top of page

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-49 – செய்முறையை எளிமையாக்குங்கள்!"

Writer's picture: ம.சு.கும.சு.கு

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-49

செய்முறையை எளிமையாக்குங்கள்!


  • நம் பாட்டி காலங்களில், காலை நேர சிற்றுண்டிக்கு ஏதேனும் ஒருவகை உணவு மட்டுமே செய்யப்படும். இட்லி, தோசையானால் ஒரு வகை சட்னி மட்டுமே கிடைக்கும். ஆனால் இன்று, 2-3 வகை உணவு மற்றும் சட்னி வகைகளை பெண்கள் 1 மணி நேரத்தில் தயார் செய்து பரிமாறி விடுகின்றனர். கூட்டுக் குடும்பமாக 2-3 பெண்கள் சேர்ந்து வேலை செய்ததைவிட, இன்று ஒருவரே பல உணவுகளை சீக்கிரத்தில் செய்கிறார்கள். ஆனாலும் நம் பாட்டிமார்கள், இன்றைய பெண்கள் முந்தைய காலத்தினரைப் போல கடுமையாக உழைப்பதில்லை என்று குறைகூறுகின்றனர்.

  • அரை நூற்றாண்டுக்கு முன்னர் அலுவலகத்தில் ஓரிரு கடிதங்கள் தயார் செய்ய, கணக்கு வழக்குகளை தயார் செய்ய, திட்ட அறிக்கைகளை தயார் செய்ய பல மணி நேரங்கள் தேவைப்பட்டன. இன்று ஒருவரே எண்ணற்ற கடிதங்களை அச்சிட்டு அனுப்புவதோடு, கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளவும் முடிகிறது. கிட்டத்தட்ட 5 நபர்கள் செய்து வந்த வேலையை இன்று ஒருவரே செய்கிறார். கணினி எல்லாவற்றையும் மாற்றி விட்டது எனபீர்கள்! உண்மைதான்; ஆனால் கணினி மட்டுமே காரணம் அல்ல, செய்து வந்த மனிதனும் தான்.. எப்படி?

அன்று இட்லி செய்ய வேண்டுமானால் மாவரைப்பது துவங்கி, விறகடுப்பில் இட்லியை வேகவைத்து இறக்குவது, சட்னிக்கு அரைப்பது, என்று எல்லா வேலைகளுக்கும் 2-3 நபர்கள் ஓட வேண்டியிருந்தது. இன்று எல்லாமே இயந்திரமயமாக்கப்பட்டு, தானியங்கியாக அடுப்படியில் கைகெட்டும் தூரத்தில் இருக்கிறது. விளைவு, எல்லா வேலைகளையும் ஒருவரே சாமர்த்தியமாக கையாள முடிகிறது. நம்மவர் யாரோ, இயந்திர ஆற்றலை அடுப்படியில் எப்படி உபயோகிப்பது என்று யோசித்தார். கலவை இயந்திரம், அரைக்கும் இயந்திரம், எரிவாயு அடுப்பு, மின்சார அடுப்பு, என்று எண்ணற்றவற்றை உருவாக்கினர். அறிவியல் கண்டுபிடித்தது என்னவோ மின்சாரமும், மோட்டாரும் (விசைப்பொறி / சூழலி) தான். ஆனால் அதைக் கொண்டு எண்ணற்ற இயந்திரங்களை வடிவமைத்து, அட்டில் தொழிலை எளிமையாக்கி விட்டனர். இன்னும் புதுமைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.


அலுவலகத்தில் கடந்த அரைநூற்றாண்டில் எல்லாம் மாறிவிட்டது. இன்று அலுவலகங்கள் வீட்டிற்கே வந்துவிட்டன. தொழில்நுட்பம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. தொழில்நுட்பத்தை தாண்டி உண்மையில் மாற்றத்தை உருவாக்கியது நம் “தேவைகள்”தான். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அலுவலகம் செல்ல இயலாத நிலை. எப்படி அலுவலகத்தினை அவரவர் வீடுகளுக்கு மாற்றுவது என்று யோசித்து வழிகண்டனர்.


அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை தந்தாலும், அவற்றை எப்படி அலுவலகத்தில் பயன்படுத்தி நம் வேலையை எளிமையாக்கலாம், வேலையை வேகப்படுத்தலாம் என்று யோசித்தனர். ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்னவோ வெறும் கூட்டல் கழித்தல் செய்யும் கணக்கு இயந்திரம் தான். ஆனால் இன்று அதன் பரிமாணங்கள், கணிணி வடிவில், மென்பொருள் துணையோடு எல்லாவற்றையும் எளிமையாக்கிவிட்டது.


அடுப்படி மாறிவிட்டது; அலுவலகம் மாறிவிட்டது; போக்குவரத்து மாறிவிட்டது; தொலைத்தொடர்பு மாறிவிட்டது; பொழுதுபோக்கும் மாறிவிட்டது; அன்று கடினம் என்று நினைத்தவைகள் இன்று தானியங்கியாக நிகழ்கின்றன. இந்த மாற்றம் காலத்தின் கட்டாயம் என்று நீங்கள் நினைக்கலாம்; உண்மையில் யோசிக்கத் தெரிந்தவர்கள் சிலரின் தொடர் முயற்சியின் விளைவுகள்தான் இவை. செய்யும் செயலை எப்படி எளிமையாக்குவது என்று யோசித்தனர். பல்வேறு கண்டுபிடிப்புக்களை அன்றாட வேலைகளில் எப்படி பயன்படுத்தி பணிகளை எளிமையாக்கலாம் என்று யோசித்தனர்.


இன்று நடந்து கொண்டிருப்பவைகள் என்றைக்கும் நிரந்தரம் என்று நினைத்தால், நாம் ஒரே இடத்தில் தங்கி விடுவோம். காலமாற்றத்தில் நாம் அழிந்துபோகாமல் நிலைத்திருக்க வேண்டுமானால், வெற்றியாளராக வலம்வர வேண்டுமானால், மாற்றத்தை தொடர்ந்து நாம் ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்...

  • செய்கின்ற வேலையை எளிமையாக்குவது எப்படி?

  • வேலைகளை தவறுகள் நேராமல் தானியங்கி ஆக்குவது எப்படி?

  • உற்பத்தியை பெருக்குவது / உற்பத்தி செலவை குறைப்பது எப்படி?

என்று தொடர்ந்து ஆய்ந்து கொண்டே இருங்கள். சந்தையில் வரும் புதிய கண்டுபிடிப்புகளை எப்படி உங்கள் வேலையில் பயன்படுத்தி, உங்கள் நிறுவன வேலைகளை சுலபமாக்கி வேகப்படுத்தலாம் என்று யோசியுங்கள்.


இன்று செய்து வருகின்றவைகளை

காலத்துக்கும் அப்படியே செய்து வந்தால்

காலவெள்ளத்தில் கட்டாயம் அழிந்துபோவோம்;


வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும்

செய்பவற்றை எளிமையாக்குங்கள்;

எளிமை, பணியை வேகப்படுத்தும்;

வேகம், உற்பத்தியைப் பெருக்கும்;

உற்பத்திப்பெருக்கம் விலையை குறைக்கும்;

விலைக்குறைப்பு, சமுதாயத்தை வளமாக்கும்;


- [ம.சு.கு 27.11.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page