top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-53 – எல்லாவற்றிற்கும் வாதாடாதீர்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-53

எல்லாவற்றிற்கும் வாதாடாதீர்கள்!


  • நண்பர்களில் ஒருவர் இறைநம்பிக்கை உடையவராக இருக்க, மற்றொருவர் தீவிர நாத்திகராக இருந்தால், அவ்வப்போது நண்பர்களுக்கு இடையிலான சில உரையாடல்கள் இறைவனைப் பற்றி துவங்கி மிகப்பெரிய வாக்குவாதமாக வளர்ந்து மூன்றாவர் வந்து சமாதானம் செய்ய வேண்டிய நிலைக்கு விவாதம் முற்றுகிறது. ஒரு நிமிடம் யோசியுங்கள் - காலங்காலமாய் இருந்துவரும் ஆத்திகத்துக்கும்-நாத்திகத்துக்கும் இடையிலான விவாதம் தீர்க்கக் கூடியதா? இதற்கு நேரம் செலவிடுவது பயன்தருமா?

  • ஒருபுறம் முதலாளித்துவ கொள்கைகளில் ஊறித்திளைத்த உலகம். மறுபுறம் பொதுவுடைமை கொள்கையில் சமத்துவம் பேசும் உலகம். இருவேறு துருவங்களுக்கு இடையே, எது சரி? எது தவறு? எது நமக்கு ஏற்றது? எது நமக்கு பயன்தராது? என்ற தெளிவு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது. இந்த கொள்கைகளை அரைகுறையாக தெரிந்து கொண்டு, அன்றாட நாளேடுகளுடன் தேநீர் கடைகளில் நடக்கும் விவாதங்களை கேட்கும்போது சிரிப்பாய் இருக்கும். அரசாங்கம் இயங்கும் முறை குறித்த அறிவு சிறிதும் இல்லாமல், தேசத்தின் பொருளாதாரம் புரியாமல், பிரதமரும் முதல்வரும் இப்படி செய்திருக்க வேண்டும் என்று நம்மவர்கள் அனல்பறக்க தேனீர் கடையில் அமர்ந்து விவாதிப்பதில், பயனேதும் உண்டா?

படைத்தல், காத்தல், அழித்தலெனும் முத்தொழில் புரியும் பரம்பொருள் இருக்கிறார் என்று கூறுபவர்களும், அந்த பரம்பொருளே ஒரு மாயை என்று கூறுபவரும் காலம் காலமாய் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். இல்லையென்று சொன்னவர், சில காலங்களுக்கு பின்னால் இருக்கிறதென்று மாற்றிக்கொண்ட கதைகளும் ஏராளம். இறைவன் இருக்கிறான் என்று சொல்லும் கூட்டத்திலும், கைலாயம் பெரிதா? வைகுண்டம் பெரிதா? என்ற விவாதம் ஒருபுறம், சிவன் பெரிதா? சக்தி பெரிதா? என்ற விவாதம் இன்னொரு புறம். கேட்பதற்கு பொழுதுபோக்காக இருக்கும் இந்த விவாதங்களுக்கு விடை உண்டா?.


உங்கள் கோணத்தில் விடை உண்டென்று நீங்கள் சொன்னாலும், அதை மற்றவர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவரை விவாதங்கள் முடிவதில்லை. இவை விடைகானமுடியாத முடிவிலா கேள்விகள் என்று தெரிந்தும், ஏன் இன்னும் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். வயதான பின்னால் நேரம் கடத்த இந்த விவாதங்களை வைத்துக் கொள்ளலாம். இப்போது செய்து முடிக்கவும், சாதிக்கவும், நேரம் போதவில்லை என்று ஓடிக்கொண்டிருக்கும் போது, எதற்கிந்த தேவையற்ற விவாதங்கள்?


இன்று உங்களின் இலட்சியங்களை அடைய, பொருள் சேர்க்க, சக மனிதர்களுடனும் சமுதாயத்துடனும் நட்பு பாராட்ட, தேசத்தின் நடப்பு நிலைமை, பொருளாதாரம் குறித்து பறந்த அறிவு கட்டாயம் தேவை. ஆள்பவர்கள் என்ன கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள்? குறுகிய கால நோக்கிலும் நீண்ட கால நோக்கிலும் தேசத்தின் வளர்ச்சியும், வெற்றியும் எப்படி இருக்கும்? அந்த கொள்கைகளுக்கு மத்தியில் நம் பொருளீட்டும் பயணம் எப்படி இருக்கும்? என்று தொடர்ந்து ஆய்ந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு அரசியலும், பொருளாதாரமும், வணிகவியலும் நன்றாய் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. பேரினப்பொருளியல், நுண்பொருளியல், முதலாளித்துவம், பொதுவுடைமை என்று எல்லாவற்றைப் பற்றியும் அறிவு நமக்கு வேண்டும். ஆனால் இதில் எது சிறந்ததென்று வாதாடுவது உங்களுக்குத் தேவையா?


ஒவ்வொரு சூழ்நிலைக்கும், அரசியல் மாற்றத்திற்கும், மக்களின் தற்போதைய நிலைக்கும் ஏற்ப, இந்தக் கொள்கைகள் மாறும். எதுவுமே நிரந்தரமாக இருக்க முடியாது. இந்த நிரந்தரமற்ற கொள்கையில், இன்று நீங்கள் தனிமனிதராக எதையும் மாற்றியமைக்க முடியாதபோது, அதற்கான முயற்சிகள் ஏதும் செய்யாதபோது, வெறுமனே டீக்கடையில் இதைப்பற்றி விவாதித்து என்ன சாதிக்க போகிறீர்கள்? “விவாதம் முற்றினால் விரோதிகளாவது தான் மிச்சம்”.


இன்று எங்கு இருக்கிறோம்? இன்று நம்முடைய நிலை என்ன ? எண்ணவோட்டம் என்ன? நம் சக மனிதனின் நிலை என்ன? என்ற புரிதல் இல்லாமல், நான் சொல்வது தான் சரி! என் கொள்கைகள் தான் சரி! என்று வாதித்து நீங்கள் சாதிக்கப் போவதென்ன? உங்கள் வாதாடும் திறன்களை வழக்காடு மன்றத்தில் காட்டினால், ஏதோ உங்கள் கட்சிக்காரரிடம் இருந்து கட்டணமாவது வரும். வெளியில் வெறுமனே வாதாடுவதில் என்ன பயன்?.


ஒரு சில விவாதங்களுக்கு விடையே இல்லை

  • ஆண் பெரியவனா? பெண் பெரியவளா?

  • இறைவன் இருக்கிறானா? இல்லையா?

  • முதலாளித்துவம் சிறந்ததா? பொதுவுடைமை சிறந்ததா?

  • தமிழ் சிறந்ததா? சமஸ்கிருதம் சிறந்ததா?

ஒரு சில விவாதங்களுக்கு விடை இருந்தும், எதிலிருப்பவர் மூடரானால், விவாதிப்பதில் என்ன பயன். அடம்பிடிப்பவர்களோடு எவ்வளவு விவாதித்தாலும், அவரின் மூடத்தனத்திற்கு முன்னால், நீங்கள் ஒன்றும் புரியவைக்க முடியாது. அதை அறியாமல் விவாதித்தால் நீங்களும் ஒரு மூடரே!


எங்கு? எதை? யாருடன்? விவாதிக்கலாம்

என்பது அனுபவ அறிவு;

எதிராளியின் அறிவை அளவிட்டு,

அவரிடம் விவாதம் தேவையா என்று

முடிவெடுப்பதில் கவனமாய் இருங்கள்!


- [ம.சு.கு 01.12.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Kommentare


Post: Blog2 Post
bottom of page