“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-62
இன்னும் சிறப்புற செய்ய முடியுமா?
நமக்கு ஆரம்பப் பள்ளியில் “அ,ஆ,இ,ஈ,..” சொல்லிக் கொடுத்த முறை சாதாரணமாக இருந்தது. காலப்போக்கில் அதையே குழந்தைகளுக்கு பாட்டு வடிவில் சொல்லிக் கொடுத்தனர். இன்று அந்தப் பாட்டுடன் ஆசிரியர்கள் நடனமாடியும், நடித்துக் காட்டியும் குழந்தைகளுக்கு ஆர்வத்தை தூண்டி கற்பிக்கின்றனர். அன்றும் இன்றும் பாடம் ஒன்றுதான். ஆனால் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறையை மேம்படுத்திக் கொண்டனர்.
1000 ஆண்டுகளுக்கு முன்னர் பயிர் செய்த உண்ட நெல்லையும் பருப்பையுமே இன்றும் நாம் விவசாயம் செய்து உண்டு வருகிறோம். ஆனால் அன்று ஒரு ஏக்கருக்கு உற்பத்தியான நெல்லின் அளவைக் காட்டிலும், இன்று பன்மடங்கு உற்பத்தியாகிறது. அன்று அரிசியை கொண்டு சாதம் வடித்தனர், இட்லி-தோசை சமைத்தனர். இன்று அதே அரிசியல் 100 வகை உணவுகளை சமைத்து பரிமாறுகின்றனர். எப்படி இந்த மாற்றம்?
இன்று கற்றலின் தேவை அதிகரித்துவிட்டது. அதனினும் முக்கியமாக கற்றலின் வேகம் மிகமிக அதிகரித்துவிட்டது. அன்று பால்வாடிகள் இருக்கவில்லை. 6 வயதில் கல்வி துவங்கியது. இன்று 3 வயதில் பள்ளிப்படிப்பு துவங்குகிறது. அந்த 3 வயது விளையாட்டுத்தனம் நிறைந்த பிள்ளைக்கு, கற்றலில் ஆர்வத்தை தூண்டி எப்படி கற்பிப்பது என்று ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் தொடர்ந்து யோசித்து கற்பிக்கும் முறைமைகளை மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
பயிரிட்ட நிலங்கள் மாறவில்லை. பயிரிட்ட தானியங்களும் பெரிதாய் ஏதும் மாறவில்லை. ஆனால் உற்பத்தி பெருகி உள்ளது. உணவில் எண்ணற்ற புதிய வகைகள் கிடைக்கிறது. உழுதுகொண்டிருக்கும் அதே நிலத்தில் மகசூலை பெருக்குவது எப்படி என்று தொடர்ந்து ஆராய்கின்றனர். புதிய வகை கலப்பின தானிய வகைகளை உருவாக்குகின்றனர். ஒரே வகையான இட்லி சாப்பிட்டு சலித்து போய்விடுகிறது என்பதற்காக, காய்கறி இட்லி, பொடி இட்லி, குழந்தைகளுக்கு குட்டி இட்லி என்று அதன் வடிவத்தில் தொடர்ந்து மாற்றத்தினை ஏற்படுத்தி உண்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டுகின்றனர்.
நம் தந்தையார் செய்ததை அப்படியே இன்று நாமும் செய்து கொண்டிருப்பதில் என்ன முன்னேற்றம் இருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன்னர் செய்த முறையை இன்றும் பின்பற்றினால், காலத்தின் வேகத்திற்கும், அதிகரித்துவிட்ட மக்கள் தொகைக்கும் சமுதாயத்தால் ஈடுகொடுக்க முடியாது. தேவைகள் அசுரவேகத்தில் அதிகரித்து வருவதால், அவற்றை சமாளிக்க மனிதன் புதுமைகளை தொடர்ந்து ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
எதிலும் 100% முழுமை என்ற நிலையை இன்னும் மனிதகுலம் கண்டுணரவில்லை. எல்லாவற்றிலும் இன்னும் எண்ணற்ற மேம்பாடுகளை புகுத்த முடியும். நேற்று செய்ததை இன்று இன்னும் சிறப்பாக செய்வதற்கு யார் முயற்சிக்கிறாரோ, அவரே அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறுகிறார். நேற்று செய்ததை அப்படியே இன்றும் செய்தால்போதும் என்று எண்ணுபவர்கள், அவ்விடத்திலேயே தேங்கி, படிப்படியாக தேய்ந்து போகின்றார்.
செய்து வருகின்றவற்றில் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்தி, உற்பத்தியை பெருக்குவதும், தரத்தை மேம்படுத்துவதும் தான் நம்முடைய உண்மையான வளர்ச்சி.
உங்கள் லட்சியத்தில் வெற்றி கான விரும்பினால்
செய்து கொண்டிருப்பதை தொடர்ந்து மேம்படுத்துங்கள்;
தினமும் குறைந்தது 1% வளர்ச்சியை ஏற்படுத்துங்கள். ஒராண்டின் கூட்டுத்தொகையில், மிகப்பெரிய மாற்றத்தை அந்த வளர்ச்சி ஏற்படுத்தும்.
இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற பழமையான முறைமைகள் இருந்தால், “ஏன்?” என்று கேள்வி கேளுங்கள். உற்பத்தி முறைமைகளை மாற்றலாம். சிலசமயம் உற்பத்திக்கான மூலப் பொருட்களையே கூட மாற்றி புதியவற்றை விலை குறைவாக தயாரித்து சாதிக்கலாம்!
எல்லாவற்றிலும் மாற்றமும் முன்னேற்றமும் சாத்தியம். ஆனால் அது உங்களுக்கு சாத்தியப்பட நீங்கள் சிந்திக்கும் கோணத்தை மாற்ற வேண்டும்.
நேற்று செய்ததை இன்றும் அப்படியே செய்தால்
முன்னேற்றம் எப்படியும் வராது;
புதிய முயற்சிகள் தான் வாழ்வின் சுவாரசியம்;
புதிய கண்டுபிடிப்புகள் தான் வாழ்வின் முன்னேற்றம்;
மாற்றத்தை நிகழ்த்த, புதியவற்றை சாதிக்க
இன்று செய்வதில் தொடர்ந்து
புதிய முறைமைகளை முயற்சியுங்கள்;
புதிய கோணத்திலான சிந்தனை
அறிவைப் பெருக்கி, உற்பத்தியைப் பெருக்கும்;
நீங்கள் நினைத்தால், நீங்கள் முயற்சித்தால்
எல்லாவற்றையும் இன்னும் சிறப்பாக செய்யமுடியும்;
- [ம.சு.கு 10.12.2022]
Comments