top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-23 – வாயை கட்டுப்படுத்தாவிட்டால் வயிறு வீங்கத்தான் செய்யும்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-23

வாயை கட்டுப்படுத்தாவிட்டால் வயிறு வீங்கத்தான் செய்யும்!


  • எந்த நேரத்திலும், உணவகத்தில் பொரித்த உணவுகளை கண்டால், உடனே அவற்றை சுவைத்துப் பார்க்க மனம் ஏங்குகிறது. நம் உடலுக்கு அது ஏற்றதில்லை என்று நன்கு தெரிந்திருந்தாலும், நாக்கு அதன் சுவையை இருசித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து ஜெயிக்கிறது...

  • பெருத்துவிட்ட உடலைக் குறைக்க, எண்ணற்ற மருத்துவ முறைகளை கையாண்டு, உடற்பயிற்சி செய்து, பத்தியம் இருந்து உடலை குறைக்கின்றனர். போதுமான அளவு குறைத்தபின், இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். மூன்று மாதங்களுக்குப் பின், மீண்டும் உடல் பெருத்துவிடுகிறது. ஏன்? உண்ட மருந்து சரியாக வேலை செய்யவில்லையா?

நம் தொப்பை வெளிப்பட்டிருப்பதை காணும் பெரியவர்கள், தங்களின் அந்தக் கால உழைப்பு பற்றிய கதைகளை சொல்லத் துவங்கிவிடுகின்றனர். ஆம்! அன்றைய காலங்களில் அதிகாலையிலிருந்து மாலை வரை, காடுகழனிகளில் தொடர்ந்து உழைத்தனர். அதனால் உண்ட உணவு முழுவதுவாய் செரித்தது. இன்றைய காலகட்டத்தில், உடல் உழைப்பு குறைந்து பெரும்பாலும் எல்லாமே உடல் வளையாத வேலைகளாகிவிட்டன.


பொத்தானை அழுத்தினால், உட்கார்ந்திருக்கும் நாற்காலி கூட தானாக சொன்ன இடத்துக்கு செல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து, மனிதனை படுசோம்பேறி ஆக்கிவிட்டது. ஒருபுறம் தொழில்நுட்பம் சோம்பேறித்தனத்தை வளர்க்க, மறுபுறம் உடல் நலத்துக்கு ஒவ்வாத எண்ணற்ற உணவு பதார்த்தங்களையும் நம்மவர்கள் தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றனர்.


துரித பயணம், துரித தொலைத்தொடர்பு, போல இன்று துரித உணவுகளும் வந்து நம் வாழ்வையும் துரிதமாகவே முடித்து வைக்க முயற்சிக்கிறது. உடலுக்கு ஒவ்வாத உணவென்று மறுநாள் வயிற்றுக்கு தெரிகிறது. எத்தனை முறை பட்டாலும், இந்த மூளையும், நாவும் கேட்பதில்லை. மறுமுறை துரித உணவுகளை, தின்பண்டங்களை, கண்டவுடன் நாவில் எச்சில் ஊறத்தான் செய்கிறது.


ஏன் உடல் எடை அதிகரிக்கிறதென்று நம் அனைவருக்குமே நன்றாகத் தெரியும். காரணம் நன்கு தெரிந்திருந்தும், ஆரோக்கியத்தைப்பேண எதையும் செய்வதில்லை. ஒருசிலர், உடற்பயிற்சிகள் செய்ய முயற்சிக்கின்றனர். அவற்றை தினம்தோறும் தொடர்வதில் தடைகள் வரவே, நாளடைவில் அந்த முயற்சிகளையும் தவிர்த்து விடுகின்றனர்.


அளவுக்கு அதிகமான உடல் பருமனால், தங்கள் உடலை தாங்களே சுமக்க முடியாமல் ஒரு சிலர் தடுமாறி நடப்பதை பார்த்தால் மனதுக்கு வேதனையாகத்தான் இருக்கிறது. அதே சமயம் இந்த கஷ்டமெல்லாம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறையினால், தங்களுக்கு தாங்களே வரவழைத்துக் கொள்ளும் உபாதை என்று எண்ணும் போது, மனிதனின் அகந்தையும், ஒழுங்கீனமான வாழ்க்கை முறையும் கோபத்தையே வரவழைக்கிறது.


மனிதன், தான் எவ்வளவு பட்டாலும் திருந்தாத / தன்னை திருத்திக் கொள்ளாத ஒரு மிகப்பெரிய விடயம், அவனது ஆரோக்கியம். எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும், அந்த அறிவை தன் ஆரோக்கியம் விடயத்தில் மட்டும் முறையாக பயன்படுத்தாத முட்டாள்கள் பலர் நாட்டில் திரிகின்றனர்.


உங்கள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டுமானால், அதற்கு முதல் தேவை உங்களின் உடல் ஆரோக்கியம். பணம், புகழ், உறவுகள் எல்லாம் அதற்கு அடுத்ததுதான். உங்களிடம் நிறைய பணம் இருக்கலாம். அன்பு செலுத்த உறவுகள் இருக்கலாம். எல்லாம் இருந்தாலும், பல் வலி / வயிற்று வலி / தலைவலியை வைத்துக்கொண்டு உங்களால் நிம்மதியாய் உறங்க முடியுமா?


உடல் உபாதைகளின் முன்னால் எந்த செல்வமும் பயனற்றுப்போகும். வாழ்கின்ற நாட்களை அர்த்தமுடையதாக வாழவிரும்பினால், உங்களால் யாருக்கும் தொந்தரவு ஏற்படக்கூடாதென்று நினைத்தால், உங்களை நம்பிய குடும்பத்தினரை நிர்கதியாய் விட்டுச் செல்லக்கூடாதென்று எண்ணினால், என்ன செய்ய வேண்டுமென்ற சிந்தியுங்கள்.


  • உங்கள் வாழ்வில் எது முக்கியம் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்;

  • ஒரே நாளில் உணவு பழக்கத்தை முற்றிலுமாய் மாற்ற முடியாதுதான். அதேசமயம் படிப்படியாய் நீங்கள் முயற்சித்தால், எல்லா மாற்றங்களும் சாத்தியமே!

  • உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்பதற்காக, பசியோடு இருக்காதீர்கள். அதே சமயம் பசி ஏற்படாமல் சாப்பிடாதீர்கள். உங்கள் உணவில், காய்கறிகள் பழங்களின் பங்கை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

  • ஒவ்வொரு நாளும், என்ன சாப்பிட்டோம், எவ்வளவு சாப்பிட்டோம், அன்றைய தினம் எத்தனை நேரம் உடல் வேர்க்க உழைத்தோம் என்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் செயல்பாடுகளை தினமும் குறித்து வைத்து, திருப்பிப் பார்த்தாலே போதும், உங்களுக்குள் பெரும்பகுதி மாற்றம் தானாக நிகழ்ந்து விடும்.

வாழ்வதற்காக சாப்பிடுங்கள்;

சாப்பிடுவதற்காக வாழாதீர்கள்!


இருசிக்கின்ற அளவு சாப்பிடாமல்

உழைக்கின்ற அளவிற்கு சாப்பிடுங்கள்;


எல்லா தருணங்களிலும்

நாக்கு உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால்

உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்;


வாயின் கட்டுப்பாடு

எல்லா வகையிலும்

வாழ்க்கைக்கு பெரிய நிம்மதி!


- [ம.சு.கு 01.11.2022]

Recent Posts

See All

எதற்கடுத்து எதை செய்யவேண்டுமென்று சமுதாயம் ஏற்கனேவே ஒரு தொடர்விதியை நிர்ணயித்துவிட்டது; நாம் அறியாமலே அந்த விதியில் சிக்குண்டுல்லோம்

நீங்கள் சொல்லும் கருத்து உண்மையே ஆனாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து சொன்னால் உங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் உறுதியாகும்!

Post: Blog2 Post
bottom of page