“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-32
உரிய அதிகாரம் கொடுக்காமல் எதிர்பார்க்கும் முடிவுகள் சாத்தியமா?
வீட்டு வரவு செலவு கணக்குகளுக்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள். மாதக்கடைசியில் துண்டுவிழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பாகிறது. அதேசமயம், அன்றாடம் என்ன செலவு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் உங்களிடமில்லை. அதை உங்கள் கணவர் தான் தீர்மானிப்பார். அவர் தங்கள் ஆலோசனையை கேட்காமல், இஷ்டத்துக்கு செலவு செய்தால் நீங்கள் வரவு-செலவை நிர்வகிப்பது சாத்தியமா?
உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் நகர் மன்ற உறுப்பினராக தேர்வு பெறுகிறீர்கள். ஆனால் எதிர்க்கட்சியினர் அதிகம் ஜெயித்து தலைவர் பதவியை கைப்பற்றுகின்றனர். நீங்கள் உங்கள் பகுதியில் என்ன மாற்றம் செய்ய முயற்சித்தாலும், எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர், பாரபட்சமாக நடந்தால், உங்களின் தேர்தல் வெற்றியால் மக்களுக்கு ஏதும் பயன்கிடைக்குமா?
வரவு செலவுகளை நிர்ணயித்து, மாதாமாதம் மிச்சம் பிடிக்க வேண்டும் என்றால், செலவுகளை முடிகின்ற அளவு குறைக்க வேண்டும் [அல்லது வருவாயை அதிகரிக்க வேண்டும்]. செலவுகளை குறைக்க வேண்டுமானால், எதை செய்யலாம், எது தேவையற்றது என்று நன்றாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். வரவு-செலவை நிர்வாகிக்கும் பொறுப்பு உங்களிடமிருக்க, செலவை தீர்மானிப்பது மற்றொருவாக இருந்தால், நீங்கள் எப்படி மிச்சம் பிடிக்க முடியும். இது வீட்டு நிதிநிலை என்றில்லாமல், நாட்டு நிதிநிலை மற்றும் நிர்வாகத்திற்குமானது. நாட்டின் வரி வருவாய்களையும், திட்டங்கள் & இலவசங்களை நிர்வகிப்பவராக இருந்தாலும், பல அரசியல் நிர்பந்தங்களால் முடிவுகளை எடுக்க முடியாவிட்டால், நிதி நிலையில் துண்டு விழத்தானே செய்யும்.
ஆளும்கட்சியோ-எதிர்க்கட்சியோ, மக்கள்நலனில் அக்கறையுள்ள மன்ற உறுப்பினர் செயலாற்ற போதுமான அதிகாரம் தேவை. ஆனால் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் பாரபட்சமாக நடந்தால், இந்த உறுப்பினர் என்ன செய்யமுடியும். இவரை நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ன பயன்! இதனால்தான், மக்கள் பெரும்பாலும் “ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போட வேண்டும்” என்கின்றனரோ!
நீங்கள் கடைக்கு ஒரு குறிப்பிட்ட பொருள் வாங்க செல்கிறீர்கள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதற்கான உரிய மாற்றுப் பொருளைக் கேட்டு வாங்கி வரும் அதிகாரம் உங்களிடம் இருந்தால், பொருளை வாங்கிவந்து வேலையை முடிக்கலாம். அதிகாரமில்லாவிட்டால், வீட்டுக்கு வந்து கேட்டு, ஒப்புதல் பெற்றபின், சென்று வாங்க வேண்டும். விளைவு - காலதாமதம்!
அலுவலகத்தில் ஒரு பெரிய திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை உங்கள் மேலாளரொருவரிடம் கொடுக்கிறீர்கள். அவருக்கு மேலும் 10 நபர்களை உதவிக்கு பணிபுரிய கொடுக்கிறீர்கள். அவர்களில் சிலர், அவருக்கு போதிய ஒத்துழைப்பு தராமல் இருந்தால், எப்படி திட்டம் நிறைவேறும். முறையாக வேலைசெய்யாதவர்கள் மேல் நடவடிக்கையெடுக்கும் அதிகாரம் அவரிடம் இல்லாவிட்டால், அவர்பாடு திண்டாட்டம் தான்.
இன்றைய காலகட்டத்தில் அதிகாரம் செய்யக்கூடாது, ஊழியர்களோடு சக ஊழியனாக இணைந்து பரஸ்பரம் நம்பிக்கை வளர்த்து வேலைகளை வாங்க வேண்டும் என்று எண்ணற்ற நிர்வாகவியலாளர்கள் பாடம் எடுக்கின்றனர். அந்த அனுகுமறை 100% எல்லாவிடத்திலும் கைகொடுக்குமா என்றால்? யாராலும் உறுதிப்பட கூறமுடியாது!
உங்கள் குழுவிலுள்ளவர்கள் எல்லோரும் சுயபுத்தி உடையவர்களானால் இந்த அனுகுமறை சாத்தியப்படலாம். ஆனால் நாட்டில் சொல்புத்தியுடையவர்கள் தானே மிக அதிகம். அதிலும் குறிப்பாக பல சொல்புத்திக்காரர்கள் தங்களை அதீத சுயபுத்திக்காரர்களாக எண்ணி கொள்வது தான் மிகமிக அதிகம். இவர்களிடம் வேலை வாங்க உங்களிடம் போதுமான அதிகாரம் இல்லாவிட்டால், எப்படி திட்டத்தை குறித்தநேரத்தில் முடிப்பது.
உங்களிடம் போதுமான அதிகாரம் இல்லாவிட்டால் [எதிர்மறை விளைவுகளாக]
சக ஊழியரின் பதில் சலிப்புடன் வரும். சில சமயங்களில் மறுக்கவும் செய்வர்;
சக ஊழியரின் செயல் மிக மெதுவாக இருக்கும். வேலையின் பாதுகாப்பு கருதி உத்தரவை மறுக்காமல் மெதுவாக செய்வார்கள்;
தேவையற்ற அரசியல்தந்திர அனுகுமறைகள் வேலையிலும், நிர்வாகத்திலும் உள்நுழையும்;
எப்படி நிர்வகிப்பது என்று
மேலாளர் கற்றுக் கொள்வதைக்காட்டிலும்
எப்படி அந்த மேலாளரை சமாளிப்பது என்று
ஊழியர்கள் புத்தகமில்லாமலே
அனுபவத்தில் சீக்கிரம் கற்றுக் கொள்கிறார்கள்.
நீங்கள் சாதிக்க விரும்பினால்
நிறைய பொறுப்பெடுக்க வேண்டும்;
பொறுப்புக்குரிய அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்;
பெற்ற அதிகாரத்தை திறம்பட கையாள வேண்டும்;
- [ம.சு.கு 10.11.2022]
Comentários