“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-81
வார்த்தைகளின் மாயாஜாலம்!
குழந்தைக்கு சோறூட்ட, அந்த நிலவை பிடிக்கலாம், வானத்தை வளைக்கலாம் என்று எல்லா அசாத்தியங்களையும் சாத்தியமென்று அதன் தாய் சொல்லுவார். தண்ணீரில் நிலவை காட்டி தொட வைப்பார். குழந்தையின் மனதில் நிலாவை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை நிறைந்திருக்கும். அதே குழந்தைக்கு, இருட்டில் பேய் இருக்கிறது அங்கு போகாதே என்று சொல்லுவார். குழந்தையும் தாயின் சொல்லை அப்படியே நம்பி இருட்டைக் கண்டு பயந்தபடியே வளரும். தாயின் சொல்லில் துவங்கி, சமுதாயம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் குழந்தையின் மனதில் பதிந்து, “முடிவது”, “முடியாதது”, “தெரிந்தது”, “தெரியாதது” என எல்லாம் மனதளவில் காலப்போக்கில் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது.
அலுவலகத்தில் ஒரு கிளை மேலாளர் தனக்கு வழங்கப்பட்ட இலக்குகள் கடினமானவை என்று தன் குழுவிடம் பேச்சை ஆரம்பித்தார். அந்த ஆண்டு முழுவதும் எல்லோருக்கும் அது கடினமாகவே தோன்றியதால் இலங்கு கடைசிவரை எட்டப்படவே இல்லை. அதே இலக்கை வேறு கிளையின் மேலாளர் சாதிக்கக் கூடியதே என்று நேர்மறையான வார்த்தைகளால் குழுவை ஊக்குவித்து, நம்பிக்கையளித்து வழிநடத்தினார். அவரால் குறைந்தபட்சம் இலக்கின் அருகில் வந்துவிட முடிந்தது. யதார்த்தத்தில் எல்லா இலக்குகளும் கடினமாகவே நிர்ணயிக்கப்படும். எளிதாக நிர்ணயித்தால் அது சரியான இலக்கேயல்ல. அந்த கடின இலக்கை, எட்ட முடியும் என்று குழுவை ஊக்குவித்தால்தான், எட்ட முடியும். “கடினம்” என்று மேலாளரே கூறினால், எப்படி ஊழியர் அதை எளிமை என்று கருதுவார்.
குழந்தை வளர்ப்பில் அந்த குழந்தையின் வாழ்க்கை பாதையை, என்ன ஓட்டத்தை, வீரதீரத்தை, பெரும்பாலும் தீர்மானிப்பதற்கான அடிகோலிடுவது தாய் தான். தாயின் சொற்கள் செய்யும் ஜாலம்தான் குழந்தையை உருவாக்குகிறது. குழந்தை நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற புலமைபித்தன் வரிகளில் மனிதனின் வாழ்க்கை பயனத்தின் யதார்த்தம் தெளிவாகிறது. குழந்தைக்கு அதீதமாக செல்லம் கொடுத்து, கஷ்டத்தை சந்திக்கவிடாமல் காத்துநிற்கும் தாய், அந்தக் குழந்தையின் தைரியம் வளர தடையாகிறார். “உன்னால் முடியும் செய்” என்று குழந்தையை ஊக்கவிக்கும் தாய், அந்த குழந்தையின் தைரியம் வேரூன்ற வழிவகுக்கிறார்.
நிறுவனங்கள், செய்ததையே திரும்பச் செய்து கொண்டிருந்தால் அதே இடத்தில் தங்கிவிட நேரிடும். ஒரே இடத்தில் தங்கினால், காலவெல்லத்தில் படிப்படியாய் சரிந்துபோகும். தன் வளர்ச்சிக்கு, அடுத்தடுத்து இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டே இருக்கும். புதிய இலக்குகளை அடைய “முடியும்” என்ற கோணத்தில் நிறுவனத்தின் முதலாளி முதல் கடைகோடி தொழிலாளி வரை பேசினால், எல்லா இலக்குகளும் சாத்தியமாகும்.
நடைமுறையில் “முடியாது” என்ற வார்த்தைகள் எளிதில் மனதில் பதிய வாய்ப்பு அதிகம். ஒரு “முடியாது” என்ற வார்த்தையை அழிக்க, குறைந்தபட்சம் பத்துமுறை “முடியும்” என்று சொன்னால் தான் அது சாத்தியமாகும். எதிர்மறை எண்ணங்களை மனம் எளிதில் பதிவுசெய்துவிடும். அப்படிப்பதிவாகும் ஓரு எதிர்மறையை அழிக்க, எண்ணற்ற நேர்மறை எண்ணங்கள், செயல்களும் தொடர்ந்து நிகழ்ந்தால் மட்டுமே அந்த எதிர்மறையை சமாளிக்க முடியும். அவ்வளவு எளிதில் ஆழமாகப் பதியக்கூடிய எதிர்மறை எண்ணங்களை, அடிப்படையிலேயே தவிர்க்க முற்படுவதுதான் புத்திசாலித்தனம். எதிர்மறை எண்ணத்தை குறைக்க முக்கியமான ஒருவழி. நாம் பிரயோகிக்கும் வார்த்தைகள். வார்த்தைகள் நேர்மறையானதாக இருந்தால், எண்ணங்கள் படிப்படியாக நேர்படும்.
இலக்கு ஒரு வேலை கடினம் என்றால் அதை ஏன் ஆரம்பத்தில் சொல்ல வேண்டும். “முடியும்” என்று குழுவை நேர்மறையாக வழிநடத்திப் பாருங்கள். நீங்கள் கிட்டத்தட்ட சாதிப்பதற்கான எல்லையருகில் வந்திருப்பீர்கள். ஒருமுறை முடியாவிட்டாலும், அந்தப் அனுபவமும் படிப்பினையும் அடுத்தமுறை முடிந்து விட வழிவகுத்துவிடும். “கடினம்”, “முடியாது” என்ற தொடங்கினால், கட்டாயம் முடியாமல்தான் போகும்.
தலைவன் “கடினம்” என்று சொன்னால், தொண்டன் சோர்ந்துவிடுவான். “சேர்ந்து சாதிப்போம்” என்று சொல்லும் தலைவன் பின்னால் மட்டுமே, மக்கள் கூட்டம் தைரியமாக அணிவகுத்து நிற்கும்.
போர், கடினம் என்று சொல்லும் தளபதியின் பின், யார் தைரியமாக நிற்பார்கள். யாரும் போரில் தோற்று உயிர்விட தயாரில்லை. எல்லோருமே வெற்றி பெற்று சரித்திரம் படைக்கவே விரும்புகின்றனர். வெற்றி நமதே என வீரமுறைக்கும் தளபதியின் பின்மட்டுமே படை அணிவகுக்க தயாராக இருக்கும்.
ஏனெனில், வெற்றி சரித்திரத்தில் தங்களை இணைக்க, ஒவ்வொரு இதயமும் துடிப்பது இயல்பே.
“இல்லை” என்ற சொல்லை இல்லாமல் செய்யுங்கள்;
“முடியாது” என்ற சொல்லை முடிவுக்கு கொண்டு வாருங்கள்;
“கஷ்டம்” என்ற சொல்லை கஷ்டப்பட வையுங்கள்;
“பயம்” என்ற சொல்லை பயந்தோட விரட்டுங்கள்;
“முடியும்” என்ற சொல்லோடு களம் கண்டவர்கள்
இன்றில்லாவிட்டாலும் மற்றொருநாளில்
முடித்தே காட்டி இருக்கிறார்கள்;
எண்ணத்தின் வடிவம் “சொல்”
சொல்லின் வடிவம் “செயல்”
செயலின் வடிவம் “படைப்பு”
படைப்பின் மறுபெயர் “வெற்றி”
உங்கள் எண்ணத்தில்
ஆக்கபூர்வமான நேர்மறையான
வார்த்தைகளை வார்த்தெடுங்கள்;
வார்த்தைகள் கூட்டாய்
மாயாஜாலம் நிகழ்த்துவதை
காலம் பறைசாற்றும்.
- [ம.சு.கு 29.12.2022]
Kommentit