“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-51
முடிவெடுக்கத் தேவை கணக்கீடா? மனமா?
உங்களிடம் யாசகம்கேட்டு ஒருவர் நிற்கிறார். பார்ப்பதற்கு பட்டினியால் வாடும் நபரென்று நன்றாக தெரிகிறது. உங்களிடம் இருக்கும் பணத்தில், 10-20 ரூபாய் அவருக்கு தானமாக கொடுத்து பசியை போக்கலாம். அவருக்கு இப்போது கொடுப்பதில் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று உங்கள் மூளை கணக்கிடுகிறதா? நீங்கள் தானம் கொடுப்பதை யாரேனும் பார்த்து உங்களைப் புகழ வாய்ப்பிருக்கிறதா, என்று சுற்றிலும் பார்க்கிறீர்கள்?
மிகவும் கஷ்டத்தில் இருந்த உங்களின் நண்பர் புதிதாய் ஒரு நிறுவனத்தில் வியாபார உறுப்பினராக சேர்ந்துள்ளார். அவர் புதிதாக சேர்ந்த நிறுவனத்தில், சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால் 36% வட்டி கிடைக்கும் என்று சொல்கிறார். அந்த நண்பருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தீர்கள். உங்கள் பணம் 3 வருடத்தில் இரட்டிப்பாகும் என்ற ஆசையில், நண்பருக்கு உதவுகிறேன் என்ற பெயரில், நீங்கள் அந்த அதிக வட்டிகிடைக்கும் சேமிப்பு திட்டத்தில், கையில் சேர்த்துவைத்திருந்த சில லட்சங்களை முதலீடு செய்கிறீர்கள். மூன்று மாதம் சரியாக வந்த வட்டி, அடுத்தமாதம் தாமதமானது. அதற்கடுத்த மாதம் நிறுவனமே மூடப்பட்டது. உங்கள் முதலீட்டின் கதி?
உங்களிடம் யாசித்து நிற்பவனிடம், இலாப-நட்டக் கணக்கு எதற்கு? அங்கே தேவைப்படுவது அன்பும் கருணையும் தானே! தானம் கொடுப்பதில் எனக்கென்ன ஆதாயம், சாதக-பாதகம் என்ன? என்று அலசி ஆராய்ந்து கொண்டிருப்பதில் ஏதேனும் பயன் உண்டா?
மாறாக சீட்டு நிறுவனத்தில் உங்கள் சேமிப்பை முதலீடு செய்யும் போது நட்பையும், வட்டி குறித்த வாக்குறுதிகளையும் மட்டும் பார்த்தால் போதுமா? அங்கு நீங்கள் மனம் இறங்கினால் உங்கள் சேமிப்பு முழுவதும் பறிபோக வாய்ப்பிருக்கிறதே! அந்த நிறுவனத்தைப் பற்றி, வியாபாரத்தை பற்றி, உரிமையாளரை பற்றியும் தெரிந்து அறிவால் அலசி ஆராயாமல், இவ்வளவு வட்டி எப்படி சாத்தியம் என்று கணக்கீடு செய்யாமல், மனத்தின் வழியில் ஆசைகள் உந்த முதலீடு செய்தால், மூலதனத்தையே இழக்கும் நிலைதான் ஏற்படும். இன்றைய அவசர உலகில் வியாபாரம், பணம் என்று வந்துவிட்டால், நட்பு, உறவு எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
எங்கு மனத்தின் வழி முடிவெடுக்க வேண்டும்?
எங்கு மூளையின் வழி முடிவெடுக்க வேண்டும்?
என்பதுதான் எல்லோருக்குமான முக்கியமான கேள்வி. கணக்கீடுகளை சரிபார்த்து, இலாப-நஷ்டங்கள், சாதக-பாதகங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய இடத்தில், என் மனதிற்கு சரியென்று தோன்றுகிறது, அதனால் செய்கிறேன் என்று மனத்தின் வழியில் முடிவெடுத்தால், விளைவுகள் என்னவாகும்? சிலசமயம் விபரீதமாகவும் சாத்தியமிருக்கிறதே! அதே சமயம் கருணைகாட்ட வேண்டிய இடத்தில், இலாப-நஷ்டக் கணக்கு பார்த்தால், எப்படி புண்ணியம் சேர்ப்பது?
எப்போதும், எதையும் தவறான நேரத்தில், தவறாக செய்வதே பலருக்கு வழக்கமாகவும், விதியாகவும் இருக்கிறது. எங்கு, எதற்க முக்கியத்துவம் அளித்து வளர்ச்சிகாண வேண்டுமென்பதில் அதீத குழப்பம்.
கல்வியைப் பயில வேண்டிய நேரத்தில், பொழுதுபோக்கு முக்கியத்துவம்;
அன்பை பரிமாற வேண்டிய இடத்தில், கோபத்திற்கும்-கௌரவத்திற்கும் முக்கியத்துவம்;
தானம் கொடுக்க வேண்டிய இடத்தில், இலாப-நஷ்டக் கணக்குக்கு முக்கியத்துவம்;
முதலீடு செய்யும் இடத்தில், தொழிலையும் திறமையும் பார்க்காமல் மனிதனின் முகத்திற்கும், வாக்கறுதிகளுக்கும் முக்கியத்துவம்.
ஒருபுறம் அதீத குழப்பங்களால் முக்கியத்துவம் மாறி முடிவெடுப்பது. மறுபுறம், எந்தவொரு முடிவும் காலத்தே எடுக்காமல், தள்ளிப்போட்டுக் கொண்டேயிருப்பது.
எங்கு அறிவின் வழியில் திறமைகளை நிரூபிக்க வேண்டும்;
எங்கு அன்பின் வழியில் மனதை வெல்ல வேண்டும்;
எங்கு கருணையின் வடிவில் புண்ணியம் சேர்க்க வேண்டும்;
எங்கு இலாப-நஷ்டக் கணக்கீடுகளின் வழியில் முதலீடு செய்ய வேண்டும்;
என்று இடம்-பொருள்-ஏவலுக்கு தகுந்தவாறு, அறிவைக் கொண்டோ / மனத்தை கொண்டோ சரியாக முடிவெடுத்து செயல்பட்டால், பொருளும், புண்ணியமும் தானாகச் சேரும். தவறான இடத்தில், தவறான கண்ணோட்டத்தில் முடிவெடுத்தால், வெற்றிக்கான வாய்ப்பு சாத்தியமற்றப் போகும்.
கணக்கீடுகள்தான் வாழ்க்கை
வாழ்க்கையில் பணம் மட்டுமே கணக்கல்ல;
புண்ணியமும் கணக்குதான்;
அன்பும் அரவணைப்பும் கணக்குதான்;
அந்தக் கணக்கை
மூளை போட வேண்டுமா? மனம் போட வேண்டுமா?
என்பது மட்டும்தான் இங்கு கேள்வி!
மூளை போட வேண்டியதை மனம் போட்டாலோ
மனம் போட வேண்டியதை மூளை போட்டாலோ
கணக்கு ஏதேனுமொரு விதத்தில்
நஷ்டத்தில் தான் முடியும்;
- [ம.சு.கு 29.11.2022]
Comments