“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-56
இவர்களை விலக்கினால்தான் வெல்ல முடியும்!
முன்னேற்றத்தை நோக்கி போராடிக் கொண்டிருக்கும் நிறுவனத்தில், பல்வேறுபட்ட சிறுசிறு முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். அவற்றின் வெற்றி-தோல்விகளில் மூழ்கிவிடாமல், தொடர்ந்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற, அனைவரும் உழைப்பார்கள். அவர்களிள் ஓரிருவர், நம்பிக்கை இல்லாமல், இது பயனற்றது! இது உதவாது! இது நம்மை தோற்கடித்துவிடும்! என்று தொடர்ந்து எதிர்மறையாகவே பேசி, மற்றவர்களின் நம்பிக்கையையும் சேர்த்து சிதைத்துக் கொண்டிருந்தால், அவர்களை என்ன செய்வது?
நீங்கள் தொழில் ஆரம்பித்தபோது, பல சிறு வாடிக்கையாளர்களையும், பொருள் வளங்குபவர்களையும் சேர்த்திருப்பீர்கள். அவர்களில் சிலர் அடிக்கடி பிரச்சினை ஏற்படுத்திய வண்ணம் இருந்தாலும், தரக்குறைவான பொருட்களை கையாள்பவர்களாக இருந்தாலும், ஆரம்ப காலத்தில் சிறிய அளவில் தொழில் செய்யும் போது, அவற்றை நீங்களே கவனமாக கையாண்டு சமாளித்து வந்திருப்பீர்கள். அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நீங்கள் முன்னேறும் போது, இந்த பிரச்சனைக்குரியவர்களுடன் நீங்கள் தொடர்ந்து நேரம் செலவழிப்பது பயனுடையதா? எல்லா சிறு வாடிக்கையாளர்களையும் தொடர்ந்து வைத்துக் கொண்டே போராட வேண்டுமா?
பெரும் நம்பிக்கையுடன் நிறுவனத்தின் ஊழியர்கள் வளர்ச்சியை நோக்கி உழைத்துக் கொண்டிருக்க, ஓரிரு எதிர்மறையாளர்கள் எல்லாவற்றையும் படிப்படியாக சிதைத்துக் கொண்டிருந்தால், தேவையற்ற குழப்பங்களும், நம்பிக்கையின்மையுமே வளரும். அப்படிப்பட்ட அவநம்பிக்கை- -யாளர்களையும், சோம்பேறிகளையும், திறமையற்றவர்களையும் இனம் கண்டு விலக்கத்தவறினால், தேவையில்லாத பொறாமை எண்ணங்கள், குழப்பங்களில் நிறுவனம் சிக்கித் தவிக்க நேரும். நன்கு உழைக்கும் நபருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு அளித்தால், இந்த புல்லுருவிகள் பொறாமையில் வெதும்பி, நிறுவனத்திற்குள் அதிக சேதாரத்தை ஏற்படுத்திவிடக்கூடும். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு திறமையானவர்கள் நிறைய சேர்க்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதேபோல திறமையற்றவர்களை சீக்கிரத்தில் இனம்கண்டு களைந்து விடுவதும் அதிமுக்கியம்.
வியாபாரத்தில் பொருள் வழங்குபவரோ, வாடிக்கையாளரோ, ஊழியரோ, யாராயினும் உங்களின் நேரத்தை எவ்வளவு நேரம் ஆக்கிரமிக்கிறார்கள் என்பதில் அதிக கவனம் தேவை. அதிலும் குறிப்பாக சிறிய அளவே வர்த்தகம் செய்யும் வாடிக்கையாளர்கள், உங்களின் அதிக நேரத்தை எடுத்தால், அவற்றை உங்கள் பணியாளர்களுக்கு மாற்றி விட முடிந்தால் பரவாயில்லை. ஒருவேளை அந்த வாடிக்கையாளர் பெரிய குறைகூறியாய் இருந்தால், அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களை தொடர்வது தேவையா என்று யோசியுங்கள்? அதற்காக குறைகூறுபவர்களே வேண்டாம் என்று கூறவில்லை. நிறைகுறைகளை சுட்டிக் காட்டுபவர்கள் இருந்தால்தான் திருத்திக்கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைக்கும். அதே சமயம் குறையை மட்டுமே கண்டு கொண்டிருக்கும் நிரந்தர குறைகூறிகளிடமிருந்து சீக்கிரத்தில் விலகிவிடுவது நல்லது.
நிறுவனத்திலும், வியாபாரத்திலும் எதிர்மறையாளர்களையும் குறைகூறிகளையும் விலக்குவது எவ்வளவு முக்கியமோ, அதுபோல நம் தனிமனித வாழ்விலும், சுற்றத்திலும் அப்படிப்பட்ட நிரந்தர எதிர்மறையாளர்கள், தீயபழக்கங்களில் ஊரித் திளைத்தவர்கள், நிரந்தர குறைகூறிகளிடமிருந்தும் விலகி இருப்பது அதிமுக்கியம்.
நீங்கள் ஆட்சிப் பணி தேர்வுக்கு தயாராக முயற்சிக்கிறீர்கள். அது சற்று கடினமாக இருக்குமென்பதால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்று யாராவது சொன்னால் பரவாயில்லை. அது உனக்கு ஒத்து வராது! உன்னால் முடியாது! என்று எதிர்மறையாக 10 பேர் சொன்னால், உங்களின் நம்பிக்கை பாதிக்கமல்லவா. நமக்கு முன்னால் லட்சம் பேர் சாதித்து இருக்கிறார்கள்! நம்மால் முடியும்! ஆனால் தொடர்ந்து இப்படி எதிர்மறை பேசுபவர்களையே கேட்டுக் கொண்டிருந்தால், எவ்வளவு நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும், ஒரு சிறு பயம் துளிர்விடும் தானே.
எல்லோரும் 100% சரியாகவே எல்லாவற்றையும் செய்வது சாத்தியமில்லை. நாம் எதைச் செய்தாலும், அதில் உள்ள குறைகளை பெரிதுபடுத்தி நம்மை மட்டுப்படுத்தும் நபர்கள், நம் நம்பிக்கையை சிதைப்பவர்கள். அவர்களை இனம் கண்டு விலக்கிவைக்கத் தவறினால், நம்மையே அவநம்பிகையாளர்களாக அவர்கள் மாற்றிவிடுவார்கள். குறைகளை சரிசெய்ய வேண்டுமென்ற நோக்கில் சுட்டிக் காட்டுபவர்கள் சொன்னால் திருத்திக் கொள்ளலாம். ஆனால் பலபேர் மத்தியில் அந்த குறைகளை கூறி நம்மை மட்டுப்படுத்துபவர்களை வைத்துக் கொண்டிருந்தால், நாம் தேவையில்லாமல் அவமானப்பட வேண்டியதுதான்.
நீங்கள் வெற்றி பெற விரும்பினால்
குறைகளை சுட்டிக்காட்டி திருத்துபவர்கள் வேண்டும் - ஆனால் நிரந்தர குறைகூறிகளை விலக்குங்கள்;
எதிர்மறை கருத்துக்கள் நம்மை எச்சரிப்பதற்கு தேவைதான் - ஆனால் எதிர்மறையை மட்டுமே பேசி நம் நம்பிக்கையை தகர்ப்பவர்களை விலக்குங்கள்;
“கடினம்தான், ஆனால் முயற்சிக்கலாம்” என்பவர்கள் இருக்கலாம். “வேண்டாம்”, “முடியாது”, “இல்லை” என்று எதர்கெடுத்தாலும் சொல்லிப் பழகிவிட்டவர்களை விலக்குங்கள்;
பொருள் கொடுப்பவரோ, வாங்குபவரோ, உங்களின் நேரத்தை அதிகம் சாப்பிடுபவரானால், உங்கள் நேரத்தின் மதிப்பை கருத்தில் கொண்டு அவர்களையும் விலக்குங்கள்;
பொறாமை எண்ணத்திலும், கோள்மூட்டும் குணத்திலும், வஞ்சகம் எண்ணங்களிலும் ஊரித்திளைத்தவர்களை, இனங்கண்டு கவனமாக விலக்குங்கள்;
யாரைச் சேர்த்து - யாரை விளக்குவதென்பது
உளவியல் சார்ந்த அனுபவ அறிவு;
நம் பாதையை திருத்த, குறைகளை களைய
எதிர்மறை கண்ணோட்டம் உடையவர்கள் தேவை – ஆனால்
அதுவே தொழிலாக கொண்டவர்கள் அல்ல;
திறமை வாய்ந்தவர்கள் பலரைச்
சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ – அதேபோல்
திறமையற்றவர்களை இனம் கண்டு
விலக்குவதும் அதி முக்கியம்;
- [ம.சு.கு 04.12.2022]
コメント