top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-59 – அறிவுரை கேளுங்கள்! அடிமையாகி விடாதீர்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-59

அறிவுரை கேளுங்கள்! அடிமையாகி விடாதீர்கள்!


  • சில செல்வச் செழிப்பான வீடுகளில், அடுத்த தலைமுறையினர் அவர்களின் உயர்ந்த நிலையை தக்கவைத்து மேலும் வளர்க்கக்கூடிய ஆளுமையின்றி புகழைப் படிப்படியாக இழப்பதை, உறவுகள் மத்தியிலும், ஊரார் மத்தியிலும் ஆங்காங்கே நீங்கள் கண்டிருக்கலாம். தந்தையார் இருந்தவரையில் சிறப்பாக இயங்கிய குடும்பம், அவர் மறைவுக்கு பின்னால் மகனால் பெரிதாய் வழிநடத்த முடிவதில்லை. தந்தை அவரது மகனை நன்றாக படிக்கவைத்து முன்னேற்ற முயற்சித்திருப்பார். ஆனாலும் தலைமுறை கைமாற்றம் அவ்வளவாக வெற்றிபெறாததற்கு என்ன காரணம்?

  • அலுவலகத்தில் மேலாளருக்கு “ஆமாம் சாமி” போடும் ஓரிருவர் இருப்பார்கள். அதேசமயம் மேலாளருக்கு எதிராக பழிவாங்க சமயம் பார்த்து காத்திருப்பவர்களும் இருப்பார்கள். இந்த இருசாரார் மத்தியில் சிக்கிக் கொண்டு, என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திண்டாடும் சிலரும் இருக்கக்கூடும். நீங்கள் செய்வது கூலி வேலையாக இருந்தால், மேலாளர் சொல்வதை மட்டும் செய்துவிட்டு சென்றுவிடலாம். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், உங்கள் வேலையின் தற்போதைய செயல்கள், பெறுகின்ற அனுபவம், எதிர்கால வளர்ச்சி என்று எண்ணற்றவற்றை நீங்கள் கவனிக்க வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் ஒரு மேலாளரை மட்டும் சார்ந்து உங்களின் வாழ்க்கையை வடிவமைக்க முடியாது. அப்படி வடிமைத்தால், காலமெல்லாம் வளர்ச்சியின்றி அவருக்கு அடிமையாகவே வாழ வேண்டிவரும்.

ஆளுமை வாய்ந்த தந்தைமார்கள் தங்களின் மகன்கள் சிறந்த ஆளுமையாளர்களாக வரவேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் அன்றாட செயல்களில் அந்த மகன்கள் வெற்றி-தோல்விகளை களத்தில் சந்தித்து அனுபவம் பெறட்டுமென்று சுயமாக இயங்க விடமாட்டார்கள். அவர்களின் எல்லா செயல்களிலும் மூக்கை நுழைத்து, “இப்படி செய் - அப்படி செய்” என்று அறிவுரை கூறுவார்கள். ஓரிருமுறை சுயமாக செய்து ஏதேனும் சிறு தவறு நேர்ந்துவிட்டால், தான் சொல்வதை ஏன் கேட்பதில்லை? என்று கடிந்து கொள்வார்கள்.


இப்படிப்பட்ட ஆளுமையான தந்தைமார்களின் மத்தியில், தனித்திறமை வாய்ந்த மகன்கள், சீக்கிரத்தில் விலகி வேறுதுறைக்கு சென்று விடுகிறார்கள் (அல்லது) வெளிநாடு சென்று விடுகிறார்கள். சராசரியான மகன்களோ, தந்தையார் சொல்வதைமட்டும் கேட்டு செய்துகொண்டு, வாழ்க்கையை வெறுமனே தொடர்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அவரிடம் ஒரு பேச்சு கேட்டுவிட்டு செய்துவிடலாம் என்ற நிலையில் தனித்துவம் ஏதுமின்றி இயங்குகிறார்கள். பெரியவரின் அறிவுரை கேட்டு நடப்பதாக வாயளவில் சொன்னாலும், கிட்டத்தட்ட அடிமைத்தனம் தான் அங்கு அரங்கேறி இருக்கிறது. இந்த நிலையை தவிர்க்க தந்தைமார்களும் இதையுணர்ந்து விலகி நிற்பதில்லை. இன்னும் அதீதமாக கவனிக்கத் துவங்கி ஆளுமையற்ற அடுத்த தலைமுறையை உருவாக்கி விடுகின்றனர். போதிய ஆளுமை இல்லாவிட்டால், அவருடைய காலத்துக்கு பின்னர் அந்த நிறுவனமும், குடும்பத்தின் புகழும், வளமையும் தானாக குறைய துவங்கிவிடுகிறுது. சில குடும்பங்களில் எல்லாவற்றையும் தொலைத்து, வெகுசீக்கிரத்தி வேலைக்குச் செல்லும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.


அலுவலகங்களில் மேலாளரின் நட்பெயரை சம்பாதிக்க பதவி உயர்வு பெற வேண்டுமென்று எல்லோருக்கும் ஆசை. அதற்காக அவரிடம் அறிவுரை கேட்டு எல்லா செயல்களையும் சிறப்பாக செய்ய முயற்சிப்பது நல்லதுதான். அதேசமயம் அந்த செயலின் ஒவ்வொரு படியையும் அவரிடம் கேட்டுக்கேட்டு செய்து கொண்டிருந்தாள், உங்களின் அறிவுக்கு என்னதான் வேலை அங்கு. ஒருசில மேலாளர்கள், ஊழியர்கள் தான் சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்யக்கூடாது என்று கண்டிப்புடன் இருப்பார்கள். அவர்கள் தங்கள் ஊழியர்களை சக மனிதராக கருதாமல், அடிமையாக கருதுபவர்கள். அப்படிப்பட்ட நபர்களை இனங்கண்டு சீக்கிரத்தில் விலகிவிடுவது நல்லது.


உங்கள் பணியில் அனுபவத்தைக் கூட்டி, புதியவற்றை கற்று உயர்நிலைக் போக விரும்பினால், ஒரு மேலாளரை மட்டுமே சார்ந்து இருந்து விடக்கூடாது. அப்படி ஒரு மேலாளரை சார்ந்து நின்றுவிட்டால், உங்களின் வளர்ச்சி அவருடைய வளர்ச்சியின் பின்னால் சார்ந்து நின்றுவிடும். அவர் வேலையை விட்டு விலகும் நாளில், நீங்கள் அடையாளமின்றிப் போவீர்கள்.


உங்கள் குடும்பமாகட்டும், வேலையாகட்டும், சமூகசேவையாகட்டும், எங்கும் உங்களின் சுயபுத்தியோடு இயங்கவேண்டுமென்பதில் கவனமாக இருங்கள். காலம் மாறும், சூழ்நிலைகள் மாறும், மனிதர்கள் மாறுவார்கள் – இந்த மாற்றங்களை எல்லாம் கடந்து காலத்திற்கும் நீங்கள் நிற்கவேண்டுமானால், உங்கள் சுயபுத்தியோடு உங்கள் வாழ்வை வடிவமைத்தால், காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நீங்கள் முடிவெடுத்து பயனிக்கலாம்.


அறிவுரை கேட்கிறேன் என்ற பெயரில், யாராவது ஒரிரு நபரைமட்டுமே சார்ந்து வாழ்ந்தால், காலவெல்லத்தில் அவர்கள் தங்களின் சுயநலத்திற்கு உங்களை அடிமையாக பயன்படுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். யாதார்த்தம் யாதெனில், உங்களின் அடிமைநிலையை நீங்கள் உணராதவண்ணம் உங்களை ஒரு மனோவசிய நிலையில் வைத்திருந்து காலம்கடத்திவிடுவார்கள். வாழ்வின் வெற்றியும், தோல்வியும் உங்களின் சுயபுத்தியில் தீர்மானமாகட்டும். மற்றவர்களின் அறிவுரைகள் யாவும், உங்களின் சிந்தனையை தூண்டுவதாக மட்டுமே இருக்கட்டும்.


உங்களின் வளர்ச்சிக்கு பிறருடைய

அனுபவங்களினின்று அறிவுரை கேட்கலாம் – ஆனால்

அவருக்கு அடிமையாகி விட்டால் நீங்கள் எப்படி வளர்வது;


ஆளுமைவாதிகளுக்கு

நிறைய சொல்புத்தியாளர்கள் வேண்டும் – அடிமைகளாய்

அவர்களுக்கு வேலை செய்ய;

சுயபுத்தி இல்லாமல் அவர் பின்னால் நின்றால்

கொத்தடிமையாய் காலாகாலத்திற்கும்

கைகட்டி நிற்க வேண்டியதுதான்;


முழுமையான சுயபுத்தியோடு

வாழ்வை வடிவமைக்க முயற்சி செய்யுங்கள்;

வாழ்க்கை தன்னிறைவடைந்து வளமாகும்!


- [ம.சு.கு 07.12.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page