top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-17 – உறக்கத்தை தவிர்க்காதீர்கள்"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-17

உறக்கத்தை தவிர்க்காதீர்கள்?


  • இரவு அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு, பின் உறங்கச் செல்கிறோம். திரையில் கண்டவை கனவிலும் வந்து போகிறது. மறுநாள் காலையில் வழக்கம் போல் சீக்கிரம் எழுந்து அலுவலகம் செல்ல கிளம்பி போகிறோம். தினமும் 4-5 மணி நேர உறக்கத்தில் வாரம் பூராவும் கடத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை உறங்கி சமன் செய்ய முயற்சிக்கிறோம்.

  • காவலாளி இரவு நேரத்தில் தொழிற்சாலையை முற்றிலுமாய் வலம் வந்து பாதுகாக்கிறார். சில சமயம் தன் இருக்கையில் அமர்ந்தவண்ணமே தூங்கி விடுகிறார். இரவுக் காவலாளி தூங்கிவிட்டால் களவாணிகளுக்கு கொண்டாட்டம்தானே!


இயற்கையில் “உறக்கம்” என்பது நம் உணவிற்கு நிகரான ஒரு இன்றியமையாத தேவை. ஒரிரு நாள் ஏதாவது வேலையின் காரணமாக உறக்கம் குறைந்தால் சமாளித்துக் கொள்ளலாம். அதேநேரம், உறக்கம் தொடர்ந்து போதுமான அளவு கிடைக்காமல் தடைபட்டால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படக்கூடும்.


  • நம் இயல்பான உடல் ஆற்றல் குறைகிறது;

  • நம் உடல் நலம் பாதிக்கிறது (இரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய், மாரடைப்பு போன்றவைகள் வருவதற்கான வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது);

  • தொடர்ந்த தூக்கமின்மை, மனச்சோர்வை அதிகரித்து மனநலனை பாதிக்கிறது;

  • நம்முடைய சிந்தனை திறனை படிப்படியாக குறைத்து விடுகிறது;

  • நம்முடைய உணர்வுநிலையை பாதித்து, தவறான முடிவுகளை எடுக்க வழிவகுக்கிறது;

  • நம்முடைய ஞாபக சக்தியை படிப்படியாக குறைக்கிறது;

  • முறையற்ற உறக்கம், தவறான உணவுப் பழக்கத்துடன் சேர்ந்து நம் உடல் எடையை வெகு சீக்கிரத்தில் அதிகரிக்கிறது;

உங்களுக்கு போதுமான அளவு உறக்கம் தொடர்ந்து கிடைக்கப்பெற்றால், மேலே சொன்ன பட்டியலில் உள்ள எதுவும் உறக்கக் குறைபாட்டினால் உங்களுக்கு ஏற்படாது. முறையான உறக்கத்துடன் முறையான உணவுப் பழக்கம் கொண்டவர்களின்;


  • நோய் எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கிறது;

  • முறையான உறக்கம், போதுமான அளவு ஓய்வை உடலுக்கு கொடுத்து, அடுத்த நாளை புத்துணர்ச்சியுடன் துவக்க வழிவகுக்கிறது

  • முறையான உறக்கம், நம்மை நாள் முழுதும் நல்ல விழிப்புடன் இருக்க உதவுகிறது. நம்முடைய நினைவுத் திறனையும் அதிகரிக்கிறது;,

நல்ல உறக்கத்தினால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிட்டால்| அது வளர்ந்து கொண்டே போகும். நல்ல உறக்கம் வேண்டுமானால் உறக்கம் குறித்து உங்கள் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்; உறக்கத்தை ஆராய்ந்தறிந்த மேலை நாட்டு விஞ்ஞானிகள், உறக்கத்தில் இரண்டு நிலைகளிருப்பதாக பட்டியலிடுகின்றனர்.


NREM - கண்விழி அசையாநிலை உறக்கம்

REM - கண்விழி அசைவு நிலை உறக்கம்


இரண்டுமே வழக்கமான உறக்கமானாலும், REM நிலையில் (கிட்டத்தட்ட உங்கள் கனவு நிலையில்) உங்களின் மனமும், மூளையும் வேகமாக இயங்குகிறது. எவ்வளவுக்கெவ்வளவு கண்விழி அசையா நிலை உறக்கம் வருகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடுத்தநாள் உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் செயல்படும்.


நல்ல உறக்கம் பெற வேண்டுமானால் என்ன செய்யலாம்;


  • தினமும் குறித்த நேரத்தில் உறங்கச் சென்று விடுங்கள். ஒருமாதம் கஷ்டப்பட்டு பழகினால், பின் அந்தப் பழக்கம் நம்முள் வழக்கமாகிவிடும்;

  • நன்கு உறங்குவதற்கு ஏற்ற நல்ல சூழலை உங்கள் அறையில் ஏற்படுத்திக்கொள்ளுங்கள் (போதிய காற்று, ஒளி/ஒலி குறைப்பு, ......).

  • தொலைக்காட்சி, கைப்பேசி தொடுதிரைகளை உறங்குவதற்கு ஓரிரு மணி நேரத்திற்கு முன்னரே மூடி வைத்துவிடுங்கள்.

  • தினமும் காலையில் குறித்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள். இரவு தானாக உறக்கமும், காலையில் உரிய நேரத்தில் விழிப்பும் ஏற்படும்.

  • மது, தேனீர் போன்றவைகளை இரவு நேரத்தில் அருந்தாதீர்கள்.


உங்கள் உறக்கம்

உங்கள் ஆரோக்கியத்தின் திறவுகோல்;

போதிய ஓய்விற்காக உறங்குங்கள்;

சோம்பேறிகளாய் உறங்காதீர்கள்;

அன்றாடம் உறக்கத்தை அனுபவித்து

புத்துணர்ச்சியுடன் உலகை சந்தியுங்கள்!!


- [ம.சு.கு 26-10-2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page