top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-80 – இலக்கில் தெளிவில்லாவிட்டால்?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-80

இலக்கில் தெளிவில்லாவிட்டால்?


  • ஒரு விளையாட்டு வீரராக [கூடைப்பந்து, மட்டைப்பந்து...] களத்திலே ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். ஆட்டம் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், திடீரென்று எண்ணிக்கை பட்டியல் [ஸ்கோர் போர்டு] தொழில்நுட்ப கோளாறினால் சரியாக வேலை செய்யவில்லை. தங்கள் அணியின் தற்போதைய எண்ணிக்கை எவ்வளவு, எதிரணியினரின் எண்ணிக்கை எவ்வளவு, இன்னும் எவ்வளவு நேரம் மீதமுள்ளது, என்று தெரியாமல் விளையாட்டை தொடர்ந்தால் எப்படி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது. ஒருவேளை எண்ணிக்கையை வெளியே ஒருவர் காகிதத்தில் குறித்துவைத்துக் கொண்டு முடிவை சொன்னாலும், எண்ணிக்கை தெரியாமல், வெல்கிறோமா-தோற்கிறோமா என்பது தெரியாமல், நீங்கள் விளையாடினால், விளையாட்டுக் களத்தில் உங்களால் எப்படி உற்சாகத்துடன் ஓட முடியும்? அணியின் தலைவராக, பயிற்றுனராக உங்களால் எப்படி அணியை வழிநடத்த முடியும்?

  • உங்களுக்கு எண்கள், கணக்குகள் போன்றவற்றில் அவ்வளவாக விருப்பமில்லை. அவை அதீத மனஅழுத்தம் தருவதாக கருதி அவற்றை பெரிதாக பொருட்படுத்தாமல், உங்கள் நிறுவனத்தை வழிநடத்துகிறீர்கள். உங்கள் ஊழியர்களுக்கு தொடர்ந்து உழைப்பதற்கான உத்வேகத்தை உங்களின் நம்பிக்கையான வார்த்தைகள் மூலம் அளிக்கிறீர்கள். அவர்களின் முயற்சிகளை அவ்வப்போது பாராட்டி ஊக்குவிக்கிறீர்கள். உங்களின் நிர்வாகம் ஆறு மாதங்கள் நன்றாகவே செல்கின்றது. உங்கள் நிறுவனத்தின் தணிக்கை அதிகாரி, அடுத்த கூட்டத்தில் இந்த காலாண்டிற்கான வருவாய் சென்ற காலண்டிற்கான அளவைவிட 10% குறைவு என்று கூறியதும் எல்லோருக்கும் அதிர்ச்சி. ஏன்?

விளையாட்டு களத்தில் எதிரணியனரின் எண்ணிக்கை எவ்வளவு, தங்கள் அணியின் தற்போதைய நிலவரம் என்ன, இனி வெற்றி பெற எத்தனை ஓட்டங்கள் எடுக்க வேண்டும், அல்லது முன்னிலை பெற்றிருந்தால் கூடுமானவரை தடுப்பாட்டம் ஆடினால் போதுமா, என்ற முழுமையான களத்தின் புள்ளிவிவரம் தெரியாமல் இருந்தால், அணியின் தலைவர் எப்படி அந்த அணியை ஊக்கப்படுத்தி வழிநடத்த முடியும். வெற்றி பெற வேண்டுமென்ற ஒரே இலக்கு எல்லோருக்கும் தெளிவுதான். அதேசமயம், இப்போது எந்த பாதையில் போகிறோம், எந்த இடத்தில் இருக்கிறோம் என்கின்ற தெளிவில்லாவிட்டால், வெற்றி என்ற இலக்கு இனி எவ்வளவு தூரம் என்று தெரியாவிட்டால், நம் ஆட்டத்திட்டங்களை எப்படி வடிவமைப்பது.


சூழ்நிலைக்கேற்ப, கடைசி நிமிட திட்டமாறுதல்களும், ஆக்ரோஷமான தாக்குதல்களும் பல வெற்றி தோல்விகளை திசைதிருப்பியிருக்கிறது. ஆட்டத்தின் எண்ணிக்கை தெரியாமல், இப்போது இருக்கும் சூழ்நிலை என்னவென்று தீர்மானிப்பது எப்படி? நிலவரம் தெரியாமல் களத்தில் வெறுமனே ஓடுவதில் என்ன பயன் இருக்கிறது?


நிறுவனத்தில் எண்கள் குறித்து கவனமில்லாமல், எல்லோரும் இரவுபகல் பாராது நன்றாக உழைத்தாலும், உற்பத்திகுறைந்துள்ளது என்று தணிக்கையதிகாரி சொன்னதும், நீங்களே அவரிடம் எப்படி என்று சரமாரியாக கேள்விகேட்கிறீர்கள். ஒவ்வொரு கேள்விக்கும் புள்ளிவிவரத்துடன் பதில் வருகிறது. இப்போது நாம் எங்கே இருக்கிறோம், அடுத்து என்ன இலக்கை அடைய வேண்டும் என்று ஊழியர்களுக்கு அவ்வப்போது புள்ளிவிவரங்களை கூறி, வியாபார சூழ்நிலைக்கும், சந்தை நிலவரத்திற்கும் ஏற்ப போதிய மாறுதல்களை செய்யாமல், வெறுமனே உழைத்தால், இலக்கில்லாத அம்பாக எங்கோ போய் விழவேண்டியதுதான். இலக்கு என்னவென்று தெரியாமல், இப்போது எங்கிருக்கிறோம் என்பதும் தெரியாமல், உங்களால் எந்தக் குழுவையும் நீண்ட தூரம் வழிநடத்தி வெற்றிகாண முடியாது. பாதிவழியிலேயே உங்கள் குழுவின் கேள்விகளுக்கு பதிலில்லாமல் திணற வேண்டியதுதான். நீங்கள் திண்டாடினால், பின்னர் குழுவை எப்படி ஊக்குவிப்பது?


பொதுவாக அலுவலகத்திலும் வியாபாரத்திலும் தலைமை அதிகாரியின் அறைக்குச் சென்றால், இந்த மாத இலக்கு, இந்த ஆண்டு இலக்கை என்று பலகையில் குறித்து வைத்திருப்பார்கள். வாரந்தோறும் தற்போதைய முன்னேற்றம் என்ன, இலக்கை அடியை இன்னு எவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டும் என்ற சிறிய கலந்துரையாடல் தொடர்ந்து நடக்கும்.


ஒரு தனிநபராக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக உங்கள் மேலாளர் சொன்னால், நீங்கள் அதை செய்து முடிக்க தெளிவாக திட்டமிட்டு செய்ய இயலும். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாமல், அலுவலகத்தில் இருக்கும் வேலையை முடித்துவிடு என்று பொதுவாக சொல்லிச் சென்றால், எதை செய்வதென்றை தெரியாமல், நீங்கள் வெறுமனே வேண்டாததை செய்து காலம் கடத்திக் கொண்டுதான் இருப்பீர்கள்.


தலைவர்களின் தன்னம்பிக்கையான வார்த்தைகள் முக்கியம். அது உங்களை உத்வேகப்படுத்தி களத்தில் போராட வழிவகுக்கும். அவர்களின் நம்பிக்கையான வார்த்தைகளில் தெளிவான இலக்கு சொல்லப்படாவிட்டால், அந்த உத்வேகம் நீண்ட நாட்கள் நீடிக்காது. இலக்கில்லாவிட்டால், எந்த தொண்டனும் சீக்கிரத்தில் சோர்ந்துவிடுவான்.


என்ன செய்கிறோம்? எதை சாதித்திருக்கிறோம்?

இன்னும் என்ன சாதிக்கப் போகிறோம்?

என்ற தெளிவு இல்லாவிட்டால்,

அடைய வேண்டிய இலக்கு

எண்களில் நிர்ணயிக்கப்படாவிட்டால்

உங்கள் குழுவிற்கு தூரம் தெரியாது!

தூரம் தெரியாமல் வழிநடத்துவது எப்படி?


உங்களுக்கு எண்களில் விருப்பமில்லாவிட்டாலும், குழுவை வழிநடத்த, எண்ணிக்கையும் கணக்கீடும் அதிமுக்கியம். நாம் இப்போது எங்கிருக்கிறோம் என்ற அளவீடு அவ்வப்போது தொடர்ந்து தெரிந்து கொண்டே இருந்தால்தான், இனி மீதம் இருக்கும் நேரத்தில், மீதமுள்ள தூரத்தை எப்படி அடைவது என்று தெளிவான திட்டம் வகுக்க முடியும்.


வெற்றி எல்லோருக்குமான பொது இலக்கு

அதையடைய எத்தனை எண்ணிக்கை எடுக்க வேண்டும்

இப்போது முன்னே செல்கிறோமா?

பின் தங்கி இருக்கிறோமா?

என்ற தற்போதைய அளவீடும்

மீதம் உள்ளதை அடைவதற்கான கணக்கீடும்

தெளிவுபட இருந்தால்

வெற்றி இலக்கு சாத்தியமாகும்!


வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்

ஆம்! அந்த தூரத்தை தெரிந்து – தன்

ஆற்றலை வழிநடத்துபவர்க்கு!


- [ம.சு.கு 28.12.2022]

17 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page