“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-50
பயணித்த பாதையை யாரும் கவனிக்க மாட்டார்கள்!
100 மீட்டர் பந்தய தூரத்தை பத்து வினாடிகளுக்குள் ஓடிக்கடந்து சாதனை புரிந்த உசேன் போல்ட்டை உலகம் மிக வேகமாக மனிதன் என்று கொண்டாடுகிறது. அவர் ஆரம்பக் கட்டங்களில் தகுதிச் சுற்றில் தோற்று வெளியேறியதைப் பற்றிய இன்று யாரும் பேசுவதில்லை இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா ஒலிம்பிக் இறுதிச்சுற்றில் பதக்கத்தை தவறவிட்டார் என்பதை மட்டுமே நம்மக்கள் நினைவில் வைத்துள்ளனர். அதற்கு முன்னர் அவர் பெற்ற பதக்கங்களை யாரும் நினைப்பதில்லை.
சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து உயிர்துறந்த பல தலைவர்களை நினைவில் வைத்துள்ளோம். அவர்கள் வென்றார்களா? தோற்றார்களா? என்றால் தெரியாது. ஆனால் அவர்கள் தேசத்திற்காக என்ன போராட்டம் செய்தார்கள் என்று தெரியும். இன்றைய தலைவர்கள் எத்தனை செல்வம் சேர்த்துள்ளனர் என்பது தெரியாது. ஆனால் என்ன ஊழல் செய்கிறார்கள் என்பது நன்றாக தெரியும். அவர்கள் தேர்தலில் வெற்றிபெற, பதவிகளை பெற, என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.
ஓட்டப் பந்தயத்தில் சாதித்த உசேன் போல்ட்டும், கடைசி நொடியில் தங்கத்தை தவறவிட்ட தங்க மங்கையும் நினைவில் இருக்கின்றனர். உலகின் பெரிய பணக்காரர் பெயர் கேட்டால்கூட தெரிகிறது. ஆனால் இவர்கள் வெற்றி தோல்வியை நோக்கி வந்த பாதையை பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. என்ன காரணம்?
தனிமனித பயணத்தில் உலகம் வெற்றி தோல்வியை பார்க்கும் மக்கள், பொதுநலன் என்று வந்து விட்டால், வெற்றி தோல்வியை விட பாதையைத்தான் நினைவில் வைத்திருக்கிறார்கள். காந்தியின் அஹிம்சையும், நேதாஜியின் வீரப்போரும், அவர்களின் வெற்றி தோல்விகளை கடந்து மக்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கிறது. அது ஏன்?
சமூகக் கண்ணோட்டத்தில் பயணிக்கும் பாதையை கவனிக்கும் இந்த சமுதாயம், தனி மனிதனை பார்க்கும் போது, பாதையை கவனிக்காமல், அவனுடைய வெற்றி தோல்வியை மட்டுமே பார்க்கிறது. ஏன்?
தனிமனிதனின் வெற்றி-தோல்வியை, ஒவ்வொருவரும் அவரவர்களின் நிலையோடு ஒப்பிடுகிறார்கள். தான் சாதிக்கநினைத்ததை அவர் சாதிக்கிறார் என்ற எண்ணத்தில் அவர்களின் இன்றைய வெற்றி தோல்வி மட்டுமே பெரிதாகத் தெரிகிறது. அதேசமயம், சமுதாயம் என்றுவரும்போது, மக்கள் நீண்ட காலத்தை பார்க்கின்றனர். நீண்டகால நோக்கில் என்றுமே பாதை முக்கியம் என்பதால், அதை அவர்கள் பெரிதாக எண்ணுகிறார்கள்.
ஏன் திடீரென்று தத்துவ பாடம் எழுதுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுதான்:
களம் கண்டு வெற்றி-தோல்விகளை பதிவு செய்யுங்கள்;
வென்றாலும்-தோற்றாலும், பங்கெடுத்த மனதிருப்தியும் அனுபவமும் உங்களுக்கு மட்டும்தான்;
நீங்கள் எப்படி வென்றீர்கள்? ஏன் தோற்றீர்கள்? என்று யாரும் கேட்கப்போவதில்லை. நீங்கள் வென்றதும்-தோற்றதும் குறித்து மட்டுமே உலகம் பேசும்.
ஆனால் உங்கள் மனநிறைவுக்கு, நீங்கள் பயணித்த பாதை மட்டுமே முக்கியம். வெற்றிக் களிப்பும், தோல்வியின் வலிகளும், சில தினங்களில் மறந்துபோகும். ஆனால் கடந்து வந்த பாதை மட்டுமே என்றும் மலரும் நினைவுகளாய் எண்ணத்தில் வந்துபோகும். எப்படி இந்த சமுதாயம், மக்கள்நலன் என்ற நீண்டகால நோக்கில் பாதையை கவனிக்கிறதோ, அதேபோல நீங்களும் உங்களின் நீண்டகால நோக்கில் உங்களின் பாதையில் கவனம் செலுத்துங்கள். சமுதாயத்தின் இன்றைய அங்கீகாரத்தை மட்டுமே குறியாக பார்த்துவிடாதீர்கள்.
உங்களின் பயணம்
உங்களின் அனுபவம்
உங்களின் மன நிம்மதி
என்ன என்பதை கவனியுங்கள்.
பி.டி உஷாவோ-உசேன் போல்ட்டோ, கிளின்டனோ-ஒபாமாவோ, சச்சினோ-செரினா வில்லியம்ஸோ, எல்லாருடைய தனிமனித வெற்றி-தோல்வி குறித்து நாம் பேசுவோம். அவர்களிடம் கேட்டால், அவர்கள் பயணித்த பாதையை மட்டுமே பேசுவார்கள். ஏனெனில் பயணித்த பாதை தான் அவர்களின் அனுபவமும், மனநிறைவும். கோப்பையை கையிலேந்திய நிமிடங்களும், பதக்கத்தை தாங்கிய நொடிகளையும்கூட அவர்கள் மறக்கலாம். ஆனால் அதையடைய அவர்கள் பயணித்த பாதை தான் அவர்களின் மனநிறைவு.
உங்கள் பாதையை உலகம் கவனிக்காமல் இருக்கலாம்
நீங்கள் கவனமாக பயணம் செய்யுங்கள்;
உங்கள் பயணத்தை இரசித்துச் செல்லுங்கள்;
வெற்றி-தோல்விகளின் முடிவு ஒரு நொடிதான் – ஆனால்
ஆடியோ ஆட்டம் தான் வெகுகாலம்;
சமுதாயம் அந்த ஒரு நொடியை மட்டும் பார்க்கும்
நீங்கள் ஆடிய காலத்தை கவனியுங்கள்;
நீங்கள் ஆட்டம் முழுவதும் கவனித்து ஆடிவிட்டால்
அந்த ஒருநொடி வெற்றி-தோல்விகள்
தானாக நிகழ்ந்து விடும்;
வெற்றி தோல்விகளைக் காட்டிலும்
ஆடிய ஆட்டம் மட்டுமே
உங்களின் எண்ணங்களில் நிரந்தரமானது;
- [ம.சு.கு 28.11.2022]
Comments