top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-34 – “அனுபவம்” ஆண்டுகளில் தீர்மானிக்கப்படுகிறதா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-34

"அனுபவம்" ஆண்டுகளில் தீர்மானிக்கப்படுகிறதா?


  • கட்டிட வேலைக்கு, ஓட்டுநர் வேலைக்கு, குப்பையகற்றும் வேலைக்கு, இதர எடுபிடி வேலைகளுக்கு ஆள் எடுக்கும் போது, உங்கள் அனுபவம் 10-ஆண்டாக இருந்தாலும் 20-ஆண்டாக இருந்தாலும் சம்பளம் ஒன்றுதான். அதேசமயம் நிர்வாக பொறுப்பிற்கு ஆள் எடுக்கும் போது அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. ஏனென்று யோசித்திருக்கிறீர்களா?

  • பெரிய நிறுவனங்களில் பல வருடங்களாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். புதிதாய் வேலைக்கு சேரும் சில இளைஞர்கள் அந்த அனுபவசாலிகளை விட வேகமாக பதவி உயர்வு பெற்று முன்னேறி விடுவார்கள். அதைப்பற்றி ஆதங்கத்துடன் குறை கூறிக்கொண்டே, அதே நிறுவனத்தில் அந்த அனுபவசாலிகள் காலங்கழிப்பார்கள். இது ஏன் என்று யோசித்து புரிந்துகொள்கிறார்களா?

நம் அன்றாட வாழ்வில் கடக்கும் இந்த அதீத அனுபவசாலிகளிடம் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது?

  • இலட்சக்கணக்கான மைல்கள் ஓட்டிய ஓட்டுனருக்கு, சில ஆயிரம் மைல்கள் ஓட்டிய ஓட்டுனருக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது.

  • 10-ஆண்டுகளாக குப்பை அள்ளியவருக்கும், 2-ஆண்டுகளாக குப்பை அள்ளுபவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது?

  • பல வருடங்களாக நிறுவனத்தில் செய்து வந்த காசாளர் வேலையை இன்னும் 10-ஆண்டுகள் கூடுதலாக செய்வதால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது?

இவர்கள், செய்ததையே திரும்பத்திரும்ப ஆண்டாண்டு காலமாய் செய்து அனுபவம் என்றபெயரில் ஆண்டுகளை கூட்டிக்கொண்டவர்கள். இவர்களுக்கு மத்தியில், சிந்திக்கத் தெரிந்த, புதிய மாற்றங்களை ஏற்று செயல்படுத்தக்கூடிய இளைஞர்கள் வந்தால், அவர்கள் இந்த அனுபவசாலிகளை ஓரங்கட்டிவிட்டு, பதவி உயர்வு பெற்று மேலே போய்க் கொண்டேதான் இருப்பார்கள்.


இவர்கள் கூறும் 20 ஆண்டு அனுபவம் என்பது ஓர் ஆண்டு அனுபவத்தை 20 முறை திரும்பத்திரும்ப செய்ததுதான். நிறுவனங்களை பொருத்தமட்டில், இவர்களை பாரமாகவே கருதுகிறது. ஏனெனில் இவர்களுக்கு அனுபவம் என்ற பெயரில், உற்பத்திப் பெருக்கம் இல்லாமல், சம்பளத்தை மட்டும் வருடாவருடம் அதிகரிக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கு மாற்றாய் இளைஞர்களை, புதியவர்களை நியமிக்க நிறுவனங்கள் தயாராக இருக்கிறது.


செய்ததையே செய்து காலம் கடத்தி விட்டு நான் மிகவும் அனுபவசாலி என்று சொல்வதில் பயன் ஏதும் இல்லை. வெந்ததை தின்று, வீணறட்டை பேசி, காலங்கழித்தாரை வேடிக்கை மனிதரென்று பாரதி சொன்னார். ஒன்றையே திரும்பத்திரும்ப செய்து, நீண்ட அனுபவம் பெற்றுள்ளேன் என்று சொல்பவரும் வேடிக்கை மனிதர் தானே! எனக்கு உப்புமா சமைப்பதில் 50-வருட அனுபவம் என்று யாராவது சொன்னால், சிரிக்க மாட்டார்களா?


அனுபவம் என்பது நேற்று செய்ததை இன்று திரும்பச் செய்வதில் இல்லை;

  • இன்று என்ன புதிதாக கற்றோம்?

  • நேற்று கற்று செய்தவற்றில், இன்று என்ன மேம்படுத்தினோம்?

  • என்ன புதுமை படைக்க ஆராய்ந்தோம்?

  • மாற்றத்திற்கான நமது முன்னெடுப்பென்ன?

என்ற அறிவின் வளர்ச்சி / செயலின் சிறப்பாக்கம் சார்ந்த போக்கே அனுபவம்.


7-கண்டங்கள், 200+நாடுகள், 1000+இனமக்களின் வாழ்க்கைமுறைகள், அறுசுவை, நவரசம், பேரிலக்கியங்கள், உலகப் பொதுமறைகள், பெரும் காப்பியங்கள் என்று எண்ணிலடங்கா வளமும், அறிவும் சொரிந்தது இந்த பூமி. உற்று நோக்கினால், இந்த பிரம்மாண்ட பூமிகூட பறந்த பிரபஞ்சத்தின் சிறியஅனுதான். இந்த பறந்துபட்ட அறிவுலகில். நீங்கள் எந்த அளவு மூழ்கி முத்தெடுக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் அனுபவம்!


செய்ததையே செய்வதானால், அதை எப்படி எளிதாக்கி, வேகப்படுத்தி முடிப்பதென்று கண்டுபிடியுங்கள். புதியவற்றை தேடி கற்றுக் கொள்ளுங்கள். உலகத்தின் அத்தனை அறிவையும் தன்னுள் அடக்கும் அளவிற்கு நம் ஒரு கிலோ மூளைக்கு ஆற்றல் இருக்கிறதென்றால், இந்த உடலின் அமைப்பே பிரம்மிப்பிற்குரியதுதானே.


அறிவு எங்கும் கொட்டிக் கிடைக்கிறது;

அதிசயங்கள் எங்கும் வியாபித்திருக்கிறது;

அனுபவத்தைக் கூட்ட உலகத்தை சுற்றி வாருங்கள்;

அஞ்ஞானத்தை களைய தேடித்தேடி படியுங்கள்;

கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்;


செய்ததையே செய்து நூறாண்டை நிரப்பாமல்

புதுமைகளை கூட்டி புத்துணர்வுடன் பயணியுங்கள்;

தளர்ந்த வயதில் அசைபோட

ஆயிரம் கோடி ஆஸ்திகளை விடவும்

ஆயிரமாயிரம் அனுபவங்கள் ஆனந்தமாகும்.


- [ம.சு.கு 12.11.2022]



Recent Posts

See All

நீங்கள் பெரிதாய் செய்யவேண்டுமானால் அதை உங்களுக்காக செய்துதர ஒரு நம்பிகையான ஆதரவுக்கூட்டம் இருக்கவேண்டும்; அந்த ஆதரவு கூட்டத்தை தேடுங்கள்!

மனஅழுத்தம், உளைச்சல், அமைதியின்மையை தவிர்க்க மாத்திரைகளைவிட அன்றாட தியானமும், மூச்சுப்பயிற்சியும் – உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்

Post: Blog2 Post
bottom of page