top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-33 – இன்று பெரிதென நினைத்தது நாளை தேவையற்றதாகலாம்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-33

இன்று பெரிதென நினைத்தது நாளை தேவையற்றதாகலாம்?


  • இன்றைய தினம் தன் தலைவனின் திரைப்படம் வெளியானதை முதல் காட்சியில் பார்த்தே தீர வேண்டுமென்று போராடி திரையரங்கு சென்று ஒரு நாளையே வீணாக்குவார்கள். ஒரு வாரத்திற்குப் பின் முற்றிலுமாய் மறக்கப்போகும் ஒன்றிற்காக, ஒருநாளை வீணாக்கிவிடுகின்றனர்.

  • இன்றைய நடைமுறை / போக்கு என்று, தேடித்தேடி எடுத்த உடைகளை, நம் பிள்ளைகள் ஓரிருமுறை அணிந்த பின் கண்டு கொள்வதேயில்லை. உடை மட்டுமன்றி, விளையாட்டு பொருட்கள், பள்ளிக்கு கொண்டு செல்லும் பொருட்கள் என்று எல்லாவற்றையும் ஏதோ ஆசையில், அவசரம் என்று நிர்பந்தித்து வாங்குகின்றனர். ஒரு வாரத்திற்கு பின் அவை கேட்பாரற்று வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் கிடைக்கிறது.

புத்தம் புதிதாக வெளியாகும் படத்தை முதல் காட்சியிலேயே பார்க்க வேண்டும் என்று இரசிகனுக்கு ஆசை. அதற்காக ஒரு நாளையே செலவு செய்யவும் தயார். ஒரு வாரத்திற்கு பின் காற்று வாங்கப் போகும் படத்திற்கு, மணிகணக்கில் காத்திருந்து பார்க்கப் போராடும் இந்த பாசக்கார இரசிகர்கள் கூட்டத்திற்கு, வாழ்வின் யதார்த்தத்தை எப்படி புரிய வைப்பது? வளர்ந்த இரசிகப்பட்டாளத்திற்கே புரியாதபோது, சுட்டித்தனமும், விளையாட்டுத்தனமும் நிறைந்த நம் பிள்ளைகளுக்கு, பொருட்களின் மீதான மோகம் தற்காலிகமானதென்று எப்படி புரிய வைக்க முடியும்?


ஒருபக்கம் பொருட்களின் மீதான மோகம். மறுபுறம் தலைக்குமேல் அவசர காரியங்களை வைத்துக்கொண்டு திண்டாடும் பழக்கம். இவற்றுக்கிடையே, எதைச் செய்வது? எதற்குச் செய்வதென்று? தெரியாமலே செய்யும் குழப்ப நிலை. நம் நேரம் எப்படி செலவாகிறதென்று நமக்கே புரிவதில்லை.


உங்களுக்கு நீங்களே ஒரு சுய அலசல் செய்து பாருங்கள்.

  • நேற்றைய தினத்தை, எப்படி செலவு செய்தீர்கள்?

  • எந்தெந்த செயலுக்கு, எவ்வளவு நேரம் ஒதுக்கி செய்து முடித்தீர்கள்?

  • எந்த செயலை துவக்கிய பின்னர் தேவையில்லை என்று பாதியிலேயே நிறுத்தினீர்கள்?

  • நேற்று நேரம் செலவிட்டு செய்த செயலால், இன்றைக்கும் நாளைக்கும் பலன் இருக்கப் போகிறதா?

  • நேற்றைய செயல்களை, சற்று முன்னரே சிந்தித்து, திட்டமிட்டு செய்திருந்தால், அவற்றை சீக்கிரமாகவும் / எளிமையாகவும் / சிறப்பாகவும் செய்திருக்க முடியுமா?

  • நேற்று செய்ய வேண்டியவைகளை முடிக்காமல் விட்டதால், இன்று தலைவலியாய் ஏதேனும் காரியம் உட்கார்ந்திருக்கிறதா?

  • நேற்றைய செயல்களால் ஏற்பட்ட மனஉளைச்சல் என்ன?


இந்தக் கேள்விகளுக்கான விடை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும். எல்லா பதில்களின் மைய புள்ளியாக, உரிய சிந்தனையும் போதிய திட்டமிடலும் இல்லாமல் செயல்பட்டது மூலகாரணமாக இருக்கும்.


இன்று, இக்கணம் எதை அவசரம், அவசியம் என்று நினைக்கிறோமோ, அது அடுத்த நாள், அடுத்த மாதம், தேவையற்றதாகக் கூடும். சிலநாட்களுக்குப் பின் யோசித்தால், எதற்காக அன்று அவ்வளவு அவசரப்பட்டு செய்தோம்? என்று நீங்களே கூட நொந்து கொள்ளக்கூடும். அதற்காக என்றிருந்தாலும் சாகத்தான் போகிறோம், அதனால் எதுவும் தேவையில்லை என்று எதையும் செய்யாமலும் இருக்க முடியாது. வாழ்க்கையை நகர்த்த தொடர்ந்து ஏதேனுமொன்றை செய்துகொண்டேதான் இருக்கவேண்டும்,

  • ஒரு சிலவற்றை நீங்களே சிந்தித்து செய்யலாம்;

  • ஒரு சில செயல்களை, பிறரின் நிர்பந்தத்தின் காரணமாக செய்யலாம்;

  • ஒரு சில செயல்கள், காலத்தின் நிர்பந்தத்தால் தானாக செய்யப்படலாம்.

செயல்கள் எதுவானாலும், அது அன்றைக்கு தேவையா? அதன் எதிர்கால பயன் என்ன? என்று தெளிவு அதை துவங்குவதற்குமுன் நமக்கு இருக்கிறதா? என்பதுதான் இங்கு கேள்வி.

  • பெற்றோரின் நிர்பந்தத்தின் பேரில்தான் கல்வி நமக்கு ஆரம்பிக்கப்படுகிறது. அன்று அதுநமக்கு கடினமாகப்பட்டாலும், நம் எதிர்காலத்தை அந்த கல்வி வளப்படுத்துகிறது;

  • ஆனால், நண்பர்களின் நிர்பந்தத்தின் பேரில் ஆரம்பிக்கும் புகைபிடித்தல், மதுஅருந்துதல் பழக்கங்கள், நம்மையே சீரழிக்கறது. இன்றையதினம் நட்பை மதிக்கிறோம் என்று அவற்றை துவக்கினால், விதி நம்மையும் அழிக்கத்தான் செய்யும்;

எந்தச் செயலைச் செய்வதானாலும்

நாளை தேவையை கருத்தில் கொள்ளுங்கள்;

நேற்றைப் பற்றி கவலைப்படாமல்

பிறரின் நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல்

செயலின் அவசர-அவசியங்களை தீர்க்கமாக அலசுங்கள்;


இன்று அவசரமானதாக உணரப்படுவது

நாளை அவசியமற்றதாக போகக்கூடும்;

உங்கள் தீர்க்கமான சிந்தனையும் திட்டமிடலுமே

உங்களின் நேரத்தை பொன்னாக்கி புனிதமாக்கும்!


- [ம.சு.கு 11.11.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page