top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-54 – எதுமுக்கியம் - அடியின் அளவா? பாதையா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-54

எதுமுக்கியம் - அடியின் அளவா? பாதையா?


  • பள்ளியில் காலாண்டு தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும்போது, தேர்வு அறைக்குள் நுழையும் முன்னர் நண்பர்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போது அவசரமாக வந்துசேரும் மாணவன், தான் இன்று நன்றாக வரலாறு பாடத்தை படித்துவிட்டதாகவும், நல்லமதிப்பெண் எடுப்பேன் என்றும் உறுதியாக கூறுகிறான். அப்போது குறுக்கிட்ட ஒரு மாணவன், என்னது வரலாறா? அது நாளைக்கு தானே! இன்று அறிவியல் தேர்வுதானே என்றான். வரலாற்றையே புரட்டிப் போடுமளவிற்கு படித்து தயாராக வந்த நண்பனின் நிலை திந்தாட்டம் தான்.

  • அடுத்து மாதம் வரும் கல்லூரி விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் நோக்கில் உடற்பயிற்சி செய்ய துவங்குகிறீர்கள். மிகுந்த ஆர்வத்தின் காரணமாக முதல் நாளில் 3-4 மணி நேரம் தொடர்ந்து பயிற்சி செய்கிறீர்கள். அளவுகடந்த பயிற்சியின் காரணமாக, சற்றே அதிகமாக தசை பிடிப்பும், மூட்டு வலியும் ஏற்படுகிறது. வலிகளின் காரணமாக, அடுத்த பத்து நாட்கள் பயிற்சி செய்ய முடியாமல் போகிறது. ஆர்வம் இருக்க வேண்டியது தான். ஆனால் ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் பயிற்சி செய்ய வேண்டும் என்ற அளவு இருக்க வேண்டும் அல்லவா?

தேர்விற்கு படிக்க வேண்டும் என்று ஆர்வம் சரிதான். அதற்காக இரவு பகல் கண்விழித்துப் படிப்பதும் மிகப் பெரிய உழைப்புதான். ஆனால் நாளை என்ன தேர்வு என்று அட்டவணையை கூட பார்க்காமல் நம் இஷ்டப்பட்டபடி படித்தால் தேர்வில் எப்படி தேருவது? எண்ணற்ற பாடத்தை முழுமையாக படித்திரிக்கிறேன் என்று கூறுவதை விட, இன்றைய தேர்விற்கு போதுமான அளவு படித்துள்ளேன் என்பது, தேர்வு மதிப்பெண் என்ற நோக்கில் கட்டாயம் பயன் அளிக்கும். பயணம் சரிதான் ஆனால் அது எந்த திசையில் என்பதில் போதிய கவனம் தேவை தானே!!


விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி காண ஆசைப்படுபவர்கள், கடுமையாக பயிற்சி செய்வது அத்தியாவசியத் தேவையென்பது சரிதான்! ஆனால் போட்டியன்று நாம் நல்ல உடல் நிலையில் இருக்க வேண்டியது அதனினும் முக்கியமாயிற்றே. அன்றைய தினம் உடல் உபாதையிலும், வலிகளிலும் கஷ்டப்பட்டால், எப்படி வெல்வது! ஒரே நாளில் இமயத்தை ஏற வேண்டும் என்று முயற்சித்தால் சற்று சாத்தியமில்லைதான். அதற்காக முயற்சிக்காமலே இருந்தாலும், சோம்பேறித்தனம் நம்மில் வலுபெற்றுவிடும்.


என்னதான் முடியாத காரியமாக தென்பட்டாலும், தினம்தினம் முயற்சிக்க வேண்டும். வெற்றியை நோக்கிய பாதையில், செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை திட்டமிட்டு, படிப்படியாக அதிகரித்து, உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி வலுவேற்ற வேண்டும். நாம் எவ்வளவு கூடுதலாக ஒரு நாளில் முயற்சிக்கிறோம் என்பதை காட்டிலும், வெற்றியை நோக்கிய பாதையில் எவ்வளவுக்கெவ்வளவு சரியாக செய்கிறோம்! செய்பவற்றை எந்தளவு தொடர்ந்து தினம் தினம் செய்கிறோம்! என்பதில் அமைகிறது.


உடல் பருமனை குறைக்க பத்தியம் இருப்போம், விரதம் இருப்போம். அந்த விரதத்தால் 3-4 கிலோ எடை குறைந்த பின்னர், சற்றே விரதத்தை ஓரிருநாள் தள்ளிவைப்போம். பொதுவாக ஒருவேளை மட்டுமென்று தொடங்கும் இந்த பழக்கவழக்க மாற்றம், இன்றொருநாள் தானே என்று நீண்டு, அந்த விதிவிலக்கே அன்றாட பழக்கமாகிவிடும். விளைவு – கஷ்டப்பட்டு குறைத்த 3 கிலோ எடை, அடுத்த இரண்டு மாதங்களில் 6 கிலோவாக அதிகரித்துவிடும்.


தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்விற்கு முந்தைய நாளில் எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் படித்து தேர்வில் வெற்றி பெறலாம் என்று எண்ணுவர். ஆனால் தினம் தினம் பாடங்களை முறையாக படித்தவனுக்கு தேர்வு என்பது சாதாரணமாக வந்து போகும் ஒரு சிறிய சோதனைமட்டுமே. அன்றாடம் வெற்றியை நோக்கி காய்களை நகர்த்த வேண்டும். செய்கின்ற செயலின் அளவைக்காட்டிலும், அந்த செயல் சரியான பாதையில் இருக்க வேண்டியது அதிமுக்கியம். வைக்கின்றஅடி சிறிதளவேயானாலும், தினந்தோறும் சரியான பாதையில் தொடர்ந்துவைக்கப்பட்டால், வெற்றிக்கனி கட்டாயம் கைக்கெட்டும்தூரத்தில் வந்துசேரும்.


ஒரேநாளில் இன்னவர் செய்து சாதித்தார் என்று யாரேனும் சொன்னால், அதை நம்பி அப்படியே முயற்சிக்காதீர்கள். அவர் வென்றதை மட்டுமே உலகம் பார்த்திருக்கும். அதற்கு பின்னால் பல நாட்கள், பல வருடங்கள் அவரின் உழைப்பை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். வெற்றி பெற்றவர் எப்படி தவமிருந்து அதை சாதித்திருப்பார் என்று நீங்கள் அலசுங்கள்.


சமுதாயத்தில் இருக்கின்ற எல்லா சவால்களையும் தாண்டி நீங்கள் வெற்றி பெற விரும்பினால்

  • உங்கள் பயணத்தின் பாதை வெற்றியை நோக்கியதாக வழிநடத்தப்பட வேண்டும்;

  • தினம் தினம் சிறு முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்;

  • எங்கும் எதிலும் கவனமாக இருக்க வேண்டும்;

  • தவறுகளை திருத்தி கற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்;

  • அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு வருந்தமடையாமல், உங்கள் திறமைகளின் மீது கவனம் செலுத்தி வளர்க்க வேண்டும்;

முதல் தாவலில் எவ்வளவு தூரம் சென்றடைந்தீர்கள் என்பது முக்கியம்தான். ஆனால் அதனிலும் முக்கியம் நீங்கள் குதித்த திசை. எதிர்திசையில் குதித்து சாதிப்பதில் பயனேதும் இருப்பதில்லை.


வெற்றியை நோக்கிய உங்களின் பயனத்தில்

எவ்வளவு தூரம் முன்செல்கிறீர்கள் என்பது முக்கியம்;

தினம்தினம் அதை திரும்பச் செய்வது அதிமுக்கியம்;

நீங்கள் எடுத்துவைக்கும் அடிசிறிதானாலும்

எடுத்துவைக்கும் திசை சரியாக இருந்தால்

இன்றில்லாவிட்டாலும், நாளை ஜெயிக்கலாம்;


- [ம.சு.கு 02.12.2022]

7 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page