“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-68
நேர்மறை சூழலை உருவாக்குங்கள்!
இரட்டையர்களாக பிறந்த சகோதரர்களில் ஒருவன் நன்றாக படிக்கிறான், மற்றவனுக்கு படிப்பில் கவனம் இல்லை. ஒரே பள்ளியில் இருவரும் பயின்றாலும், இருவருக்கும் இருவேறு நண்பர்கள் கூட்டம். சகோதரர்களுக்கு இடையே பெரிதாய் வேற்றுமையுணர்வு இல்லாவிட்டாலும், அவர்கள் சார்ந்துள்ள நண்பர்கள் கூட்டம் அவர்களை தங்கள் போக்கில் பெரிதாய் ஆக்கிரமித்துள்ளது. ஒரு கூட்டம் கல்விக்கும், வாசிப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. அதைச் சார்ந்தவன் நன்றாக படிக்கிறான். மற்றொரு கூட்டம் கேளிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது, அதைச் சார்ந்த மற்றவனுக்கு படிப்பில் கவனம் வருவதில்லை இது யார் தவறு?
ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில், விருந்தினர் வாகனத்திலிருந்து இறங்கியது முதல் அவர் விடுதியை விட்டு விலகும் நாள் வரை, அவருக்கு இராஜ உபசரிப்பு நடக்கிறது. அதே சமயம், ஒரு சாதாரண விடுதியில் 4-5 பேர் வேலை செய்தாலும், விருந்தினர் வருகையையும், இருப்பையும், செல்வதையும் பெரிதாய் யாரும் பொருட்படுத்துவதில்லை. விருந்தினரே கேட்டால்கூட பொருட்களோ, சேவையோ அவ்வளவு சீக்கிரத்தில் கிட்டுவதில்லை. இந்த இரண்டு விடுதிகளுக்கும் இடையே கட்டண வேறுபாடு ஒரு காரணமாக இருந்தாலும், பணத்தைத் தாண்டி, ஒரிருவர் மட்டுமே வேலை செய்யும் விடுதியானாலும், அவரவர்கள் செய்யும் வேலையை சிறப்புற செய்யலாமே?
நம்முடைய நட்பு வட்டம், நாம் அதிகநேரம் செலவிடும் நபர்கள் எப்படி இருக்கிறார்களோ, அதைப்போலவே நாமும் மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அவர்களின் வார்த்தை பிரயோகங்களே நமக்கும் இயல்பாகிறது [அவர்கள் மரியாதைக் குறைவான வார்த்தைகளை பேசுபவர்களாக இருந்தால், அதுவே பிள்ளைகளுக்கும் வருகிறது]. அந்த கூட்டத்தின் எண்ணங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்முள் திணிக்கப்படுகிறது. பள்ளியானாலும், கல்லூரியானாலும் நண்பர்கள் கூட்டம் மாணவர்களின் முக்கிய வழிகாட்டியாகிறது. அவர்களின் சேர்க்கை சரியாக இருந்தால், செயல்களும் நல்லனவாக இருக்கும்.
ஐந்து நட்சத்திர விடுதியில், ஊழியர்களுக்கு தொடர்ந்து விருந்தினர் சேவை குறித்து பயிற்சி அளித்துக் கொண்டே இருப்பார்கள். விடுதியின் இயக்குனர் முதல் கடைக்கோடி சுத்தம் செய்பவர் வரை, சேவை குறித்த பேச்சும், செயல்பாடுமே பிரதானமாக கவனிக்கப்படும். அந்த நட்சத்திர விடுதிகளில், விருந்தினர் சேவை மட்டுமே எல்லோர் சிந்தனையிலும் தொடர்ந்து திணிக்கப்பட்டு, அன்றாட வாழ்க்கை முறையாக்கப்படுவதால், அது எல்லோருக்கும் இயல்பாகிவிடுகிறது. அதேசமயம் சாதாரண விடுதிகளில் சேவை குறித்து எந்தவொரு பயிற்சியும் தருவதில்லை. அதை பிரதானமாக பேசுவதும் இல்லை. அதனால், அந்த ஊழியர்கள் வாடிக்கையாளர் சேவையை ஏதோ கடனுக்கு செய்வதாய் நினைப்பதால், அந்த சேவையின் தரம் மலிந்துவிடுகிறது.
10 குடிகார நண்பர்கள் மத்தியில் ஒருவன் குடிக்காமல் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. புகைப்பிடிப்பவர்கள் மத்தியில் இருந்தால், ஒருவன் புகைபிடிக்காவிட்டாலும், கெடுதல் இருவருக்கும் சமமே. கல்வியைப் பற்றியும், நூல்களை பற்றியும் பேசும் கூட்டத்தில் இருப்பது கேள்விச் செல்வமாகவே அறிவு வளர்வதற்கு வாய்ப்பாகிறது. கல்வியோ-கேளிக்கையோ, வேலையோ-விளையாட்டோ, எதுவாயினும் உங்களை சுற்றியுள்ளவர்களின் தாக்கம் உங்களில் அதிகம் வெளிப்படும். ஆதலால் நீங்கள் யாருடன் நேரம் செலவிடுகிறீர்கள், எந்தச் சூழலில் பிரயாணிக்கிறீர்கள், என்பது உங்கள் இலட்சியத்தை அடைய அதிமுக்கியமான விடயம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நீங்கள் எந்த சூழலில் வளர்ந்தீர்கள் என்பது உங்களை பெரும்பாலும் வடிவமைத்திருக்கும். ஒரு சிலர் வாதிடுவதற்காக “100 திருடர்களுக்கு மத்தியிலும் நல்லவர்கள் உருவாகிறார்கள் தானே” என்று சொல்லலாம். அவர்கள் ஒரு நல்லவனை பார்த்து, அந்த விதிவிலக்கை பொதுவாக பேசுகின்றனர். நான் மீதமுள்ள 99 திருடர்கள் தான் யதார்த்தம் என்கிறேன். ஓரிரு விதுவிலக்குகள் நம்முடைய வாழ்க்கையல்ல. அன்றாட வாழ்க்கையில் நம்மை சார்ந்த சமுதாயத்தோடும், சிறிய கூட்டத்தோடும் பயணிப்பது தான் நடைமுறை. சாதி, மத சண்டைகள் நிறைந்த சமுதாயத்தில், பிரிவினை எண்ணமே எல்லோருள்ளும் வளர வாய்ப்பு அதிகம். நீங்களும் அந்த 99 நபர்களில் ஒருவராக பயனிக்கவே சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதால், அந்த திருட்டைவிட்டு விலக விரும்பினால், அந்தக் கூட்டத்திலிருந்து முற்றிலுமாய் விலகி வேறு சூழலுக்கு நகர்ந்தால் தான் சத்தியமாகும்.
நீங்களும், உங்கள் நிறுவனமும் வெற்றி பெற விரும்பினால்
முதலாவதாக, நேர்மறையான சிந்தனைகளை அதிகரிக்க, நேர்மறைகளை அதிகமாக பேசுங்கள்;
எதிர்மறை எண்ணங்களையும், எதிர்மறை நபர்களையும் இனங்கண்டு சீக்கிரத்தில் விலக்குவது நிறுவனத்திற்கு நல்லது [ஏனெனில் சராசரியானவர்கள் பலர் எந்த பக்கம் சாய்வார்கள் என்பதை கணிக்க முடியாது]
ஆக்கத்தைக் குறித்தும், ஒழுக்கத்தை குறித்தும், ஆயிரமாயிரம் முறை தொடர்ந்து உரக்கச் சொல்லிக் கொண்டே இருங்கள் – அவை எல்லோரது இரத்தத்தில் ஊர வேண்டும்;
ஆக்கத்தை குறித்து யோசிப்பது அதிகரித்தால்
அழிவுகள் தானாய் குறைந்து போகும்;
“முடியாது”, “முடியாது” என்று சொல்பவர்கள் மத்தியில்
“ஏன் முடியாது?” என்று சராசரியாளர்கள் கேட்பதில்லை;
கேட்கின்ற விதிவிலக்காளர்கள் சாதிக்கிறார்கள்;
அசாத்திய திறமை படைத்த
தனித்துவமானவராக நீங்கள் இல்லாவிட்டாலும்
சுற்றமும் நட்பும் “முடியும்” என்று சொன்னால்
நம்பிக்கையோடு நீங்களும் முடிக்க முயற்சிப்பீர்கள்;
- [ம.சு.கு 16-12-2022]
Kommentare