“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-42
அடிப்படைகளில் கோட்டை விட்டுவிடாதீர்கள்!
நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள், கணித பாடத்தில் 100/100 எடுக்கும் முயிற்சியில் அவ்வப்போது ஓரிரு மதிப்பெண்களை கோட்டை விட்டுவிடுவார்கள் .அவர்களின் விடைத்தாளை பார்த்தால். அந்த மதிப்பெண் இழப்பிற்கான காரணம் சாதாரண கூட்டல் / கழித்தல் / பெருக்கல் / வகுத்தலில், கவனக்குறைவினால் தவறு செய்திருப்பார்கள்.
சில வருடங்களுக்கு முன்னர் நம் சென்னையின் 13 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில் இடிந்து விழுந்தது. காரணத்தை ஆராய்ந்த நிபுணர்கள் அதன் அடித்தளமும், கம்பி அமைப்புக்களும் இயற்கை சீற்றங்களைத்தாங்க போதுமான அடிப்படை பாதுகாப்புக்களை கொண்டிருக்கவில்லை என்று அறிக்கை அளித்தனர். அந்த சம்பவத்தில் 50+ பேர் உயிர் இழந்ததால், சம்பந்தப்பட்ட பொறியாளர் வரை எல்லோரும் வழக்குகளை சந்திக்க நேர்ந்தது.
கணித பாடத் தேர்வுகளில், அடிப்படை கூட்டல் கழித்தல்களில் தவறு செய்து, தேவையின்றி மதிப்பெண் இழந்த அனுபவம் நம் எல்லோருக்கும் இருக்கும். பள்ளியைத் தாண்டி, இன்றும் சில சமயங்களில் கடைகளில் பணம் கொடுத்து வாங்கும்போது கூட எண்ணற்ற கூட்டல் கழித்தல் தவறுகளை செய்கிறோம். இந்த தவறுகளுக்காக, நாம் கணிதத்தை சரியாக கற்கவில்லை என்றாகிவிடாது. சில அடிப்படையான, மிக எளிமையான கணக்குகளை போடும்போது, அவசரத்தினாலோ, கவனக்குறைவின் காரணமாகவோ, 1+1=3 என்று தவறாக எழுதிவிடுகிறோம்.
கட்டிட கட்டுமானத்தின் அடிப்படைகள் தவறானால் கட்டிடம் நிற்பதே கேள்விக்குறியாகி விடுகிறது அடித்தளம் போதுமான அளவு அகலமாக கட்டப்பட்ட கல்லணை இன்றும் நின்று பயனளிக்கிறது. ஆனால் அடிப்படை அஸ்திவாரத்திலோ, மணல்-சிமென்ட் கலவை விகிதத்திலோ, கம்பி அமைப்பிலோ கோட்டை விடும் பொறியாளரின் கட்டிடங்கள், எத்தனை நாட்களுக்கு தாங்கும் என்பது ஐயமே.
அடிப்படைகளை தெளிவுற படித்தறிவதோடு, அவற்றை செய்யும்போதும் கவனமாக அடிப்படைகளை ஓரிருமுறை மறுஆய்வு செய்வது அதிமுக்கியம். மருத்துவம், விஞ்ஞானம், வானியல், வேதியியல், இயற்பியல் என்று எல்லாத் துறைகளிலும் எண்ணற்ற அடிப்படைகள் இருக்கின்றன. அடிப்படைகள் சரிவர தெரிந்திருந்தால், அவற்றை கவனமாக செய்தால், எந்தவொரு பெரிய தவறுகளும் ஏற்படாது. உங்களை யாரும் ஏமாற்றவும் முடியாது. அடிப்படைகள் தெரியாவிட்டால், யார்வேண்டுமானாலும் உங்களை தவறாக வழி நடத்தக்கூடும்.
மேலே குறிப்பிட்ட கணித மதிப்பெண், கட்டிட அமைப்புக்கள் எல்லாம் சிறிய உதாரணங்களே. உங்களுக்கு நீங்களே யோசியுங்கள்.
எங்கெல்லாம் அடிப்படை விடயங்களில் கவனக்குறைவினால் தவறு செய்தீர்கள்?
அடிப்படை தவறானதால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் என்ன?
மாணவர்களுக்கு, எல்லாவற்றிலும் குறைந்தபட்ச அடிப்படை அறிவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, 10-ஆம் வகுப்பு வரையில், மாணவர்களுக்கு எல்லா பாடங்களும் கட்டாயமாக்கப்பட்டது. போதிய அடிப்படை அறிவைப் பெற்ற பின்னர், அவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை 11-ஆம் வகுப்பு முதல் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
அடிப்படைகள், கல்வி தொழிலுக்கு மட்டுமென்றில்லாமல், நம் அன்றாட வாழ்க்கைக்கும் அனுபவத்தில் வகுக்கப்பட்டிருக்கிறது. வாழ்வில் உறவுகள் செழிக்க, அன்றாடம் எண்ணற்ற அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குடும்பமும் உறவுகளும் மகிழ்வுற, அன்பையும், அரவணைப்பையும் அடிப்படையாகக் கொண்டு, போதிய நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கி, அவர்கள் கருத்துக்களுக்கு செவி சாய்த்து, இன்பதுன்பங்களில் பங்கெடுக்கும்போது உறவுகளுக்குள் நம்பிக்கை வளர்ந்து, வலுப்பெற்று உறவுகள் மேம்பட்டு வாழ்க்கை வசந்தமாகிறது. இந்த அடிப்படைகளை கோட்டை விட்டால் வாழ்க்கையில் நிம்மதியை இழக்க நேரிடுகிறது.
அடிப்படைகளில் கோட்டை விடக்கூடாது என்று நமக்கே தெரிந்திருந்தாலும், இந்த அடிப்படை தவறுகள் அடிக்கடி நிகழ்வதற்கான காரணங்கள் சில:
அடிப்படை நன்கு தெரியும் என்றவுடன், இயல்பான சோம்பேறித்தனமும், மெத்தனப்போக்கும் நமக்கு வந்து விடுகிறது.
கவனக்குறைவாலும், வேலைக் களைப்பினாலும், அவ்வப்போது தவறுகள் நேரலாம். அதை தவிர்க்க, செய்தவற்றை மறுமுறை நாமே பரிசீலித்து பார்ப்பதில்லை.
செய்வதை கவனமாகச் செய்யுங்கள்;
செய்ததை மறுஆய்வு செய்து பாருங்கள்;
அடிப்படைகளில் கோட்டை விட்டால்
அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடும்;
அடிப்படைகள் சரியானால் தான்
எல்லாமே சரியாக அமைக்க முடியும்;
- [ம.சு.கு 20.11.2022]
Comments