top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-35 – ஆதாரமற்ற தகவல்களில் அதிக நேரம் வீணாக்காதீர்கள்?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-35

ஆதாரமற்ற தகவல்களில் அதிகநேரம் வீணாக்காதீர்கள்?


 • ஒரு பெரிய நடிகருக்கும், புதிய நடிகைக்கும் இரகசிய உறவு இருப்பதாக வதந்தி வருகிறது. இந்த செய்தியில் உங்களுக்கு ஏதேனும் பயனுண்டா? நீங்கள் பத்திரிக்கையாளரானால், சூடான செய்திகளுக்காக இதை சற்று ஆழமாக தேடலாம். நீங்கள் சாமானியனாக இருந்தால், இந்த செய்தியில் நேரம் கழிப்பதில் என்ன பயன்?

 • உங்களுக்கு பிரிட்டன் நாட்டு பரிசுச்சீட்டில் ஒரு மில்லியன் டாலர்கள் பரிசு விழுந்திருக்கிறது என்று மின்னஞ்சல் வருகிறது. பரிசை பெற சில தகவல்களுடன் பதிலனுப்பவும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த புதிரான மின்னஞ்சலுக்கு உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்? உங்கள் அறிவாளி நண்பனின் பதில் எப்படி இருக்கும்? உங்கள் கடனாளி நண்பனின் பதில் என்னவாக இருக்கும்?

கிசுகிசு செய்திகள் சுவாரசியமாக இருக்கிறதென்று தேடிதேடி படித்து நேரத்தை வீணடிக்கிறோம். அந்த செய்தி உண்மையா? என்று நமக்குத் தெரியாது. ஆனால் அதுதான் உண்மையென்று நம்பி ஊர்பூராவும் அரட்டை அடிக்கிறோம். அந்த சினிமா சார்ந்து கிசுகிசுக்களால் நமக்குப் பைசா பிரியோசனம் இல்லையென்று அறிவுரை சொன்னாலும் கேட்பதில்லை.


தினம்தினம் நிறைய மின்னஞ்சல்கள் பரிசு விழுந்துள்ளது, இலவசம், தள்ளுபடி, சலுகையென்று தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கும். குறிப்பாக பரிசுச்சீட்டில் தேர்வாகியுள்ளீர்கள், இலவசம் என்று வருவதை நம்பி அடுத்த அடியெடுத்துவைப்பதற்கு முன்னர், முதலில் உங்களுக்குள் ஒரு கேள்வியை கேட்டுக் கொள்ளுங்கள்?

 • உங்களுக்கு இலவசமாக கொடுப்பதில் அவர்களுக்கென்ன ஆதாயம் இருக்கப்போகிறது?

 • ஆதாயம் இல்லாமல் கொடுக்க அவரென்ன நம் மாமனா? மச்சானா?

இன்றைய அவசர உலகில், யாரும் யாருக்கும் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்வதில்லை. ஒருவிதத்தில், ஆதாயங்களுக்காக வருவதைக்கூட அவற்றின் தேவைக்கேற்ப ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பரிசு, இலவசம் என்கின்ற பெயரில் எண்ணற்ற ஏமாற்றுதல்கள் நிகழ்வதுதான் வேதனைக்குரியது. பரிசுச்சீட்டில் வென்றுள்ளீர்கள், பெரிய பணக்காரரின் சொத்து உங்களுக்கு வருகிறதென்று நயமாகப்பேசி, சில சோதனைக் கட்டணங்களென்று லட்சங்களில் வாங்கி ஏமாற்றி விடுகின்றனர்.


நம்மை குறிவைத்தோ அல்லது பொதுவாகவோ வருகின்ற தகவல்களை, எப்படி இனம்கண்டு தவிர்ப்பது?

 • தகவல் எதுவானாலும், ஒருகணம் அதை உங்கள் நோக்கிலும், எதிராளியின் நோக்கிலும் யோசித்தால், அதன் அடிப்படைத் தன்மை எளிதில் புரியவரும்.

 • மறந்துவிடாதீர்கள். இங்கு உங்களுக்கு எதுவும் இலவசமில்லை. எல்லாமே ஒரு கணக்குதான்.

 • எங்கும், எப்போதும் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது முதன்மையானது.

 • கோபம், உணர்ச்சிவயப்படுதல் இல்லாதிருத்தல் மிக முக்கியம்.

 • முடிவுகளை அக்கணமே எடுக்காமல், அந்த சூழ்நிலையிலிருந்து விலகிநின்று யோசியுங்கள்.

இணையத்தால் இணைந்துவிட்ட உலகில், உங்கள் நேரத்தைச் சாப்பிட எண்ணற்றவைகள் இருக்கின்றன. சமூக வலைதளங்கள் தொடங்கி, கேளிக்கை விருந்துகள், தொலைக்காட்சி, மாயத்திரை விளையாட்டு, வீண் அரட்டைகள் என்று நேரத்தை போக்கிக் கொண்டே இருக்கலாம். ஆனால் அதனால் உங்களுக்கென்ன பயனென்று யோசியுங்கள்?


யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பி சென்றுவிடாதீர்கள். நம்மிடம் வருகின்ற, நம்மைச் சுற்றியுள்ள தகவல்கள், நம் சிந்தனையிலேற்று நேரம் செலவழிப்பதற்கு முன்னர், அதன் உண்மைத் தன்மையை முதலில் சோதித்துப் பார்க்க வேண்டும். சொல்பவர் யார், அவரின் தற்போதைய நிலை, விஷயத்தின் தன்மை, காலச் சூழ்நிலைகளை பொறுத்து:

 • அதை நம்புவதா? வேண்டாமா?

 • எதன் பொருட்டு நம்மிடம் வந்துள்ளது?

 • அது நமக்கு தேவையா? தேவையில்லையா?

என்று பொறுமையாக சிந்தித்து பதில் காணுங்கள். செய்திகளை நம்பி, நீண்ட தூரம் பயணித்தபின், அவை பயனற்றதென்று தெரிந்தால், செலவிட்ட நேரம் வீண்தானே. வாழ்க்கையில் பணத்தைத் தாண்டி, நேரமும் உங்களுடைய பெரிய சொத்துதான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தகவல்கள் எதுவானாலும் – அதன்

மூலாதாரத்தை கவனியுங்கள்;

தேவையானதென்றால் அடுத்த அடியை சிந்தியுங்கள்;

தேவையற்றதென்றால் ஆரம்பத்திலேயே தவிர்த்திடுங்கள்;

வீணானவற்றின் பின் சென்றால் - நாமும்

வீணாகத்தான் போக நேரிடும்;


- [ம.சு.கு 13.11.2022]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentários


Post: Blog2 Post
bottom of page