“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-43
இது என் வேலை இல்லை என்கிறீர்களா?
பெற்றோர்கள், நம் சிறுவயதில் நம்மை கடைக்கு அனுப்பி பொருட்களை வாங்கிவரச் சொல்வார்கள். நாம் வளர்ந்து வாலிபப் பருவம் எய்தும்போது, இன்னும் அதிகமாக வேலை சொல்வார்கள். வங்கிக்கு போய்வா, இரயில் நிலையம் சென்று பாட்டியை அழைத்துவா, இந்த படிவத்தை நிறப்பு,....என்று நிறைய வேலை சொல்வார்கள். பெரும்பாலானவற்றிற்கு, முதலில் நாம் முடியாது, எனக்கு தெரியாது, இது என் வேலை இல்லை என்று மறுத்திருப்போம். அவ்வாறு மறுப்பது சரியா?
சில கடைகளில், அலுவலகங்களில், ஒரு சிலர் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வார்கள். இது உன் வேலையில்லை என்று சொன்னாலும், பிறருக்கு உதவும் எண்ணத்தில் செய்து கொடுப்பார்கள். சில ஆண்டுகளுக்கு பின்னால், ஒன்று அவர்கள் அந்த நிறுவனத்தின் மேலாளராகி இருப்பார்கள்! (அல்லது) சுயமாக தெரிந்த தொழிலை துவக்கி வளர்ந்துகொண்டு வருவார்கள். அதேசமயம், அவருடன் பணிபுரிந்தவர்கள், தொடர்ந்து அதே வேலையை செய்து கொண்டிருப்பார்கள். இந்த இருசாராருக்கும் என்ன வித்தியாசம்?
பெற்றோர்கள் வேலை செய்ய கஷ்டப்பட்டு கொண்டு, குழந்தைகளிடம் வேலை வாங்குவதாக குழந்தைகள் எண்ணுகிறார்கள். ஆனால் பெற்றோர்கள் கண்ணோட்டத்தில், தன் பிள்ளை நான்கு இடங்களுக்கு போய் வரவேண்டும், உலகத்தை சீக்கிரத்தில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அதற்காக ஆரம்பத்திலேயே சின்னசின்ன விஷயங்களுக்கு வெளியில் அனுப்பி பழக்க முயற்சிக்கிறார்கள். வெளியுலகை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடைய பிள்ளைகள், இதையொரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் அந்த வேலையை சுமையாக பார்த்து தட்டிக் கழிக்கிறார்கள்.
அலுவலகத்தில், தன் வேலையோடு பிற துறைபணியாளர்களின் வேலைகளில் உதவி செய்வதன் மூலம், எல்லா வேலையும் கற்றுக் கொள்கிறார்கள். அந்த கற்றலில், நிறுவனத்தின் தேவைகளையும் முழுவதுமாய் புரிந்து கொள்கிறார்கள். எல்லா வேலைகளையும் தெரிந்தவர், குழுவாக வேலை செய்யத் தெரிந்தவர், நிறுவனத்தைப் புரிந்து கொண்டவர், என்ற முறையில் அந்த ஊழியர் பதவி உயர்வு பெற்று முன்னேறுகிறார்.
ஒருவேளை அந்த நிறுவனத்திலிருந்து விலகினாலும், எல்லா வேலையும் தெரிந்தவர், சகமனிதரோடு நல்லுறவு பாராட்டக்கூடியவர், தானே சிறிதாக தொழில் தொடங்கி முன்னேற முயற்சிக்கிறார். அவர் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்துபழகியதன் மூலம், கடுமையாக உழைப்பதற்கும் தயாராக இருக்கிறார். அதேசமயம் வேலையும் முழுமையாய் தெரிந்திருக்கும்படியால், அவருடைய தொழிலில் வளர்ச்சியடைய வாய்ப்புகள் அதிகம். இந்த உழைப்பாளிகளைப் போலல்லாமல், வேலைகளில் சோம்பேறித்தனம் காட்டுபவர்கள், வேலைகளை தட்டிக் கழிப்பவர்கள், வளர்ச்சிகள் ஏதுமின்றி ஒரே இடத்தில் தங்கி விடுகின்றனர்.
தன் வீட்டு வேலையை, நிறுவனத்தின் வேலையை, யாரொருவர் ஈடுபாட்டுடன் கற்று எல்லா வேலைகளையும் செய்கிறாரோ, அவரின் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கிரதென்று பார்த்தோம். ஆனால், இது எல்லா தருணங்களிலும் சாத்தியமா? அப்படி எல்லாவற்றிலும் ஈடுபட்டு செய்வது சரியா?
பிறருக்கு உதவுகிறேன் என்று செய்து, உங்கள் வேலை தாமதமானால், நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்காதா?
நீங்கள் உதவி செய்கிறேன் என்ற பெயரில், மற்றவரை சோம்பேறி ஆக்கினால், அவர் தினமும் உங்கள் உதவியை நாடுவாரே?
ஒரு பெரிய மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனத்தில், ஒவ்வொரு 6 நிமிடத்திற்கும், ஒரு வாகனம் உற்பத்தியாகி வெளியே வருகிறது. அங்கு பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் வேலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. அவரவர் வேலைகளை சரியாக செய்தால் உற்பத்தி தானாக வரும். அதை விடுத்து மற்றவருக்கு உதவுகிறேன் என்று இன்னொருவர் வேளையில் கவனம் செலுத்தினால், தன் பங்கு வேலை தாமதமாகி மொத்த உற்பத்தி சங்கிலியும் பாதிக்கும். இந்த பெரிய நிறுவனங்களில், உங்கள் வேலைகளை செய்து கொண்டிருக்கும்போது வேறு வேலைகள் சொல்லப்பட்டால், அது உங்கள் வேலை இல்லை என்று மறுப்பதுதான் நிறுவனத்தின் நோக்கில் சரியாக இருக்கும்.
பிறருக்கு உதவுவது நல்ல குணம் தான். அதற்காக நம் வேலைகளில் கவனத்தை இழந்து உதவுவதானால், நம்மை நம்பி வேலை கொடுத்தவருக்கு துரோகம் செய்வதாகிவிடாதா?
பெரிய நிறுவனத்தின் கதை இப்படி இருக்க, சிறிய நிறுவனங்களில் ஆட்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஒருவரே பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். அவ்விடம் அனைத்து வேலைகளையும் ஒருவர் செய்ய தயாராக இருக்க வேண்டும். அங்கு இது தன்னுடைய வேலையில்லை என்று சொன்னால், நீங்கள் மேலே கற்பதற்கான வாய்ப்பினை இழப்பதோடு, வளர்ச்சியையும் இழக்க நேரிடும்.
வேலைகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட்ட இடத்தில்
அவரவர் வேலையை அவரவர்கள் முதலில் செய்யட்டும்;
இங்கு ஒவ்வொருவரும் அவரவர் பணியில்
வேகத்தைக் கூட்டி நிபுனத்துவத்தை வளர்த்திருப்பார்கள்;
அதே சமயம் சிறுநிறுவனங்களில்
“இது என் வேலையில்லை” என்று சொன்னால்
“உனக்கு இங்கு இனி வேலை இல்லை” என்று
வீட்டுக்கு அனுப்புவார்கள்;
சில இடங்களில் பிற வேலையை ஏற்பது குற்றம்!
சில இடங்களில் பிற வேலையை மறுப்பது குற்றம்!
எங்கு எந்தப் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று
இடத்திற்கும், காலத்திற்கும் ஏற்ப நிர்ணயுங்கள்;
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருங்கள்!
- [ம.சு.கு 21.11 2022]
Comments