ஒருவன் தன்னை முக்கியத்துவப்படுத்திக் கொள்வதற்காக, தன்னை சற்றே அறிவாளியாக காட்டிக் கொள்வதற்காக, தான் படிக்கும் பள்ளியை பற்றியும், சில ஆசிரியர்களைப் பற்றியும் தாழ்த்தி பேசுவார்கள். ஆசிரியர்களுக்கு பட்டப் பெயர் வைத்து கிண்டலடிக்கவும் செய்வார்கள். இன்னும் கூடுதலாக தங்களின் சிறு குழுவில் இல்லாத பிற மாணவர்களை பற்றி அவதூறு பேசுவதும் கிண்டல் அடிப்பதும் வழக்கமான ஒன்று. தன் சகமாணவனை. தான் படிக்கும் பள்ளியை. தனக்கு கற்பிக்கும் ஆசிரியரை தாழ்த்திப் பேசி, தன்னை உயர்வு படுத்திக் கொள்வதில் சாதிக்கப் போவது என்ன? அப்படி பிறர் தாழ்ச்சியில் நாம் உயர்ந்துவிடுவோமா?
ஒரு மேலாளராக உங்கள் குழுவை வழிநடத்த, உங்கள் குழுவினருடன் நல்ல புரிதலும், பரஸ்பரம் விட்டுக்கொடுப்பதும், இணக்கமான செயல்பாடும் முக்கியம். உங்களை இணக்கப்படுத்தி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக, நிர்வாகத்தில் அவ்வப்போது வரும் சிறுசிறு சிக்கல்களுக்கு உயர் அதிகாரிகள் மீதும், நிர்வாக இயக்குனர்கள் மீதும் பழிபோட்டு, உங்களை காப்பாற்றிகொள்ள முயற்சிக்கிறீர்களா? “அவர் ஏன் தான் இதை செய்யச் சொல்கிறாரோ?” “நிர்வாக முடிவுகளில் இயக்குனர்கள் நம்மை கலந்ததாலோசிப்பதே இல்லை” என்று மேல்மட்டத்தை குறைகூறி, தங்களை வலுப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றீர்களா? இந்த மேல்மட்டத்தின்மீது பழிபோடுதல், அப்போதைக்கு அந்த குழுவிற்குள் உங்களை ஒன்றிணைக்க வழிவகுத்தாலும், காலப்போக்கில் ஊழியர்களுக்கு நிர்வாகத்தின் மீது நம்பிக்கையின்மையை வளர்த்து விடும்.
பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள், பிறமாணவர்கள் பற்றி புறங்கூறி, தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வது சாதாரணமாக இருப்பது போல, அன்றாட வாழ்விழும், எண்ணற்ற புறங்கூறல்கள் சமுதாயத்தில் பரவலாக இருந்து மனிதர்களின் ஒற்றுமைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்துக் கொண்டேதான் இருக்கிறது. தெருவில் வசிப்பவர்களிடம், ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் தாழ்வாக பேசுவதும், அதே சமயம் அந்த குறிப்பிட்ட நபர் வந்தால் உடனே மாற்றிப் பேசுவதையும் காண்கிறோம். அலுவலகத்தில் தன் சுயலாபத்திற்காக, தனக்கு பதவிஉயர்வு கிடைப்பதற்காக சக ஊழியரை பற்றி அவதூறு பேசுவதும், அவரது வேலைக்கு இடையூறு செய்வதுமான எண்ணற்ற கீழ்த்தரமான செயல்கள், அப்போதைக்கு ஒருவரை முன்னிலைப்படுத்துவது போல தோன்றினாலும், நாளடைவில் அந்த குழுவில், அலுவலகத்தில் அவநம்பிக்கையை அதிகரித்து, அதன் வளர்ச்சியை பாதிக்கிறது.
அலுவலகத்தில் “நாம்”, “நம் நிறுவனம்” என்ற எண்ணத்துடன் குழுவை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்யும் மேலாளரால், தனிமனிதன் என்கின்ற குறுகிய வட்டத்தை தாண்டி, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்ற முடியும். அதற்கு மாறாக, தன்னை முன்னிலைப்படுத்த, நிறுவனத்தையும் அதன் இயக்குனர், மற்றும் உயர் அதிகாரிகளையும் தாழ்த்தி, அவர்களுக்கு ஏதும் தெரியவில்லை என்று கிண்டல் அடித்து சகஊழியரின் நம்பிக்கையை சிதரடித்தால், நிறுவனம் எப்படி வளர்வது. நிர்வாகத்தால் எப்போதும் எல்லோரையுமே திருப்திப்படுத்த முடியாது. ஏனெனில் ஒவ்வொருவர் எதிர்பார்ப்பும், தேவைகளும் வேறுபடுகின்றன.
தன் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பதற்காக நிர்வாகத்தையும், நிறுவனத்தையும் தாழ்த்திப் பேசுவதானால், இன்னும் எதற்காக நீங்கள் அங்கு தொடர்ந்து பணி புரிய வேண்டும்? வேறு வேலைக்குப் போக வேண்டியது தானே! அந்த வேலையும் ஊதியமும் வேண்டும், ஆனால் அதை வழங்கும் நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி தனக்கு கவலை இல்லை என்றால் இது எந்த வகையில் நியாயம்?
பிறரை தாழ்த்தி பேசக்கூடாது என்பது பொது நியதி. அதேசமயம் மற்றவர்கள் செய்யும் தவறுகளை என்றுமே சுட்டிக் காட்டக்கூடாது என்றில்லை. பிறரது தவறுகளை சுட்டிக்காட்டுவதை,
அவர் முன்னிலையில் செய்ய முடியுமானால்,
அதற்கான காரணத்தை அவர்கூற வாய்ப்பளிக்க முடியுமானால்,
அந்த தவறுகளை சுட்டிக் காட்டுவதில் தவறேதுமில்லை. தவறுகள் திருத்தப்படுவதற்கு அது வழிவகுக்கும்.
ஒருவர் இருக்கும் போது அவரை உயர்வாக சொல்லி, அவர் விலகியதும் அவரைப் பற்றி அவதூறு பேசுவதும் ஒருவிதத்தில் பாவச்செயலே. பேசுவதால் அப்படியென்ன தீங்கு வந்து விடப்போகிறது? என்று நீங்கள் கேட்கலாம். அவதூறு பேசுவது அப்போதைக்கு அந்த நபரை தாழ்த்தினாலும், அந்த புறங்கூறும் பழக்கம் உங்கள் தனிமனித நடத்தையை கேள்விக்குறியாக்கி விடுகிறது.
ஒரு நல்ல தலைவனாக விரும்பினால்
புறங்கூரலை விட்டொழித்து
ஆக்கத்தை விதைக்க வேண்டும்;
தவறுகள் நிகழ்வது மனித இயல்பு;
அவற்றை திருத்த வழிசெய்யாமல்
செய்த தவறை குறைகூறி தாழ்த்துவதில் பயன் என்ன?
யாருடைய தாழ்ச்சியிலும்
நீங்கள் உயர்வடைவது சாத்தியம் இல்லை;
புறங்கூறல் விலகுவதும்
சகோதரத்துவம் வளர்வதும்
மனிதம் தழைத்திட முக்கியமான தேவைகள்!
- [ம.சு.கு 02.01.2023]