“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-58
வருகை முக்கியமல்ல! கவனித்தீர்களா என்பதுவே முக்கியம்!
ஒரு நண்பர் வீட்டு திருமணத்துக்கு சென்று வந்தோம். 1000 அழைப்பிதழ்கள் அடித்து, வெகு விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் அதிகம் இருந்ததால், மேடைக்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு மாதம் கழித்து அந்த நண்பரை சந்தித்தபோது, ஏன் திருமணத்திற்கு வரவில்லை என்றார். எனக்கே குழப்பமாகிவிட்டது. திருமணத்தில் நண்பரை பார்த்து கைகுலுக்கியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அவர் மறந்துவிட்டார். நாங்கள் புகைப்படத்திலும் இல்லை என்பதால் வரவேயில்லை என்றார். இனி நிரூபிக்க முயற்சிப்பதில் பயனில்லை என்று அமைதியானேன். இதுதான் இன்றைய பல பெரிய திருமண நிகழ்ச்சிகளின் நிலை!
கல்லூரிக்கு தினம் தவறாமல் சென்று, எல்லா வகுப்பிலும் அமைதியாக உட்க்கார்ந்திருந்த மாணவன், தேர்வில் 30% மதிப்பெண் பெற்றான். அதே சமயம் பாதி நாட்கள் மட்டுமே கல்லூரிக்கு வந்துசென்ற நல்ல சாமர்த்தியமான பையன், விளையாட்டுதனமாய் இருந்தாலும், 60% மதிப்பெண் எடுக்கிறான். இதில் யார் சரியானவர்? கல்லூரிக்கு சரியாய் வந்தவரா? அதிக மதிப்பெண் எடுத்தவரா?
இன்றைய காலத்தில் கல்யாணம், புதுமணை புகுவிழா என்றெல்லாமே, தங்களின் ஆடம்பரத்தை பறைசாற்றும் நிகழ்வாக மாறிவிட்டன. எண்ணற்றவர்களை அழைக்கின்றனர். அவர்களும் வந்து ஒரு மணி நேரம் இருந்து விட்டு சென்று விடுகின்றனர். ஒரு வாரத்திற்குப் பின்னால் வெளியே சந்தித்தால், மாப்பிள்ளை-பெண்ணை அடையாளம் தெரிவதில்லை.
ஏதோ அழைத்தார் என்பதற்காக சென்று, எதையுமே பொருட்படுத்தாமல், உணவு உண்டு, கடமைக்கு மொய் செய்துவிட்டு வந்துவிடுகின்றனர். திருமண இல்லத்தாரும், அந்த கூட்டத்தில் யார் வந்தார்? யார் வரவில்லை? என்று நினைவில் கொள்ள முடிவதில்லை. தேவைப்பட்டால், புகைப்பட புத்தகத்தை எடுத்துப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை. இப்படிப்பட்ட மேம்போக்கான நிகழ்வுகள் தேவையா? 30 வருடங்களுக்கு முன்னர் திருமணம் என்றால், 1-2 நாட்கள் தங்கி, சொந்தங்களோடு அளவளாவி மகிழ்ந்த காலம் இன்று சாத்தியமின்றிப் போய்விட்டது. இப்போது திருமண விழாக்களுக்கு வருவது, ஏதோ ஒரு வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்துபோவது போல ஆகிவிட்டது.
தினம் தவறாமல் கல்லூரிக்கு வந்து, வகுப்பில் அமர்ந்து செல்வது சிறந்த ஒழுக்கம் தான். ஆனால் அந்த வகுப்பில் என்ன பாடம் நடத்துகிறார்கள் என்று கவனிக்க வேண்டியது தான் இங்கு அதனினும் முக்கியமான விடயம். வகுப்பில் கவனித்த பாடத்தை மனதில் ஏற்றவில்லை என்றால், எத்தனை ஒழுக்கமாக இருந்தும் என்ன பயன். 10 நாட்கள் வகுப்பிற்கு வந்தாலும், வந்த சமயத்தில் நடத்திய பாடத்தை தெளிவுர கேட்டு புரிந்து கொண்டால், அதைக் கொண்டு தேர்வில் தேர்வாகலாமே. குறைந்தது 100 நாள் கல்லூரிக்கு வந்திருந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதிப்பார்கள் என்பதற்காக மட்டும் வந்து போவதற்கல்ல கல்லூரி.
கல்லூரிக்கு வந்து போகும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகுப்பும், ஒவ்வொரு நண்பனும், ஒவ்வொரு சூழ்நிலைகளும், சந்தர்ப்பமும், நாம் கற்றுக் கொள்ள வேண்டிய தருணங்கள். வெறுமனே வருகைக்காக மட்டுமில்லாமல் எல்லாவற்றையும் ஆழமாக கவனிக்கத் துவங்க வேண்டும். எல்லாவற்றிலும் ஏன்? எதற்கு? என்று ஆராயத் துவங்கினால், நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தின் யதார்த்தம் புரியும். உலகின் யதார்த்தம் புரியத்துவங்கினால், கற்றல் எளிமையாகி, மெய்யறிவு கைகூடும்.
அலுவலகத்தில் தட்டச்சர் வேலைக்குச் சேர்ந்து, தினமும் அந்த ஒரே வேலையை காலம் பூராவும் செய்து, இறுதியில் அதிலேயே ஓய்வு பெறுவதில் என்ன பயன்?
பாடம் நடத்தும் போது ஆசிரியர் உதாரணமாக கூறிய அதே கணக்கு தேர்வில் வருகிறது. ஆனால் அன்று பாடத்தை கவனிக்காததால், இன்று விடை தெரியாமல் திண்டாட்டம்.
புதிய ஊர்களுக்கு பேருந்தில் பயணிக்கும் போது, செல்லும் வழியில் உள்ள ஊர்களையும், மக்களையும் எத்தனைபேர் ஆழ்ந்து கவனிக்கிறார்கள். வழியில் உள்ள எல்லாவற்றையும் மனப்பாடம் செய்யச் சொல்லவில்லை. ஆனால், சென்ற பாதையில் உள்ளவற்றை கவனித்தால்தானே, எங்கு என்ன இருக்கிறது, மக்கள் என்ன செய்கிறார்கள், உலகம் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது, என்ற பொது அறிவு வளரும்.
பொதுவாக மக்கள் எல்லா இடங்களுக்கும் கடமைக்காகவோ, அல்லது ஏதேனும் ஒரு காரியமாகவோ சென்று வருகின்றனர். சென்று வந்த பாதையில், அமர்ந்து பேசிய இடத்தில், எத்தனை விடயங்களை கவனித்தார்கள், என்று பார்த்தால், 10-20% கூட இருப்பதில்லை. தங்களின் சுற்றுப்புறத்தை முழுமையாக கவனிப்பதில்லை.
நீங்கள் வணிகரோ, போர் வீரனோ, புலவரோ, மந்திரியோ, எதுவாக இருந்தாலும், நீங்கள் இருக்கும் இடத்தையும், சென்றுவரும் இடங்களையும், பார்க்கும் நபர்களையும், பொருட்களையும் ஆழமாக கவனித்தால் மட்டுமே, யதார்த்தங்களை புரிந்து உங்களை நீங்கள் வடிவமைத்துக் கொள்ள முடியும். வாடிக்கையாளரின் தேவைகளை சரிவர கவனிப்பவன் வியாபாரத்தில் வெற்றிபெறுகிறான். எதிரியின் பலம்-பலவீணங்களை கவனித்து செயல்படுபவன் சமரில் வெற்றிகொள்கிறான்.
உங்கள் இருப்பைக் காட்டிலும்
நீங்கள் இருந்த இடத்தில்
கவனித்ததும் கற்றுணர்ந்ததுமே
உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்;
வெறுமனேயான இருப்பில் பயனில்லை;
இருந்த இடத்தில்
ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எப்போது?
என்ற கேள்விகளுக்கு
தொடர்ந்து விடைகளை தேடிக்கொண்டிருந்தால்
உங்களின் இருப்பு
இருதரப்பிற்கும் பயனுடையதாகும்;
- [ம.சு.கு 06.12.2022]
Kommentarer