top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-71 – சிக்கல்களை கணிக்கத் தவறிவிடாதீர்கள்?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-71

சிக்கல்களை கணிக்கத் தவறிவிடாதீர்கள்?


  • குழந்தை வளர்ப்பில் முதல் ஒரு வருடத்தை கவனித்திருக்கிறீர்களா? எப்போதும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களை உடன்வைத்தே குழந்தைகளை கவனிப்பார்கள். எத்தனையோ விடயங்களை பெரியவர்களின் துணை இல்லாமல் செய்யத் துவங்கி சாதிக்கும் மக்கள், ஏனோ குழந்தைகள் விடயத்தில் அந்த சோதனை முயற்சியை மேற்கொள்வதில்லை. மருத்துவர்கள்கூட, பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்க வற்புறுத்துகிறார்கள், இது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?

  • அலுவலகத்தில் ஒருசில மேலாளர்கள், தங்களின் குழுவை திறம்பட வழிநடத்தி திட்டங்களை குறித்து நேரத்தில் முடிப்பார்கள். ஒருசிலருக்கு காலதாமதங்கள் வழக்கமாக இருக்கும். என்னதான் அவர்கள் கூடுதல் நேரம் செலவிட்டு திட்டத்தை சரியாண நேரத்தில் முடிக்க கடுமையாக போராடினாலும், ஏதேனுமொரு சிக்கல் அதை தாமதப்படுத்திவிடுகிறது. திட்ட செயலாக்கத்தில், பல்வேறுபட்ட சிக்கல்கள் இருகுழுவிற்கும் வருகிறது. ஆனால் ஒரு குழு அதை சுலபமாக சமாளிக்கிறது, மற்றொரு குழு அதில் சிக்குண்டு நிலைகுலைகிறது. திட்டமிடுவதில் அப்படி என்னவேறுபாடு இவர்களுக்கு இடையே?

குழந்தை வளர்ப்பைப் பற்றி யோசிக்கத் துவங்கினோம். உங்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால், எங்கேனும் வலியிருந்தால், மற்றவர்களிடம் தெளிவாக சொல்லி, அதற்கான உபாயத்தை கேட்பீர்கள். ஆனால் குழந்தைக்கு, அதன் எல்லா பிரச்சினைகளுக்கும், ஒரேமாதிரி அழுவதற்கு மட்டுமே தெரியும். அதன் அழுகையையும், மற்ற சூழலையும் வைத்து என்ன பிரச்சனை என்று கண்டுபிடித்து உரியன செய்தால் மட்டுமே குழந்தையின் வலியை போக்கமுடியும்.


சூழ்நிலைகளைக் கொண்டு என்ன உபாதையாக இருக்கலாம் என்பதை யூகிப்பதுதான் அனுபவம். அதற்குத்தான் குழந்தைகளை வளர்த்துப் பழகிய பெரியவர்களை உடன் வைத்துக்கொள்கின்றனர். குழந்தைகளுக்கு வரும் சிக்கல்களை தவிர்க்க, எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது, பாலூட்டும் தாய் எதை உண்ணலாம், எதை உண்ணக்கூடாதென்று அனுபவத்தில் வழிநடத்தி குழந்தைகளுக்கு உடல்உபாதைகள் வராமல் காப்பார்கள்.


திட்டங்களுக்கான படிப்படியான செயல்களை பட்டியலிட்டு, உரிய காலநேரம் வகுத்து செயல்படுத்துவது முக்கியம். ஆனால் அந்த திட்டமிடல் மட்டுமே முழுமையன்று. திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்க, அதை எப்படி செய்ய வேண்டும் என்ற திட்டமிடுதலை தாண்டி, அதில் எந்த மாதிரியான தடங்கல்கள் வரலாம், அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற எதிர்மறை சிந்தனைகளையும் சிறிது கவனிக்க வேண்டும். ஒவ்வொரு திட்ட செயலாக்கத்திலும் எதிர்வரும் சிக்கல்களை கவனிக்க தவறினால், நாமும் எங்காவது முட்டிக்கொண்டு நிற்க நேரிடும்.


உங்கள் குழுவினர் எங்கு தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது, அதிலிருந்து என்ன சிக்கல் வரும், அவர்களுக்குள் என்ன கருத்துவேறுபாடு நிலவுகிறது, அவர்களின் செயல்களில் பொருத்தமின்மைகள் என்ன, என்று பல்வேறு கோணங்களில் முன்னரே யோசித்து, அவற்றிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், தவறுகளையும், சிக்கல்களையும் சரி செய்து முன்னேறுவது சுலபம். எந்த தலைவன் இந்த சிக்கல்களையும் யூகித்து அவற்றிற்கான திட்டமிடலையும் சரியாக செய்கிறானோ, அவனது காரியங்கள் நல்லபடியாக முடிகிறது.


ஆம்! நீங்கள் செய்கின்ற எந்த செயலிலும், என்ன சிக்கல்கள் வரலாம், அதற்கு முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம் என்று தொடர்ந்து சிந்தித்து உரியவற்றை முன்கூட்டியே செய்து கொண்டிருந்தால், உங்களின் பயணம் சுலபமாகும். வழியில் வரும் தடைகளை மன உளைச்சல் இல்லாமல், பக்குவமாக அனுகி சரிசெய்து முன்னேறலாம். யூகிக்காத பிரச்சனைகள் வந்தால்தான், தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது.

  • நீண்டதூர வாகனப் பயணமா! முன்கூட்டியே வாகனத்தை முழுபரிசோதனைக்கு அனுப்பி தயார் செய்து வைக்கலாம்;

  • குறித்த நேரத்தில் எங்கேனும் சென்றுசேர வேண்டுமா! வழியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கணக்கிட்டு, சற்று முன்னதாக கிளம்பலாம்;

  • வயிறு சரியில்லையா! ஒவ்வாத உணவுகளை தவிர்த்து, கஞ்சி அல்லது பழங்களை உண்டு வயிறை சாந்தப்படுத்தலாம்;

  • எங்கேனும் தேவையற்ற வாக்குவாதம் முற்றுகிறதா! கூடியவறை அமைதிகாத்து, அங்கிருந்து வெளியேறலாம்;

இந்தப்பட்டியல் மிகப்பெரியது. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் உங்களுக்கு என்ன சிக்கல்கள் வரலாம், உங்கள் குழுவிற்கு என்ன நெருக்கடிகள் வரலாம், அவற்றை தவிர்க்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டுமென்று நீங்கள் தான் தொடர்ந்து யோசிக்க வேண்டும். ஒருவேளை எல்லா திட்டங்களையும் தாண்டி இழப்பு நேர்ந்தால், அந்த இழப்புக்களை எப்படி குறைக்கவேண்டுமென்ற சிந்தனைகளும் ஒருபுறம் இருக்க வேண்டும்.


நம் இலட்சியங்களை அடைய

செய்ய வேண்டியவற்றை திட்டமிடுவதோடு

செய்யக்கூடாதவற்றையும் அறிந்திருக்க வேண்டும்;


எங்கெல்லாம் தவறு நேரக்கூடுமென்று

முன்னரே யூகிக்க முடிந்தால் – முன்னெச்சரிக்கையாக

செயல்பட்டு அவற்றை தவிர்க்கலாம்;


திட்டமிடல்களை மீறி நடக்கும் – எல்லா

சாத்தியக்கூறுகளையும் கணிக்க முடிந்தால்,

அவற்றிற்கான மாற்றுவழிகளை யோசித்துவைக்கலாம்;


- [ம.சு.கு 19.12.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page