top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-63 – எது முக்கியம் - நீங்களா? பொருட்களா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-63

எது முக்கியம் - நீங்களா? பொருட்களா?


  • நன்றாக படிக்கக்கூடிய மாணவி, ஏதோ காரணத்தினால் மருத்துவ தகுதித் தேர்வை சரியாக எழுத முடியவில்லை. தேர்விலே தோல்வியுற்றால் வீட்டிலே திட்டுவார்கள் என்ற பயத்தில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். “ஒன்றுமில்லாத தேர்விற்கு பயந்தா எங்களை விட்டுப் பிரிந்தாய்?” “உன்னைவிடவா எங்களுக்கு அவை முக்கியம்?” என்று பெற்றோர்கள் கதறி அழுததைக் கேட்க அந்த மாணவி உலகத்தில் இல்லை. கடைசியில் அந்த தேர்வில், அந்த மாணவி தேர்வாகியிருந்தார் என்பது அவர்களை மேலும் வருத்தமடையச் செய்தது. இப்படி தேர்வு முடிவுகளுக்கும், பெற்றோர்கள் திட்டுவதற்கும் பயந்து விலைமதிப்பற்ற உயிரையே மாய்த்துக் கொள்வது சரியா?

  • ஒரு மலைச்சரிவிலே இருந்த பண்ணை வீடு திடீரென்று மண் சரிவிலே முற்றிலுமாய் இடிந்து மண்ணுக்குள் புதைந்தது. கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டிய அந்த பண்ணை வீட்டை இழந்தமைக்காக அந்தக் தம்பதியர் வருத்தப்படாமல் இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் அங்கு நண்பர்களுடன் தங்கியிருந்த அவர்களின் ஒரே மகன், அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஏதோ பொருள் வாங்க நண்பர்களுடன் வெளியே சென்றதால் உயிர்தப்பியுள்ளான். அந்த இயற்கை சீற்றத்தில் வீடு மட்டும் போனதால் பரவாயில்லை – ஒருவேலை மகனும் போயிருந்தால்! என்று யோசித்தார்கள்... இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்கள்...

வருடா வருடம் தேர்வுகள் வந்து போகின்றன. ஒருமுறை சரியாக எழுதாவிட்டால், அடுத்த முறை முயற்சிக்கலாம். அதுவும் முடியாவிட்டால், பிற துறைகளை தேர்ந்தெடுத்து அதில் கல்வியை தொடரலாம். ஒருவேலை படிக்கவே முடியாது போனாலும், தொழில் செய்து முன்னேறலாம். ஆனால் தேர்வுகளுக்கும், அதன் முடிவுகளுக்கும் பயந்து உயிரை மாய்த்துக் கொண்டால், அவர்கள் இழப்பதன் மூலம் பெறுவது என்ன?


இயற்கை சீற்றத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நம் கைமீறிய செயல்களில், எண்ணற்ற செல்வத்தை இழக்கலாம். ஆனால் அந்த துரதிர்ஷ்டங்களில் இருந்து நாம் உயிர்தப்பினால், அதனிலும் மகிழ்ச்சிகரமான விடயம் ஏதாவது உண்டா? வாகன விபத்தில் உங்கள் வாகனம் முற்றிலுமாய் சேதாரமாகலாம், ஆனால் இருக்கை கட்சைகளும், காற்றுப் பைகளும் உங்களை காப்பாற்றினால், அதனினும் ஒரு அதிர்ஷ்டமான தருணம் உண்டா? நீங்கள் பத்திரமாக இருந்தால் இன்னும் பெரிய வாகனம் வாங்கலாம். நீங்கள் இல்லாமல் வாகனம் மட்டும் மிஞ்சி இருப்பதில் என்ன பயன்?


என்னடா, இந்த தலைப்புக்கு பெரிய விபத்துகளை மட்டுமே உதாரணமாக கூறுகிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம். அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கும் எண்ணற்ற கொலை-கொள்ளைகளும், சூழ்ச்சி-துரோகங்களும் செல்வத்தை பிரதானப்படுத்தி, உயிரின் மதிப்பை, உறவுகளின் மதிப்பை, மனிதத்தின் மாண்பினை பேணாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

  • வீடு சரிந்தால் புதிதாய் கட்டிக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் சரிந்தால் யார் ஈடுசெய்வார்?

  • மதிப்பெண் குறைந்தால் வேரொன்றை படிக்கலாம். ஆனால் நீங்கள் போனால், உங்கள் பெற்றோருக்கு யார் இருக்கிறார்கள்?

  • கொள்ளையர்களுடன் நகையைக் காப்பாற்ற போராடி, உங்கள் உயிரை மாய்த்தால், பொருளை காத்ததில் என்ன பயன்?

இதே கேள்விகள் தான் வியாபாரத்திலும் அவ்வப்போது வரும். நீங்கள் தயாரித்து விற்ற பொருட்களில் ஏதேனும் குறை இருப்பதாக வாடிக்கையாளர் சொன்னால், அந்த பொருளை உடனடியாக சரி செய்து கொடுத்தோ அல்லது மாற்றுப் பொருளை கொடுத்தோ அந்த வாடிக்கையாளரின் நம்பிக்கையையும், நிறுவனத்தின் நற்பெயரையும் தக்கவைக்கலாம். ஆனால், விற்றபின் அந்த பொருளுக்கு நீங்கள் பொறுப்பில்லை என்று சொன்னால் அது சரியா? பொருட்களுக்கு உரிய சேவை கொடுக்கும் செலவை குறைக்க முற்பட்டால் வந்த வாடிக்கையாளரையும், வரப்போகின்றவர்கள் பலரையும் இழக்க நேரிடுமே! உங்களுடைய இலாபத்தை மட்டுமே பார்த்தால், உங்கள் மீதான நம்பிக்கையும், நாணயயும் சந்தையில் சரிந்து போகுமே!


பணத்திற்கும், பொருளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மனிதத்தன்மையை இழப்பதில் என்ன சாதிக்கப்போகிறீர்கள்? சொத்துத் தகராறில் சகோதர சகோதரிகளிடம் சண்டையிட்டு பிரிந்துவிட்ட ஒரு பெரியவர், தன் வயதான காலத்தில் சொன்னார், “அன்று சொத்துக்காக என் சொந்தங்களை உதறினேன் - இன்று எனக்கு சொத்தும் இல்லை, சொந்தமும் இல்லை” என்று கண்கலங்கினார்.


விலைமதிப்பற்ற முத்துக்களை எடுக்க கடலில் மூழ்கி முயற்சிக்கிறீர்கள். மூச்சுமுட்டினால், வெளியேவந்து மூச்சை விட்டு ஆசுவாசப்படுத்தி பின்னர் முயற்சித்து முத்தை எடுத்தால், அந்த முத்தின் மதிப்பை நீங்கள் அனுபவிக்க முடியும். அதைவிடுத்து ஆழத்தில் முத்தை எடுத்தாலும், வெளியே வரும்முன் மூச்சுத்திணறலில் உயிரைவிட்டால், அந்த முத்தினால் உங்களுக்கென்ன பயன்?


என் வாழ்க்கைக்கு எது முக்கியத் தேவை?

இந்த கேள்விதான்

நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது;


மண், பொன், பெண் என்று

ஆயிரம் ஆசைகள் இருக்கலாம் – ஆனால்

அதற்கு விலையாய் எதைக் கொடுப்பீர்கள்

என்பது மிகப்பெரிய கேள்வி;


நீங்கள் சேர்கத்துடிக்கும் சொத்துக்கள்

உங்கள் உயிருக்கு ஈடாகுமா?

உங்கள் குடும்பத்திற்கு ஈடாகுமா?


எந்த தருணத்திலும் – உங்களுக்கு

எது முக்கியம் என்ற தெளிவு இருந்தால்

வாழ்க்கை மனஉளைச்சல் இல்லாமல்

நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.


- [ம.சு.கு 11.12.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page