top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-84 – நேரம் போதவில்லை என்கிறீர்களா?

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-84

நேரம் போதவில்லை என்கிறீர்களா?


  • காலை எழுந்தது முதல் இரவு வரை தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பதால், சரியான நேரத்தில் சாப்பிட முடிவதில்லை, போதிய உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, புத்தகம் வாசிக்க நேரமில்லை, குடும்பத்தினருடன் சிறிதுநேரம் அமர்ந்து பேசி உறவாட நேரமில்லை, பெற்றோருடன் தொலைபேசியில் பேச நேரமில்லை, கோவிலுக்கு போக நேரமில்லை, உறவுகளின் கல்யாணம், கருமாதிகளுக்கு சென்றுவர நேரமில்லை, என்று சொல்கிறீர்களா? இப்படி எதற்குமே நேரமில்லை என்றால், அப்படி என்னதான் 24 மணி நேரத்தில் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

  • அலுவலகத்தில், அன்றாட வேலைகளில் மூழ்கி, புதிய மென்பொருளை சோதித்துப்பார்க்க நேரமில்லை, புதிய திட்டங்களைப் பெற புதிய வாடிக்கையாளர்களை சென்று சந்திக்க நேரமில்லை, ஊழியர்களின் கலந்துரையாட கருத்துக்களை கேட்க நேரமில்லை, அடுத்து வரக்கூடிய சந்திப்புகளுக்கு போதிய திட்டமிடல்களை அறிக்கைகளை முன்னரே தயார் செய்ய நேரமில்லை என்கிறீர்களா? உங்களின் அன்றாட வேலையில் எண்ணற்ற மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தும், எதையும் செய்ய நேரமில்லை என்றால், இருக்கின்ற நேரத்தில் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

பகலெல்லாம் ஓயாமல் ஓடுவதாக கூறுபவர்கள், அவர்களின் உடல் நலனுக்கும், குடும்பத்தின் நலனுக்கும் செலவிட நேரமில்லை என்றால், பின் எதற்காக இத்தனை ஓட்டம்? இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் முழிப்பவர்களே அதிகம். உண்மையில் அவர்களின் நலனுக்காக உடற்பயிற்சி செய்ய, உணவு விடயத்தில் சற்று கவனமாக இருக்க, மனைவி-மக்களோடு பேசிட நேரமில்லையா? என்றால், அப்படி ஒரு நேரமற்ற மனிதர் உலகில் எவரும் இல்லை என்பது தான் நிதர்சனம். இருப்பினும் நிறைய பேர் நேரமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் தங்களின் அத்தியாவசியங்களை செய்து கொள்ள போதிய நேரம் இருக்கத்தான் செய்கிறது. அந்த நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் திண்டாடுகின்றனர். தன் வாழ்க்கைக்கு எது முக்கியம் என்ற தெளிவில்லாமல், குழப்பநிலையிலேயே ஓடியோடி, உண்மையான இன்பத்தை தொலைக்கின்றனர்.


அலுவலகத்தில் அன்றாட வேலைகளை செய்பவர்கள், அதைத் வெறுமனே தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள். அதை சற்று மேம்படுத்தி இருக்கலாமே? என்று கேட்டால், அதற்கெல்லாம் நேரமில்லை என்கின்றனர். ஒவ்வொரு செயலையும் மேம்படுத்தி, சிறப்புற செய்ய, எளிமையாக்கிட, கட்டாயம் வேறு வழி இருக்கும். சிறிதுநேரம் செலவிட்டு முயற்சி செய்தால், பிறரிடம் ஆலோசனை கேட்டு மேம்படுத்தினால், வேலை எளிமையாவதோடு, உற்பத்தியும் பெருகி, இலாபமும் அதிகரிக்கிறது. செய்வதை மேம்படுத்த போதிய நேரம் ஒதுக்கவேண்டுமென்ற புரிதல் ஏனோ அவர்களுக்கு வருவதே இல்லை! இருப்பதை செய்வதற்கே நேரம் போதவில்லை, இனி மேம்படுத்துவது குறித்து சிந்திக்க நேரமேது? என்று, வழக்கமான நேரமில்லை என்றதொரு பொய்யான சாக்காட்டை சொல்லி, தங்கள் வளர்ச்சியை தாங்களே தடுத்துக் கொள்கிறார்கள்.


  • காலை 30 நிமிடம் சீக்கிரம் எழுந்தால், உடற்பயிற்சி செய்யவும், தியானம் செய்யவும் நேரம் கிடைத்துவிடும்;

  • இன்றைய தினம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று காலை 5 நிமிடம் திட்டமிட்டால், அவசர அவசியங்களுக்கு ஏற்ப வேலையை முன்னிலைப்படுத்தி எல்லாவற்றையும் செய்து முடிக்க வழிகிடைக்கும்;

  • புதிதாக செய்ய வேண்டியவற்றையும், அதன் அவசர அவசியத்திற்கு ஏற்ப, பட்டியலில் நேரம் ஒதுக்கி செய்தால், உங்களின் நேரத்தை ஆக்கப்பூர்வமானதாக பயன்படுத்தலாம்;

  • எப்போதும் புத்தகம் கைவசமிருந்தால், கைபேசியிலும் சமூகவலைத்தளத்திலும் தேவையின்றி உலாவும் நேரத்தில், நூல்களை வாசித்து அறிவை விரிவாக்கலாம்;

  • என்ன சாப்பிடுகிறோம் என்பமை சற்றே கவனித்து, நேரங்காலத்திற்கு ஏற்ப சாப்பிட்டால், உடல் உபாதைகளின்றி வாழ வழிகிடைக்கும்;

  • தினம் ஒரு நண்பரையோ, உறவினரையோ தொலைபேசியில் அழைத்து பேசினால், நலம் விசாரித்தால், எல்லோரிடமும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பேசிய மன நிறைவு கிடைக்கும்;

  • பிறந்தநாள் விருந்து நடத்துவதற்கு பதிலாக, ஒரு ஆசிரமம் சென்று அறப்பணி செய்தால், சமுதாயத்திற்கு திருப்பிக்கொடுத்த மனநிறைவும், அமைதியும் கிடைக்கும்;

ஒரு சிலவற்றை நேரம் ஒதுக்கி, திட்டமிட்டு செய்யலாம்;

ஒரு சிலவற்றை நேரம் கிடைக்கும் போது செய்யலாம்;

ஒரு சிலவற்றை போகிற போக்கில் செய்து கொண்டே போகலாம்;

செய்ய வேண்டும் என்ற மனம் தான் முக்கியம்;

நேரம் அவற்றுக்கு தானாய் அமையப் பெறும்;


செய்யாமல் இருப்பதற்கு நூறு காரணங்களை சொல்பவருக்கு, நேரமில்லை என்பதும் இன்னொரு காரணமேயாகும். நேரமில்லாத மனிதரென்று யாருமில்லை.


தனக்கு இருக்கும் அதே 24 மணி நேரத்தில், செய்யக்கூடியன நிறைய இருந்தாலும், தன் இலட்சியத்திற்கு ஏற்ப செய்யவேண்டியது எது என்று தேர்ந்தெடுத்து, குறித்த நேரத்தில் செய்து

  • பில்கேட்ஸ் செல்வந்தர் ஆனார்!

  • நரேந்திர மோடி பிரதமர் ஆனார்!

  • அன்னை தெரசா புனிதரனார்!

இவர்களுக்கென்று ஒரு நாளைக்கு 100 மணி நேரம் கொண்ட தனிப்பட்ட கடிகாரமாக இருந்தது!!... ஒரு நாளில் 24 மணிநேரமென்பது எல்லோருக்கும் பொது என்றால், நீங்கள் மட்டும் எப்படி நேரமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?


- [ம.சு.கு 01.01.2023]

Recent Posts

See All

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page