“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-70
யாருக்கேனும் சளைத்தவர்களா நீங்கள்?
பள்ளி மாணவர்களுக்கு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பல தனியார் பள்ளி மாணவர்களும், சில அரசு பள்ளி மாணவர்களும் கலந்து கொண்ட போட்டியில் தனியார் பள்ளி மாணவர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தது. அவர்கள் அரசு பள்ளி மாணவர்களை ஒரு பொருட்டாக மதிக்காத அகங்காரம் தெளிவாக காணப்பட்டது. மேலும் தனியார் பள்ளி மாணவர்கள் நல்ல பயிற்சியின் காரணமாக அதிக வெற்றிகளை பெற்றது, அவர்களின் அகங்காரத்தை மேலும் உசுப்பேற்றியது. கடைசியாக நடைபெற்ற தடகள போட்டிகளின் முக்கியமான 100 மீட்டர் ஓட்டத்தில், மாணவ, மாணவிகளுக்கான இருபந்தயத்திலும் அரசு பள்ளி மாணவர்கள் முத்தாய்ப்பாய் முதலிடம் பிடித்து மற்ற எல்லா வெற்றி-தோல்விகளுக்கும் சேர்த்த, ஈடானதொரு வெற்றியை பதிவு செய்தது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. தனிப்பட்ட பயிற்சிகளுக்கு செல்ல பணவசதி இல்லாதிருந்தாலும், தங்களின் தினசரி உடற்பயிற்சியில் கவனமாக ஆற்றலை மேம்படுத்தி அந்த வெற்றியை பதிவுசெய்தது, அவர்களாலும் முடியும் என்பதை நிரூபித்தது.
கிராமங்களில் பொங்கல், கோவில் திருவிழா போன்ற விசேட நாட்களில், குழந்தைகள், பெரியவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். பெண்களுக்கான போட்டியில் பல பெண்கள் கலந்துகொள்ள சீக்கிரத்தில் முன்வரமாட்டார்கள். பல வற்புறுத்தல்களுக்குப் பின்னர் பங்குகொள்ளும் பெண்கள், ஆரம்பகட்ட சங்கோஜங்களைக் கடந்துவிட்டால், அவர்களது போட்டியின் வேகம் பல சமயங்களில் பிரமிப்பளிக்கும். எனக்கெதுக்கு இந்த விளையாட்டு என்று ஆரம்பத்தில் பங்கெடுக்க தயங்கியவர்களா, இப்படி முதல் பரிசை நோக்கி இவ்வளவு போராடுகிறார்கள் என்று நம்மையே ஆச்சரியப்பட வைப்பார்கள்! போட்டியில் நடுவர் தெரியாமல் ஏதேனும் தவறு செய்துவிட்டால் நேருக்கு நேர் தட்டி கேட்பார்கள். ஒருசில சமயங்களில் வாக்குவாதம் முற்றி கைகலப்பே ஆகியிருக்கின்றன. இப்படி உறங்கிக் கிடக்கும் இந்த புலிகள், சில சமயம் வெறிகொண்டு எழுந்துவிட்டால், எதிராளி யாரென்பது அவர்களுக்கு ஒருபொருட்டேயல்ல!
சமுதாயத்தில் ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாத யதார்த்தம். அது மாணவர்களின் எண்ணங்களிலும் படிப்படியாக பதிந்துவிடுகிறது. தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி படிக்கிறார்கள் என்ற ஒரு வேறுபாட்டை தவிர, மாணவர்களின் தனித் திறமைகளில் எந்தவொரு ஏற்றத்தாழ்வும் இல்லை. ஆனால் அந்த யதார்த்தம் மாணவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் புரிவதில்லை. பணம் இருப்பவர்கள் செலவழித்து கூடுதல் பயிற்சி பெருகிறார்கள். அந்த பயிற்சி அவர்களின் திறனை சற்று மேம்படுத்துகிறது. அதேசமயம் புத்திசாலியான ஏழை மாணவர்கள், மற்ற போட்டியாளர்களை கூர்ந்து கவனித்து அந்த நுணுக்கங்களை கற்றுக் கொள்கிறார்கள்.
இதிகாசத்தில், ஏகலைவன் கதையை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். மானசீகமாக குருவை வேண்டி, மற்ற மாணவர்களின் செயல்பாடுகளை கவனித்து, கடுமையாக பயிற்சித்து பெரும் வீரன் ஆனார். தனிமனித ஆற்றல் சார்ந்த போட்டியில், பணம், இனம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் ஒரு பொருட்டேயல்ல. இங்கு யாரும் யாருக்கும் சளைத்தவர் அல்ல! அவரவர்களின் தன்னம்பிக்கை, பயிற்சி, போராடும் குணம், சமயோசித செயல்பாடுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும்.
ஆண்-பெண் என்ற இருபாலருக்கு இடையிலான போட்டியும் அப்படித்தான். இயற்கையான உடல் அமைப்பு சார்ந்த வேறுபாடுகளையும், அவற்றின் திறன்களையும் தவிர்த்து ஏனையவற்றில் யாதொரு ஏற்றத் தாழ்வும் இல்லை. பெண்கள் போட்டியில் கலந்து கொள்ளாமல் தன் கணவர்களுக்கு பின்னே நிற்கிறார்கள் என்பதற்காக அவர்கள் எவ்வகையிலும் சளைத்தவர்களல்ல. ஆண்டுதோறும் கல்வியில் தேர்வுவிகிதமும், தங்கப்பதக்கங்களை வெல்வதும் அவர்கள்தான் அதிகம். பெண்கள் களம் புகாத வரை ஆண் திறமையானவன் என்று மார்தட்டிக்கொள்ளலாம். களத்தில் குதித்துவிட்டால், போட்டியில் இருவரும் சமமே. வெற்றி-தோல்விகள் அவரவர்களின் தன்னம்பிக்கை, திறமைகள், போராடும் ஆற்றலை பொறுத்து அமைகிறது. இங்கு பால்-இன-மொழி-பண ஏற்ற தாழ்வுகள் எதுவும் பொருட்டல்ல.
காலங்காலமாய் சமுதாயத்தில் ஊறிவிட்ட ஜாதி-மத பிரிவினைகள், ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகள், இன-மொழி பாகுபாடுகள், ஒரு சாராரை தாழ்வு மனப்பான்மையிலேயே நிறுத்தியிருக்கிறது. அந்த தாழ்வுமனப்பான்மை தேவையற்றதென்ற புரிதல் அவர்களுக்கு ஏற்பட காலதாமதமாகலாம். ஒரு சிலருக்கு புரியாமலே போகலாம். இந்த வேறுபாடுகள் எல்லாம் பழமையான அடக்குமுறை, தேவையற்ற மாயை என்ற புரிதல் ஏற்பட்டு விட்டால், சமுதாயம் சுட்டிக்காட்டும் எந்தவொரு ஏற்றத்தாழ்வையும் பொருட்படுத்த தேவையில்லை. யார் வேண்டுமானாலும், தன் திறமைகளால் எதையும் நிரூபித்து முன்னேறலாம்.
இன்றைய காலகட்டத்தில், தங்களின் தாழ்வு மனப்பான்மையை வெல்வது தான் முக்கியம். அதைக் கடந்து விட்டால், தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்து விட்டால், எந்த சிகரமும் எட்டிவிடும் தூரம்தான்.
வென்றவருக்கு தோற்றவர் சளைத்தவரா?
ஒரு தோல்வி நிரந்தரமன்று;
எதிராளியின் பயிற்சியும், முயற்சியும், சமயோசிதமும்
அப்போது ஜெயித்திருக்கிறதே தவிர
தனிமனிதனாக யாரும் தாழ்ந்து விடவில்லை;
அடுத்த முறை அந்த பயிற்சியும் முயற்சியும்
நீங்கள் செய்து போராடினால்
யாருக்கும் யாரும் சளைத்தவர் அல்ல என்பதை
நீங்களே உலகிற்கு உணர்த்தலாம்;
- [ம.சு.கு 18.12.2022]
Comments