“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-78
செய்து காட்டுங்கள்!
வியாபாரத்தில், ஒரு புதிய முயற்சியாக, ஒரு புதுமையான பொருளை உற்பத்தி செய்துதர ஒப்புக் கொள்கிறீர்கள். அதை வடிவமைப்பதற்கான வழிமுறைகளை யோசித்து, அதற்கான செய்முறை திட்டத்தை வகுத்துவிட்டீர்கள். உற்பத்தியை துவக்கும் தினத்தில், அதை எப்படி செய்ய வேண்டும் என்று விலாவாரியாக உங்கள் ஊழியர்களுக்கு சொல்கிறீர்கள். சிலமணி நேரங்களுக்குப்பின் அதன் வடிவமைப்பு எப்படி வந்திருக்கிறதென்று சென்று பார்க்கும்போது, உங்கள் எண்ணத்தில் உருவானதும், நிஜத்தில் உருவாக்கியிருப்பதும் முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. யாருடைய தவறு இது?
பொய் சொல்லக்கூடாது, பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும், மரியாதையாக பேச வேண்டும், யாருடனும் சண்டை போடக்கூடாது, என்ற நல்லபழக்கங்களை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள். குழந்தைகளுக்கு முதல்கட்ட கதாநாயகனும், கதாநாயகியும் பெற்றோர்கள் தான். பெற்றோர்கள் என்ன செய்கிறார்களோ, அதை குழந்தைகளும் அப்படியே செய்ய முயற்சிக்கிறது. நிறைய அறிவுரைகளை சொல்லிவிட்டு, அடுத்த நிமிடம் குழந்தை முன்னிலையில் நீங்கள் பிறரிடம் பொய் சொன்னால், கடுமையான வார்த்தைகளில் யாரையாவது திட்டினால், மரியாதைக் குறைவாக பேசினால், உங்கள் குழந்தையின் மனதில் எது பதியும் - உங்கள் அறிவுரைகளா ? உங்கள் செயல்களா?
பள்ளி, வீடு, அலுவலகம், சமுதாயம் யாவும் அதன் போக்கில் நகர்கிறது. எல்லோரும் அவரவர்களுக்கென்று ஒரு சிந்தனை கோணத்தை வைத்துக்கொண்டு, அவரவர் பார்வையில் சரி-தவறுகளை அனுமானித்து முன்செல்கின்றனர். உங்களைப் புரிந்து கொண்டு, நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் எல்லாவற்றையும் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது, பல சமயங்களில் முட்டாள்தனமாகிவிடும்.
சிந்தனைக் கோணங்கள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும்போதும், நமது எண்ணத்தை மற்றவரும் அதே கோணத்தில் புரிந்துகொள்ள வாய்ப்பு குறைவு. அதனால் செயலில் முக்கியத்துவத்திற்கு ஏற்ப உங்கள் எண்ணங்கள், திட்டங்களை தெரிவிக்கும்போது, அவற்றை விலாவாரியாக விளக்கி கேட்பவருக்கு தெளிவை ஏற்படுத்துவது அவசியம். சிலவற்றை வார்த்தைகளில் விளக்கினாலும், மற்றவர் மனதில் அப்படியே பதிய வைப்பது முடியாமல் போகலாம். அப்படியொரு சிக்கலான முறை என்றால், அவர்கள் கண்முன்னே அதை ஒருமுறை செய்து காண்பித்துவிடுவது நல்லது. சொற்களால் விளக்கிப் புரிய வைக்கமுடியாத சிலவற்றை செய்து காண்பிப்பதன் மூலம் தெளிவாக புரியவைக்க முடியும். அதனால்தான் அறிவியல் பாடத்தில் மட்டும், செய்முறைத் தேர்வு என்று தனியாக பிரித்து, பாடங்களில் சிலவற்றை செய்முறையில் செய்து பார்ப்பதை கட்டாயம் ஆக்கியுள்ளனர்.
எல்லாவற்றையும் உங்களின் வார்த்தைகள் மட்டுமே, உங்கள் மூலையிலிருந்து அடுத்தவரின் மூலைக்கு முழுமையாக கடத்திவிடாது. சிலவற்றை கண்களால் பார்ப்பதன் மூலமே மனதில் பதிய வைக்க முடியும். வெறும் வாய்மொழியாக கூட்டல், கழித்தலை குழந்தைக்கு கற்பிப்பது கடினம். அதே சமயம் அவர்கள் முன் 10 மிட்டாய்கள், பழங்களை வைத்து கூட்டல், கழித்தல்களை உதாரணத்தோடு விளக்கி பாருங்கள், கணிதம் தானாக அவர்கள் மனதில் பதியும். கூடியவரை எல்லா விடயங்களையும், ஒருமுறை செய்து காட்டிவிடுங்கள். செயல் மட்டுமே, செய்தியின் புரிதலை ஒரே கோணத்தில் மற்ற மனங்களை உணர வைக்க உதவியாக இருக்கும்.
குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்குவது எல்லா பெற்றோருக்கும் கைவந்தகலை. ஆனால் எண்ணற்ற குழந்தைகள் பொய் சொல்வதும், தீய வார்த்தைகள் பேசுவதும், மரியாதை குறைவாக நடந்து கொள்வதும் வாடிக்கையாக உள்ளது. பெற்றோர்களின் அறிவுரைகளுக்குப் பின்னும், ஏன் குழந்தைகள் அவ்வாறு பேசுகிறார்கள் என்று பார்த்தால், பிள்ளைகள் “கெட்ட வார்த்தைகளைக் காட்டிலும் அவர்கள் கேட்ட வார்த்தைகளையே பேசுவது” தெரிகிறது.
ஆம்! பெற்றோர்கள் ஒருபுறம் குழந்தைக்கு அறிவுரை சொல்லிவிட்டு, மறுபுறம் அதற்கு எதிர்ப்பதமாக செயல்பட்டால், குழந்தைகள் மனதில் குழப்பம்தான் உருவாகிறது. அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளைக் காட்டிலும், அவர்களது பெற்றோர்கள் செய்யும் செயல்களை மனதில் அதிகம் பதிவிட்டுக் கொள்கிறார்கள். பெற்றோர்கள் உபயோகித்த எல்லா கெட்ட வார்த்தைகளும் குழந்தைகளுக்கு சர்வ சாதாரணமாக வருகிறது.
உங்கள் குழந்தைகள் நல்லவர்களாக வளர வேண்டுமானால், முதலில் அதற்கு நீங்கள் தான் முன்னுதாரனம் என்பதை உணரவேண்டும். நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதுதான், உங்கள் குழந்தைகளுக்கு செயல்முறை விளக்கம்.
இரண்டு மூளைகளுக்கு இடையே யோசனைகளை கடத்த
அதை செய்து காட்டுவதை விட
வேறு முன்ஜாக்கிரதியான வழி ஏதுமில்லை;
நான் அப்படி நினைத்தேன்!
நீ இப்படி நினைத்தாயா? - என்ற
கருத்து வேறுபாடுகளை களைய
ஒரு முறை செய்து காட்டிவிடுங்கள்;
நல்லதோ, தீயதோ
செயல்முறை விளக்கம் எளிதில் பதிகிறது;
பதிந்தவை எளிதில் திரும்ப நிகழ்த்தப்படுகிறது;
- [ம.சு.கு 26.12.2022]
Comments