“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-72
யோசனைகளும் - யதார்த்த களமும்!!
அலுவலக வேலை அதிகமாக இருப்பதால், காலையில் சீக்கிரமாக அலுவலகம் செல்லுகிறீர்கள். அன்றைய தினம் யாருக்கு என்ன வேலை கொடுப்பது, எதற்கு முக்கியத்துவம் அளிப்பது என்று எல்லா திட்டங்களையும் வகுத்துவிட்டீர்கள். நீங்கள் யோசித்த வண்ணம் துவங்கத் தயாராக இருக்கும்போது, உங்கள் ஊழியர்களில் ஒருவர் விடுப்பு வேண்டி கைபேசியில் அழைப்பு வருகிறது. உங்களின் இன்றைய திட்டத்தில் 20% ஊழியர் விடுப்பாள் செய்ய முடியாததாகிறது. மற்ற ஊழியர்கள் நேற்றைய வேலையில் சிறிது பாக்கி உள்ளது, அதை முடித்துவிட்டு இதை செய்கிறோம் என்று சொல்கிறார்கள். நீங்கள் இன்று செய்ய திட்டமிட்டதில் 50% நடப்பதே சற்று சிரமமாகி விடுகிறது. ஏன் இப்படி?
நிறைய கற்பனைக் கதைகளை சொல்லக்கூடிய ஒருவர், அவற்றை எழுதலாமா என்று பலமுறை யோசித்துக் கொண்டிருந்தார். கடைசியாக ஒருநாள் செய்வதென முடிவெடுத்து எழுதத் துவங்குகிறார். தன் கதை சிறந்த புத்தகமாக மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டும் என்று ஆசை மனதில் ஊஞ்சலாடியது. முதல் ஓரிரு அத்தியாயங்களை மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கிறார். முதல் வாரத்தில் 2 அத்தியாயங்களை எழுதியவர், அடுத்த 2 அத்தியாயங்களை எழுத ஒரு மாதம் ஆனது. அடுத்து 2-ற்கு மூன்று மாதம் எடுத்தது. தன்னுடைய கதை குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாலும், அதை எழுத்தாக்க ஏனோ காலதாமதமாகிக் கொண்டே போனது. இது ஏன்?
இன்றைய பொழுதை உபயோகமானதாக, ஒவ்வொரு மனித்துளியும் மேம்பட்ட உற்பத்தியளிப்பதாக அமைக்க வேண்டுமென்று எண்ணுகிறோம். எண்ணிய வண்ணம் செயல்படுத்த நிறைய யோசனைகளும் வழிமுறைகளும் எண்ணத்தில் தொடர்ந்து வந்துபோகும். ஒவ்வொரு யோசனையை செயல்படுத்துவதற்கும், நம்மை சுற்றியுள்ளவர்களின் பங்களிப்பும், ஈடுபாடும் தேவைப்படும்போது, அவர்கள் அதை நம்முடைய கோணத்தில் ஏற்று, மேம்பட்ட தேவையையும், அவசரத்தையும் புரிந்து கொண்டு வேகமாக செயல்படுவார்களா? என்பது எப்போதுமே கேள்விக்குறிதான்.
சிறந்த கதை, கட்டுரைகளை எழுத எல்லோருக்கும்தான் ஆசை. ஆனால் 99% பேர் அதை, ஆசை மட்டத்திலேயே நிறுத்திக் கொள்கின்றனர். ஒரு பக்கம் கூட எழுத முயற்சிப்பதில்லை. மீதமுள்ள 1% மக்களில், பாதிக்கும் மேலானோர் எழுதும் ஆவலில் துவங்குகிறார்கள். ஒன்றிரண்டு பக்கங்களை தாண்டும்போது, ஏனோ எழுதுவது அவர்களுக்கு சலித்துபோகிறது. பின்னர் செய்யலாம் என்று தள்ளிவைக்கிறார்கள் அந்தப் “பின்னர்” என்ற கணம் வருவதே இல்லை. அதேசமயம், என்னவெல்லாம் எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர்களுள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. எண்ணிய எதையும் அவர்களால் எழுத முடிவதில்லை.
தடைகளை தாண்டி எழுத அமர்ந்தால், எண்ணங்கள் கோர்வையாக வருவதில்லை. அதனால் சீக்கிரத்தில் சலிப்பு வந்துவிடுகிறது. எழுத்தை முறையாக செய்ய விரும்பினால், தடைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, எழுதத் தோன்றும் எண்ணங்களை அவ்வப்போது குறிப்பெடுத்து, ஒழுங்குபடுத்தி, ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில் அமர்ந்து எழுதும் வழக்கத்தை ஏற்படுத்தினால், எழுத்து தானாக வசப்படும்.
ஆம்! ஆயிரம் ஆசைகள், எண்ணங்கள் தோன்றுவது சுலபம். அவற்றில் நமக்கு தேவையான எண்ணங்களையும் யோசனைகளையும் தேர்ந்தெடுத்து செயல்படுத்த, அதற்கென்று தனியாக திட்டமிட வேண்டும். எதுவும் தானாக நடந்து விடாது. நான் செய்து விடுவேன் என்று வீராப்பாக தொடங்கினாலும், மனிதனுக்கே உரிய இயல்பான சோம்பலும், சலிப்பும் சீக்கிரத்தில் உங்களை ஆட்கொண்டு உங்களை திசைதிருப்பும். அந்த கவனச்சிதறல்களை உணர்ந்து, உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளவதற்கான வழிமுறைகளை திட்டமிட வேண்டும். உங்களை நீங்களே தொடர்ந்து கவனித்து, உங்கள் வேலைகளை வடிவமைத்தால் மட்டுமே, நீங்கள் எண்ணிய யோசனைகளையும், திட்டமிட்டவைகளையும் முழுமையாய் செயல்படுத்த முடியும்.
எண்ணிய எண்ணியாங்கு முடித்திட, வெற்றிகள் கைகூட, நீங்கள் கவனிக்க வேண்டியவை;
ஆயிரமாயிரம் திட்டங்கள், வழிமுறைகளை யோசிக்கலாம். அவற்றை நிஜத்தில் செயல்படுத்த, நீங்கள் சார்ந்து சூழ்நிலைகள் ஒத்துழைக்குமா?
சூழ்நிலைகள் ஒத்துப் போனாலும், உங்களின் இயல்பான சலிப்பும்-சோம்பலும் உங்களை பாதிவழியில் திசைதிருப்பினால் என்ன செய்வது?
செயலில் வரும் இடர்பாடுகள், சிக்கல்களில் சிக்கும்போது, தன்னம்பிக்கையுடன் எதிர்த்து சமாளித்து முன்னேறுகிறோமா? அல்லது இடர்களுக்கு பயந்து விலகிவிடுகிறோமா?
ஒரு யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்கும்போது, முழு கவனத்துடன் அந்தவொன்றைச் செய்கிறோமோ? அல்லது அடுத்த யோசனைக்கு சீக்கிரத்தில் தாவிவிடுகிறோமா?
உங்களுக்கு விளையாட்டு வீரனாக ஆசை வரும்!
உங்களுக்கு மாயாஜாலம் செய்ய ஆசை வரும்!
உங்களுக்கு உலகத்தை சுற்றிவர ஆசை வரும்!
உங்களுக்கு நோபல் பரிசுபெற ஆசை வரும்!
உங்களுக்கு அழகை சுவைக்க ஆசை வரும்!
உங்களுக்கு சர்வாதிகாரியாக ஆசை வரும்!
உங்களுக்கு விமானம் ஓட்ட ஆசை வரும்!
உங்களுக்கு பணக்காரனாக ஆசை வரும்!
எல்லா ஆசைகளும், யோசனைகளும்
எல்லையில்லாமல் வந்து கொண்டேதான் இருக்கும்;
எல்லாமே சாத்தியமான ஒன்றுதான் – ஆனால்
எல்லாமே ஒருவருக்கே சாத்தியப்படுமா?
முட்டாள்தனமாக எல்லாவற்றையும் முயற்சித்தால்
எதையுமே சரிவர துவங்கவே முடியாமல்
திணரநேரிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்;
எதை நீங்கள் நிஜத்தில் செயல்படுத்துவதென்ற
தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும்;
யதார்த்தத்தில்
உங்கள் ஆசை, யோசனைகளில் – எதை
தேர்ந்தெடுத்து செயல்படுத்துவதென்றே
தனியாக யோசிக்க வேண்டும்!!
- [ம.சு.கு 20.12.2022]
Comments