top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-60 – கேள்வி கேட்க ஏன் இத்தனை தயக்கம்?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-60

கேள்வி கேட்க ஏன் இத்தனை தயக்கம்?


  • நன்றாக படிக்கக்கூடிய மாணவன் ஒருவனுக்கு சபை மத்தியில் பேச அதீத கூச்சம். ஆசிரியர்களிடம் புரியாததை தனியாக கேட்கக்கூட கூச்சம். பாடத்தில் வரும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் கேட்டு புரிந்துகொள்ள தயங்குவதால், முழுமையான மதிப்பெண் எடுக்க வேண்டிய பல தருணங்களில், புரியாமல் மதிப்பெண்களை இழக்கிறான். ஏன் இந்த தயக்கம் என்று அவனிடம் கேட்டால், காரணம் “தெரியவில்லை” என்கிறான். அப்படியானால் தயக்கத்தை விட்டொழிக்கலாமே என்றால், “முடிவதில்லை” என்கிறான். நம்மில் பலருக்கு, வெவ்வேறுபட்ட தருணங்களில் இப்படிப்பட்ட தயக்கங்கள் வந்திருக்கும். ஏன் இந்த தயக்கம்? எப்படி கையாள்வது இதை?

  • எனது நண்பர் ஒருவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தனக்கு எது வேண்டுமோ, அதை உடனடியாக யாரென்றும் பொருட்படுத்தாமல் கேட்டு பெற்றிடுவார். தெரிந்தவரோ! தெரியாதவரோ! தனக்கு வந்த ஐயத்தினை கேட்டு நிவர்த்தி செய்வதில் அவர் அதிவேகமானவர். அவரிடம் கேட்டால், “எந்த ஒரு இடத்திலிருந்து வெளியேரும்போதும், சந்தேகத்தோட வெளியேறினால் நஷ்டம் நமக்குத்தான். ஏற்பட்ட ஐயங்களை அவ்விடமே கேட்டு தீர்த்துக்கொண்டால், அடுத்தகட்டத்திற்கு திட்டமிடுதல் எளிதாகும்” என்கிறார்.

வகுப்பில் ஓரிரு மாணவர்கள், அவர்களுக்கு புரிந்ததோ-புரியவில்லையோ எண்ணற்ற சந்தேகங்களை ஆசிரியரிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள்., கேட்க வேண்டும் என்பதற்காகவே, ஏதேனுமொன்றை கேட்கும் இவர்கள், மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டுமே கேட்கிறார்கள். ஒரு சிலர் தங்களின் புரிந்துகொள்ளும் முயற்சியில் வருகின்ற முக்கிய சந்தேகங்களைகூட, ஆசிரியரிடம் கேட்க ஏனோ எண்ணற்ற தயக்கம் காட்டுகிறார்கள். எல்லோர் முன்னிலையிலும் கேட்டால், தன்னை “அறிவிலி” என்று முத்திரைகுத்தி விடுவார்களோ என்று பயம். தன் அறிவை வளர்ப்பதற்காக கேட்டு தெளிவுபெற வேண்டிய இடங்களில், தயக்கத்தின் காரணமாக கேட்காமல் விட்டால், அந்த ஐயத்தை எப்படி தீர்ப்பது? அறிவை எப்படி ஆழமாக்குவது?


கேட்கத் தவறிய ஐயங்களே,

நாளை கேள்விகளாக தேர்வில் வந்தால்,

மதிப்பெண்களை இழக்க நேரிடுமே;


ஒருபுறம் கேட்பதற்கு தயங்கும் சிலர். மறுபுறம் எந்தத் தயக்கமும் இல்லாமல், தனக்கு வேண்டியதை தைரியமாக யாரிடமும் கேட்டுப்பெறும் மற்றும் சிலர். யாருடைய துணையும் இல்லாமல், வெளிநாடுகளுக்கு எத்தனையோ சுற்றுலா பயணிகள் செல்வதை காண்கிறோம். முதுகிலே ஒரு பெரிய பையையும், கையிலே ஒரு திசைகாட்டி கையேட்டையும் வைத்துக்கொண்டு, இந்தியா முழுவதும் சாதாரணமாக சுற்றிவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. எத்தனை தைரியமாக களம் காண்கிறார்கள். புத்தகத்தை படிக்கிறார்கள், தெரியாததை அருகில் உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். அதிலும் மொழி தெரியாத இடத்தில், புரிந்தும்-புரியாமலும் கேட்டுத் தெரிந்துகொண்டு பயணிக்கும் அவர்களின் தைரியம் போற்றப்பட வேண்டியதுதான். ஒரு சிலர்களிடம் ஏமாற்றப்பட்டாலும், அவற்றிற்காக அஞ்சாமல், தங்களின் அனுபவங்களை பாடமாக்கி அடுத்து முன்னேறுகிறார்கள்.


ஆம்! தைரியமாக களம் காண்பதுதான் இங்கு முக்கியம். ஆரம்பகட்ட தயக்கத்தை வென்று, அறிவை வளர்க்க பிறரிடம் கேட்பதுவும் பெரியதொரு களம்தான்;


யாசிப்பது தான் தவறு;

ஐயம் தீர்க்க - அறிவை வளர்க்க

சந்தேகங்களை கேட்பதில் என்ன தவறு?


ஏதேனும் ஒரு பயிற்சியில், உங்களுக்கு வந்த சந்தேகத்தை தீர்க்காமல் விட்டால், அது என்னவாக இருக்குமோ என்று யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். மணிக்கணக்கில் யோசித்தும் விடைகாண முடியாதவற்றை, ஒரு நிமிட கேள்வி-பதிலில் தீர்த்திருக்கலாம். ஆனால் எழுந்து ஐயம் கேட்கத் தயங்கியதால், பல மணி நேரங்களை அந்த ஐயம் குறித்த சிந்தனையிலேயே வீணடிக்க வேண்டியதுதான்.

  • கேள்விகளில், “சரியானது-தவறானது” என்று எதுவுமில்லை; அவையாவும் நம் அறிவை, புரிதலை மேம்படுத்துவதற்கான ஒரு வழிவகை மட்டுமே!

  • நீங்கள் கேட்டால்தான் மற்றவர் பதிலளிப்பார். இல்லையென்றால், உங்களுக்கு என்ன தேவையென்று மற்றவருக்கு எப்படி தெரியும்!

  • கேள்வி உங்களின் அறிவை விரிவடைய வழிவகுக்கும். அதேசமயம், உங்களின் கேள்விகளின் மூலம் புதிய கோணங்களை அறியும் வாய்ப்பு பதிலளிப்பவருக்கும், மற்றவர்களுக்கும் கிடைக்கும்;

  • கேள்வி உங்களுக்கு காரண-காரியத்தை புரிய வைக்கும்!

கேட்காமலே உலகை அறிந்துகொள்ள நாம் அவதார புருஷர்கள் இல்லை. கேட்டுத் தெரிந்து கொண்டால் மட்டுமே, உலகத்தை புரிந்து நம் அறிவை விசாலப்படுத்த முடியும்.


கேட்பதற்கு தயங்கினால்

அறிவின் வளர்ச்சி தடைபட்டுப்போகும்;

சரியோ? தவறோ? – கேட்டுவிட்டால்

தவறென்றால் திருத்திக் கொள்ளலாம்;

சரியானதென்றால் முழுமையாக புரிந்து கொள்ளலாம்;

தயக்கத்தை தவிர்த்து தைரியமாய் கேட்டால்

எல்லாச் செல்வங்களும் படிப்படியாய் கைகூடும்;


- [ம.சு.கு 08.12.2022]



Recent Posts

See All

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 361 - செல்வாக்குடையவர் முக்கியம்!"

நீங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டுமானால் – ஒன்று நீங்கள் செல்வாக்கு படைத்தவராகவோ அல்லது செல்வாக்குள்ளவரின் முழு ஆதரவுள்ளவராகவோ இருக்கவேண்டும்

Post: Blog2 Post
bottom of page