top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-65 – நீங்கள் (எ) சலிப்பு/சோம்பல்!!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-65

நீங்கள் (எ) சலிப்பு/சோம்பல்!!


  • சனவரி மாதம் முதல் வாரத்தில், எல்லா உடற்பயிற்சி கூடங்களிலும் எண்ணற்ற கூட்டம் இருக்கும். இந்த வருடம் முதல் உடற்பயிற்சி செய்வேன் என்று எண்ணற்றவர்கள் உறுதிமொழி எடுத்து ஆயிரக்கணக்கில் பணத்தைக் கட்டி கூடத்தில் உறுப்பினராக சேர்ந்திருப்பார்கள். மிகுந்த உற்சாகத்துடன் எல்லோரும் முதல் வாரம் பயிற்சி செய்வார்கள். ஆனால் சனவரி மூன்றாவது நான்காவது வாரங்களில், பயிற்சிக் கூடத்தில் பாதியளவு கூட்டம் மட்டுமே இருக்கும். ஏன்?

  • புதிய யோசனைகளின் அடிப்படையில், நிறைய புத்தம்புது வியாபார நிறுவனங்களும், கடைகளும் திறக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் பேரார்வத்துடன் கடைக்குப் பெயர் வைப்பது முதற்கொண்டு சிறப்பாக செய்ய வேண்டும் என்று ஓடிஓடி செய்திருப்பார்கள். வாடிக்கையாளர் சேவை, நிறுவன செயல்பாட்டு, ஊழியர்கள் பயிற்சி என்று எல்லாவற்றிலும் தேடித்தேடி குற்றங்குறைகளை சரி செய்வார்கள். அதே சுறுசுறுப்பும், ஆர்வமும் ஆறு மாதத்திற்குப் பின் இருப்பதில்லை. ஓரிரு வருடங்களுக்கு பின்னர் பார்த்தால், அந்த கடை / நிறுவனம் / யோசனைகளுக்கு முற்றிலுமாய் பூட்டு போடப்பட்டு விடுகிறது. ஏன் இந்த மாற்றம்?

எல்லோருக்கும் உடற்பயிற்சி செய்து தன் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆசை. ஆண்டின் துவக்கத்தை ஒரு ஆரம்பமாக வைத்து, புத்தாண்டு தீர்மானமாக சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையுடனும், மனஉறுதியுடனும் துவக்குகிறார்கள். அப்படித்தான் எண்ணற்ற புதிய உறுப்பினர்கள் உடற்பயிற்சி கூடத்தில் வருடத்தின் முதல்மாதத்தில் பதிவு செய்கின்றனர். ஆனால் அவர்களில் பாதிபேர் அடுத்த பிப்ரவரி மாத சந்தா செலுத்தி தொடர்வதில்லை என்பது யதார்த்தம்! கிட்டத்தட்ட எல்லா உடற்பயிற்சிக் கூடங்களிலும் இது வாடிக்கையான ஒன்று. புத்தாண்டின் சபதங்கள் என்ன ஆயிற்று என்று கேட்டால், தன்னால் “முடியவில்லை” என்று சாக்கு சொல்வார்கள். ஒரு வாரம் செய்தவர்களால், ஒரு மாதம்கூட தொடர முடியவில்லை என்பது இயலாமையா? சோம்பேறித்தனமா?


நடைமுறையில், ஒருவாரம் நீடித்த உற்சாகம் படிப்படியாக குறையத்துவங்கும். காலை சீக்கிரம் எழுந்திருக்கவே மனம் ஒத்துழைக்காது. இயல்பாய் சோம்பலை விரும்பும் நம் உடல், ஏதேனும் ஒரு காரணத்தைத் தேடி விடுப்பெடுக்க முயற்சிக்கும். இதுதான் மனிதனின் இயல்புநிலை. உற்சாகமும் உறுதிப்பாடும் சில நாட்களிலேயே கரைந்து இயல்பு நிலைக்கு வந்துவிடும். இந்தக் தருணத்தில் யார் மனஉறுதியுடன் சோம்பேறித்தனத்தை கடந்து நிற்கிறரோ, அவரால் மட்டுமே அடுத்தநிலைக்குப் போக முடியும். மாறாய், சோம்பலுக்கு இன்றொரு நாள் மட்டும் என்று செவி சாய்ப்பவன், படிப்படியாய் ஒரு நாள் என்பது ஒரு வாரம், ஒரு மாதமாகி முற்றிலுமாய் தடைபட்டுப் போகிறது. இந்த சோம்பல் தான் உங்கள் வெற்றிப் பாதையில் சந்திக்கும் மிகப்பெரிய தடைக்கல்.


வியாபாரத்தில் ஆரம்பத்தில் இருந்த உற்சாகம், படிப்படியாக சலிப்பாக மாறும்.

  • செய்ததையே திரும்பத் திரும்பச் செய்வது மிகவும் சலிப்படையச் செய்யும்;

  • ஊழியர்கள் செய்த தவறையே திரும்பத்திரும்ப செய்வது வெறுப்பேற்றும்;

  • சில வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகள் கோபத்தை தூண்டும்;

இவை எல்லாவற்றையும் சகித்து, புன்முறுவலுடன் தொடர்ந்து உழைப்பவனால் மட்டுமே வெற்றிகாண முடியும். புதிய யோசனைகளில் துவக்கிய முயற்சிகளில் எண்ணற்ற பின்னடைவுகள் வரும். தொடர்ந்து வரும் சிக்கல்களுக்கும், தோல்விகளுக்கும் துவண்டால், புதிய சரித்திரம் படைக்க முடியாது. தோல்விகளும் சிக்கல்களும் நம் மன உறுதியை அசைத்துப் பார்க்கும். ‘என்ன இது?’ என்று சலிப்பும், வெறுப்பும் உள்ளத்தில் உருவாகும். அதை கடந்து முன்னேறுபவன் மட்டுமே சாதிக்க முடியும்.


உங்கள் வெற்றிப் பாதையில் நீங்கள் சந்திக்கும் முதல் தடைக்கல்லும், பெரிய எதிரியும் இவைகள் தான்.

  • உங்கள் சோம்பேறித்தனம்!

  • உங்கள் எண்ணத்தில் தோன்றும் சலிப்பும்! வெறுப்பும்!

இவை சாதாரணமான எதிரிகள் அல்ல. புறத்தில் வரும் எதிரிகளை சமாளிக்கலாம். ஆனால் நம் அகத்தினுள்ளே துவங்கும் இந்த எதிரிகள், நம் தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் முற்றிலுமாய் சீரழிக்க கூடியவர்கள். இதை வெல்வதற்கான போர்தான், நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் முதல் உலகமகா யுத்தம்.


அப்படியானால் இது வெல்லவே முடியாத போரா? வெல்வதற்கு மிகப்பெரிய திட்டம் வேண்டுமா? என்று நீங்கள் யோசிக்கலாம். யதார்த்தம் யாதெனில், இதை வென்றெடுக்க மிக எளிமையான வழி ஒன்றுண்டு. வெறுமனே உங்கள் மனத்தை சற்று ஏமாற்றினால் போதும்:

சோம்பலும் சலிப்பும் வந்தால், யோசிக்காமல் சட்டென்று எழுந்து 5 நிமிடம் அந்த செயலை செய்து விடுங்கள். பின்னர் அது தானாக முழுவதுமாக நிகழ்ந்தேறிவிடும்.

ஆம்! இந்த சோம்பலையும் சலிப்பையும் வெல்ல ஒரே வழி அதைப்பற்றி யோசிக்காமல் சட்டென்று களத்தில் குடிப்பதுதான். 2-3 நிமிடங்கள் அந்த எண்ணத்தை கடந்து விட்டால், களத்தில் காரியத்தை துவக்கி விட்டால், மற்றவைகள் எல்லாம் தானாக நடக்கும்.


சோம்பலை விரட்ட

சலிப்பை வென்றெடுக்க

சட்டென்று களத்தில் குதியுங்கள்;


யோசிக்கத் துவங்கினால்

சோம்பல் உங்களை வென்றுவிடும்;


மனத்தின் மாயை வென்றால் – நீங்கள்

உலகத்தை வெல்ல தகுதியடைவீர்கள்;


எல்லாவற்றையும் “நன்கு யோசித்து செய்”

என்று பெரியவர்கள் செல்வர்;

சோம்பலையும் சலிப்பையும் வெல்ல ஒரேவழி

“யோசிக்காமல் களம்புகுவது” மட்டுமே;


- [ம.சு.கு 13-12-2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Kommentarer


Post: Blog2 Post
bottom of page