top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-79 – தவிர்க்க முடியாதவைகளை சீக்கிரத்தில் எதிர்கொண்டு விடுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-79

தவிர்க்க முடியாதவைகளை சீக்கிரத்தில் எதிர்கொண்டு விடுங்கள் ?


  • உங்கள் நண்பரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளீர்கள். அடுத்த மாதம் 10ஆம் தேதி திருப்பித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளீர்கள். தவிர்க்க முடியாத காரணத்தினால், உங்களுக்கு வரவேண்டிய பணம் வருவதில் சற்று தாமதமாகிறது. ஒரு மாதத்தில் தர வேண்டியது, மூன்று மாதகாலம் வரை ஆகக்கூடுமென்று தெரியவருகிறது. நண்பனுக்கு திருப்பிப் கொடுப்பதற்கு வேறு ஏற்பாடுகள் செய்ய முயற்சிக்கிறீர்க்ள. எந்த வழியிலும் சாத்தியம் இல்லை என்று தெரியும்போது, உங்கள் முன் இருக்கும் இருவழிகள் (1) நேரடியாக நண்பனை சந்தித்து கொடுப்பதற்கு தாமதமாகும் என்று சொல்லிவிடுவது (2) பணம் கைக்கு வரும்வரை, நண்பனை பார்ப்பதை தவிர்த்துவிடுவது. எது உங்கள் வழி?

  • அலுவலகத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில், உங்கள் அஜாக்கிரதையினால் சின்ன தவறு நேர்ந்துவிட்டது. அதை அமைதியாக சரி செய்ய முயற்சித்து, முடியாமல் போகிறது. இந்த தருணத்தில் உங்களுக்கு இருக்கும் மூன்று வழிகள் (1) அந்த தவறை பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்துவிடுவது (2) அந்த தவறை மேலாளரிடம் சொல்லி மன்னிப்பு கோறுவது (3) அந்தத் தவறை அடுத்தவர் மீது சாமர்த்தியமாக திருப்பி விடுவது. இதில் எது உங்கள் வழி?

குடும்பத்தின் அவசர தேவைகளுக்கு, வியாபார தேவைகளுக்கு, கைமாற்றாக பணம் வாங்குவதும் கொடுப்பதும் வழக்கமான ஒன்று. வாங்கிய இடத்தில் சொன்ன தேதியில் திரும்ப கொடுத்தால், உங்கள் நாணயம் அங்கீகரிக்கப்பட்டு, அடுத்தமுறை அவசியத்தேவையின் போது கேட்டால் கிடைக்க வாய்ப்பதிகம். சொன்ன சொல்லைக் காக்கத் தவரினால், உங்களின் நாணயம் முற்றிலும் சரிந்து போகும்.


எல்லோராலும் எல்லா சமயத்திலும் சொன்ன சொல்லை அச்சுபிசகாமல் காப்பாற்ற முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறிதான். ஏனெனில் ஏதேனும் ஒரு அவசர சூழ்நிலையில் பணம் வருவதும் போவதும் தாமதமாகலாம். அப்படிப்பட்ட தருணத்தில், உங்கள் நாணயத்தை எப்படி காப்பது? ஒன்று மாற்று ஏற்பாடுகள் ஏதவதொன்றை செய்து பணத்தை திருப்பிக் கொடுப்பதன் மூலம் நாணயத்தை காக்கலாம். அது முடியாத போது, நேரடியாக கடன் கொடுத்தவரை சந்தித்து, சிக்கலை கூறி சிறிது அவகாசம் கேட்கலாம். எப்போதும் சிக்கலான தருணங்களில் உங்களின் நாணயம் காக்க, ஓடி ஒளிவதை தவிர்த்து, நேரடியாக சந்தித்து அவகாசம் கேட்டுவிடுவது, பல பிரச்சினைகளில் வேரிலேயே களைந்துவிட உதவும்.


உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளில் ஒரு சிலவற்றை செய்யும் போது, தவறு நிகழ்வது இயல்பு. அதுவும் முதல்முறை செய்யும்போது, தவறுகள் நேர வாய்ப்பு அதிகம். சில செயல்களின் தவறுகள், உங்களின் அஜாக்கிரதையின் காரணமாக நேரலாம். அந்த தவறுகளால் சிறிய / பெரிய பொருளிழப்புக்கள் ஏற்படலாம். அந்த தவறுகளை மூடி மறைப்பதில் என்ன பயன்.


தவறுகளால் பொருட் சேதம் ஏற்பட்டால், அதை மூடிவைப்பது எத்தனை காலங்களுக்கு சாத்தியமாகும். அப்படியே மறைத்தாலும், அதனால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், இழப்புகள் பன்மடங்காகக் கூடுமே. நீங்கள் செய்த தவறை நீங்களே உடனுக்குடன் ஒத்துக்கொண்டு சரி செய்ய முயற்சித்தால், அதிகபட்சம் அந்த ஆண்டு உங்களுக்குரிய பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்காமல் போகும். அதைவிடுத்து செய்த தவற்றை பிறர்மீது திணித்தாலோ, அவற்றை மூடி மறைத்தாலோ, அது ஒருநாள் வெளிப்படும்போது விளைவுகள் விபரீதமாக இருக்குமே. உங்கள் குட்டு வெளுப்படும் நாளில், நீங்கள் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடுமே [நஷ்ட ஈடு தரவேண்டி வரலாம் / வேலையை விட்டு நீக்கப்படலாம்].


செய்த தவறை ஏற்றுக்கொள்ள, ஏன் தயங்குகிறீர்கள்? ஏன் பயந்து ஒளிகிறீர்கள்? எப்படி குழந்தை செய்யும் தவறுகள் பெற்றோரின் கண்களுக்கு தப்புவதில்லையோ, அதே வண்ணம் நீங்கள் வேலையில் செய்யும் தவறுகள் எதுவும் முதலாளியின் கண்களுக்கு தப்புவதில்லை. அப்போதைக்கு தெரியாத வண்ணம் இருந்தாலும், அது நிரந்தரமன்று. எப்படியும் ஒரு நாள் உங்களின் தவறுகள் தெரியவரும்போது, அன்றைய தினத்தின் விளைவுகள் விபரீதமாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம். விபரீதங்களை தவிர்க்க, செய்த தவறுகளை, முதல் கணத்திலேயே ஒப்புக்கொண்டு விளைவுகளை நேருக்குநேர் சந்தித்துவிட்டால், மனஉளைச்சல் இன்றி நிம்மதியாக இருக்கலாம்.


தவறுகள் நேர்வது மனித இயல்பு;

தெரிந்தோ-தெரியாமலோ, கவனக்குறைவினாலோ,

தவறுகள் நேர்ந்தால், ஓடி ஒளியாமல்

விளைவுகளை நேருக்குநேர் சந்தித்துவிடுங்கள்;


நிம்மதியாக வாழ விரும்பினால்

சிக்கல்களை கூடியவரை

நேருக்குநேர் சந்தித்து சமாளித்துவிடுங்கள்;


தவிர்ப்பதும், ஓடிஒளிவதும், பொய் சொல்வதும்,

தற்காலிக தப்பித்தலே தவிர

நிரந்தர தீர்வன்று என்பதை உணர்ந்திடுங்கள்;


- [ம.சு.கு 27.12.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page