top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-75 – உணர்ச்சிவசத்தில் முடிவெடுக்காதீர்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-75

உணர்ச்சிவசத்தில் முடிவெடுக்காதீர்கள்!


  • சமீபத்தில் பத்திரிக்கையில் வந்த செய்தி, தாயார் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை. அன்றைய தினம் ஏதோ வீட்டு வேலைசெய்ய மகள் மறுத்ததால், தாயார் திட்டியிருக்கிறார். அந்த பெண்மணி வேறு ஏதோ குழப்பத்தில் இருந்ததால், அன்றைய தினம் சற்று கடினமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். அவரது மகளோ, அம்மா எப்படி தன்னை அப்படி திட்டலாம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேட்பதற்கே முட்டாள்தனமாக தோன்றும் இந்தமாதிரி சிந்தனையற்ற செயல்களை, அப்போதைய உணர்ச்சிப்பிழம்பில் சிக்கி, எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் செய்து, நிரந்தர இழப்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

  • ஒரு புள்ளிவிவரம், கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளில் 60% அதிகமானோர் முதல்முறை குற்றவாளிகள் என்கிறது. அதுவும் பெரும்பாலான கொலைகள் திட்டமிட்டுச் செய்யாமல், அப்போதைய வாக்குவாதத்தில் ஏற்படும் உணர்ச்சிப்பெருக்கில், கையில் கிடைத்த ஆயுதாயத்தை பலமாக பிரயோகப்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதத்தின் காரணமாக சிறை வாழ்க்கை அனுபவிக்க நேர்ந்ததாக பலகதைகள் வருகின்றன. இந்த உணர்ச்சிவயப்ப்பட்ட நிலையில் நிகழ்ந்தேறிய தேவையில்லாத விபரீதங்கள்தான் உலகம் பூராவும் மிக அதிகம்.

வீட்டிலே குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோர்கள் திட்டுவது வழக்கமான ஒன்று. இந்த யதார்த்தத்தை எல்லா குழந்தைகளும் சரிவரப் புரிந்து வைத்திருக்கின்றனர். குழந்தைகள் அவ்வாறு திட்டும்போது சாமர்த்தியமாக அமைதிகாத்து கடந்து விடுகிறார்கள். ஒரு சில குழந்தைகள், சற்று எதிர்த்து பேசி இன்னும் அதிகமாக அடி வாங்குகிறார்கள். இது வழக்கமாக இருந்தாலும், சில சமயங்களில், குறிப்பாக ஏனோ பெண் குழந்தைகள் அதிக உணர்ச்சிவயத்தின் காரணமாக விபரீதத்தை தேடிக் கொள்கிறார்கள்.


மதிப்பெண் குறைந்ததற்கு, காதல் பிரச்சினைகளுக்கு, ஆசிரியர் திட்டியதற்கு, நண்பர்கள் அவமானப்படுத்தியதற்கு, பந்தயத்தில் தோற்றதற்கு என்று பல வேடிக்கையான காரணங்களுக்கு உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலநிலை ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டே இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இப்படி உணர்ச்சிவசப்பட்டு உயிரை மாய்ப்பது, பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழியல்ல என்பதை குழந்தைகளுக்கு அவ்வப்போது நாசுக்காக புரிய வைக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.


கோபம் வருவது மனித இயல்பு. ஆனால் அந்த உணர்வை குடும்பத்தினரிடம், நண்பர்களிடம், சமுதாயத்திடம் நாம் எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியமான விடயம். கோபத்தில் கண்டபடி ஒருவர் பேசும்போது, அதற்கு இணையாக அடுத்தவரும் பேசினால், சண்டை முற்றி கைகலப்பாகிறது. சில கைகலப்புக்கள் அளவுகடந்து உயிர்சேதமும் ஏற்பட்டுவிடுகிறது.


தகாத வார்த்தை பேசியதற்காக கோபம், ஏளனப்படுத்தியதால் கோபம், அலட்சியப்படுத்தியதால்- அவமானப்படுத்தியதால் கோபம் என்று ஏதேனும் ஒரு காரணத்தினால் அறிவாளை வீசி ஆயுள் கைதியாய் சிறைவாசம் அனுபவிப்பவர்கள் தான் மிக அதிகம். இளம் இரத்தங்கள், வீரமென்ற நினைப்பில் செய்த கொலை குற்றங்களுக்கான சிறைவாசத்தில், தனியாக சிந்திக்கும்போது, அந்த முட்டாள்தனமான செயல் தானாய் புரிய வரும்போது, காலம் கடந்து இழப்பு நிரந்தரமாகி இருக்கும். வாழ்வின் பொன்னான பொழுதுகளை சிறையில் கழிக்க வேண்டியதிருக்கும்.


இந்த உணர்ச்சிவயப்பட்ட முடிவுகள், அன்றாட வாழ்வுமுறைகளைத் தாண்டி, பல வியாபாரங்களையும் சீரழித்திருக்கின்றன.

  • அதீத போட்டி மனப்பான்மையில், தேவையின்றி அதிக விலையில் ஏலமெடுத்து பணத்தை இழந்து இருக்கிறார்கள்;

  • மகிழ்ச்சியான தருணங்களில், தேவையில்லாமல் பலவற்றுக்கு ஒப்புக்கொண்டு, பின்னர் செய்ய முடியாமல் திணறுகிறார்கள்;

  • எங்கோ, யார்மீதோ இருக்கும் கோபத்தை, தன் ஊழியர்கள் மீது காட்டி நல்ல ஊழியர்களை இழப்பதும் அவ்வப்போது நிகழ்கிறது;

  • சந்தையில் ஏற்படும் தற்காலிக ஏற்ற-இறக்கங்ளுக்கு, தேவையின்றி உணர்ச்சிவசப்பட்டு, பங்குகளை / பொருட்களை வாங்கி-விற்பதில் தப்புக்கணக்குப் போட்டு பெரிய இழப்புகளை சந்திக்கிறார்கள்;

போட்டி-பொறாமைகள், சில அவமானங்கள், காழ்ப்புணர்ச்சிகள், துரோகங்கள், பழிவாங்கல்கள் என்று எண்ணற்ற உணர்ச்சி பெருக்கெடுக்கும் தருணங்களில், உங்களை நீங்கள் எவ்வாறு கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதுதான், வாழ்க்கை உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான அளவுகோல்.


உணர்ச்சிவசப்படும் தருணங்களில்

  • அதை அடக்கமுடியாதென்றால் அவ்விடத்தை விட்டு விலகிவிடலாம்;

  • யார் என்ன சொன்னாலும், நடப்பது நடக்கட்டும் என்று அமைதி காத்திருக்காலம்;

  • உடனடியாக முடிவுகளை எடுக்காமல், சற்று யோசித்து சொல்வதாய் சொல்லி சற்று காலத்தை கடத்தலாம்;

  • நம்பிக்கையான நபரிடம், ஆலோசனை கேட்கலாம்;

உணர்ச்சிவசத்தில் எதையும் செய்யாமல், சற்று காலம்கடத்தி பின் பதிலளிப்பது, பல தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கும்.


அன்றாட வாழ்க்கையோ, வியாபாரமோ

உணர்வுத் தூண்டல்கள்

ஒவ்வொறு கனமும் வெவ்வேறு வடிவங்களில்

வந்து கொண்டேதான் இருக்கும்;


எந்தவொரு உணர்வுத்தூண்டலுக்கும்

அதே கணத்தில் எதிர்வினையாற்றாமல்,

போதிய நேரம் எடுத்து

சிந்தித்து பொறுமையாக பதில் அளித்தால்

எல்லா சூழ்நிலைகளையும் சாதகமாக்கலாம்;


- [ம.சு.கு 23.12.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page