ம.சு.கு
[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-27 – பிரச்சனைகளைத் தீர்க்க பஞ்சாயத்து செய்யலாமா?"
“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-27
பிரச்சனைகளைத் தீர்க்க பஞ்சாயத்து செய்யலாமா?!
இரு நபர்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை தடுப்பதற்காக போய், அவர்கள் இருவரின் இழுப்புக்களை சமாளிக்க முடியாமல், சமாதானம் செய்யச் சென்றவரும் கீழே விழுந்து காயம்பட்ட ஒரு சில சம்பவங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சிலசமயங்களில், நீ யார்? உன்னை கூப்பிட்டார்களா? என்ற வார்த்தைகளும் கேட்கப்படுவதை கண்டிருப்போம்!
பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட சிறிய இடத்தகராறு (2-3 அடி இடம் யாருடையது என்ற பிரச்சனை) கைகலப்பாகி, பின் காவல் நிலையம் சென்று, இன்று நீதிமன்றத்தில் வழக்காக நிற்கிறது. இரண்டடி நிலப்பிரச்சனை, ஏதோ மிகப்பெரிய தேசப்பிரச்சனை போல, இன்னும் 13 ஆண்டுகளாய் வழக்கு நடக்கிறது.
குடும்பப் பிரச்சினை, நண்பர்களுக்கு இடையே பிரச்சனை, கொடுக்கல்-வாங்களில் பிரச்சனை, என்று எண்ணற்ற கருத்து வேறுபாடுகள், கைகலப்பாகி காவல் நிலையத்திலும், நீதிமன்றங்களிலும் நிலுவையில் நீடிக்கிறது. பல பிரச்சனைகள் (சிறியதும் / பெரியதும்) நீதிமன்றங்களுக்கு செல்லாமல், ஊரில் உள்ள பெரியவர்களை வைத்து பஞ்சாயத்து செய்து தீர்த்துக் கொள்ளப்படுகிறது. அப்படி எல்லா பிரச்சனைகளும் பஞ்சாயத்தில் தீர்ந்தால் நீதிமன்றங்களே தேவைப்படாதல்லவா!
எல்லா பிரச்சனையும் பஞ்சாயத்தால் தீர்க்க முடியுமா?
பஞ்சாயத்தின் தீர்ப்பை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா?
பிரச்சனைதாரர்களே, அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டை, சில நடுநிலையாளர்களை வைத்து பஞ்சாயத்து செய்துகொண்டால், அதிக பண விரயம் இன்றி சீக்கிரத்தில் பிரச்சனைகள் தீர வாய்ப்பிருக்கிறது. நீதிமன்றம் சென்றால் செலவும் அதிகம், நேரமும் அதிகம் எடுக்கும். சின்னச்சின்ன கருத்துவேற்றுமைகளுக்கு நீதிமன்றம் செல்லாமல் இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மூன்றாவது நபரை வைத்து பேசி தீர்ப்பது எல்லாவகையிலும் பயன்தரக்கூடியது.
பஞ்சாயத்து செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தவுடன், யாரை வைத்து பேசுவது என்று அடுத்த கேள்வி எழும். ஒரு பிரச்சனை பிரச்சனைக்கு பஞ்சாயத்து மூலம் தீர்வு காண வேண்டும் என்றால் என்ன தேவை;
பஞ்சாயத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள இருவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்
சமாதானத்திற்கு வரும் நபர் இருவரை விடவும் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவராக இருக்க வேண்டும்.
இருவரும் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல சமமான வாய்ப்பளிக்க வேண்டும்
ஒருவேளை, இந்த மூன்றில் ஒன்று பிசகினாலும் என்னவாகும்:
இருவரில் ஒருவர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், பஞ்சாயத்து நடப்பது சாத்தியம் இல்லை;
மூன்றாவது நபர், நல்ல மதிப்புமிக்கவராக இல்லாவிட்டால், அவருடைய வார்த்தையும் தீர்ப்பும் மதிக்கப்படாது;
இருதரப்பிற்கும், அவரவர்கள் தரப்பு நியாயத்தை சொல்ல வாய்ப்பளிக்காவிட்டால், தீர்ப்பு ஒரு தலை பட்சமாகிப் போகும். பின்னர் அந்த பஞ்சாயத்தே அர்த்தமற்றதாகிவிடும்.
பாவச் செயல்களை தண்டிக்க பஞ்சாயத்திற்கு சட்ட அதிகாரம் கிடையாது. அவைகளை நீதிமன்றங்களிடம் விட்டு விடுங்கள்.
உங்கள் வியாபாரம், குடும்ப பிரச்சினைகள், கொடுக்கல்-வாங்கலில் ஏற்படும் பிரச்சனைகள் எதையும், வளர விடாதீர்கள். ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய முயலுங்கள். உங்களிருவருக்குள்ளேயே முடிந்தால் பேசித் தீர்த்து விடுங்கள். உங்களின் பேச்சை மற்றவர் கேட்க மறுத்தால், ஒரு மூன்றாவது நபர் (பொதுவான / இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபரை) கொண்டு சீக்கிரத்தில் தீர்த்துக் கொள்ளுங்கள்.
உலகில் உள்ள எல்லா பிரச்சனைகளும் தீர்க்கக் கூடியனவே;
பிரச்சனைக்குரியவர்கள் உட்கார்ந்து பேசினால்
உடனே தீர்ந்து போகும் - இல்லாத பட்சத்தில்
மதிக்கத்தக்க மூன்றாவது நபரை கொண்டு தீர்க்க பாருங்கள்;
பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகளை வளர விடாதீர்கள்;
நம்முடைய
மதிப்பும் மரியாதையும் மகிழ்ச்சியும் வளர வேண்டுமே தவிர
பிரச்சனையும் துன்பமும் அல்ல;
- [ம.சு.கு 05.11.2022]