top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-16 – ஏன் தேவையின்றி கோபப்படுகிறீர்கள்?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-16

ஏன் தேவையின்றி கோபப்படுகிறீர்கள்?


 • வீட்டில் ஏதேனும் ஒரு பொருளை நம் குழந்தைகள் உடைத்து விடும்போது நமக்கு கோபம் வருகிறது. அதேசமயம் நாம் உறவினர்கள் / நண்பர்கள் வீட்டிற்கு சென்ற சமயத்தில், அவர்கள் குழந்தை ஏதேனும் உடைப்பது கண்டு அவர்கள் பெற்றோர்கள் கோபம் கொள்ளும்போது, “குழந்தைகள் என்றால் அப்படித்தான், அதிகமாக திட்டாதீர்கள்” என்று அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்.

 • அலுவலகத்தில் நம் ஊழியர்கள் சொன்ன வேலையை சரியான நேரத்தில் செய்யவில்லை. செய்தவற்றிலும் கூட எண்ணற்ற தவறுகள். இறுதிக்கட்டத்தில் இந்திந்த செயல்கள் செய்யப்படவில்லை என்பது நமக்கு தெரியவருகிறது. இன்னும் ஐந்து நிமிடத்தில் வாடிக்கையாளர் அதை பெற்றுக்கொள்ள வரப்போகிறார் என்றால், ஊழியர்கள் மீது கோபம் வருகிறது.


இங்க ஓரிரு உதாரணங்களைச் மட்டுமே சொல்லியுள்ளேன். இது போல ஆயிரமாயிரம் சந்தர்ப்பங்களில் நமக்குக் கோபம் வருகிறது. மகிழ்ச்சி, துக்கம், வலி, வேதனை போன்று, கோபமும் எல்லோரிடமும் காணப்படும் இயல்பானதொரு குணம். ஏன் இந்த கோபம் நமக்கு வருகிறது?


 1. நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால்

 2. நாம் ஏமாற்றப்பட்டோம் என்பதால்

 3. நம்முடைய தவறான புரிதலால்,

 4. நம்முடைய கடந்தகால அனுபவங்களின் தாக்கத்தால்

 5. நம்மை மிரட்டியதால் / தாக்கியதால்

 6. நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையால்

 7. நம்மை அவமதித்ததால்

 8. நம்முடைய அகங்காரத்தினால்


எனக்குத் தெரிந்த எட்டு காரணங்களை பட்டியலிட்டுவிட்டேன். உங்களுக்கு ஏன் கோபம் வருகிறதென்று உங்களை நீங்கே அலசிப்பாருங்கள். கோபம் என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் ஒரு இயல்பான குணம் என்று பார்த்தோம். மேலே பட்டியலிட்ட பலதரப்பட்ட காரணங்களினால் வருகின்ற கோபத்தினால், நமக்கு என்ன பாதிப்பு வருக்கிறதென்று பார்ப்போம்.


 • கோபத்தில், சிந்திக்காமல் அவசரப்பட்டு வார்த்தைகளை பிரயோகித்து விடுகிறோம். ஏன் அப்படி சொன்னோம் என்று பின்னர் நமக்கு நாமே வருந்துகிறோம்;

 • கோபத்தில் அவசர முடிவுகளை எடுக்கிறோம். அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் தவறாகிவிட வாய்ப்பு அதிகம்;

 • அதீத கோபத்தினால், இரத்தக் கொதிப்பு போன்ற வாழ்வியல் நோய்கள் வந்து உடல் நலம் பாதிக்கிறது.

 • கோபத்தினால் செய்யக்கூடாத மாபாதகங்களை சிலசமயம் செய்துவிட்டு காலமெல்லாம் வருந்துகிறோம்;

 • அதீத கோபம் / வெளிப்படுத்தாமல் அடக்கி கொள்ளப்படும் குமுறல் போன்றவையால், திடீர் மாரடைப்புக்கள் ஏற்பட்டு நிலைகுலைந்து போகிறோம்;

 • அடிக்கடி ஏற்படும் கோபத்தின் தாக்கம், காலப்போக்கில் ஏன் கோபப்படுகிறோம்? எதற்காக போடுகிறோம்? என்று தெரியாமல் எல்லாவற்றிற்கும் தேவையில்லாமல் எரிந்து விழுகிறோம்.

 • நம் அதீத கோபத்தினால், நம் அன்புக்குரியவரை / நம் நெருங்கிய உறவுகளை / நம் நட்புக்களை நிரந்தரமாக இழக்க நேரிடுகிறது;

இப்படி நம் இயல்பு வாழ்க்கையையும், நம் இலட்சியத்தையும் சிதைக்கக்கூடிய கோபத்தை, எப்படி கட்டுப்படுத்துவது? என்ற கேள்வி நம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. நம்முள் ஆழமாக பதிந்துவிட்ட இந்த கோபத்தை ஒழிக்க, தனியாக மூலிகை கசாயம் எதுவும் கொடுக்க முடியாது. இது ஒரு தனி மனித குணம். நமக்கு ஏற்படும் எல்லா சூழ்நிலையையும் எப்படி நாம் ஏற்றுக் கொள்கிறோம்? எப்படி பதில் அளிக்கிறோம்? என்பதை பொறுத்து இந்த குணம் நம்மில் வித்தாகி விளைகிறது.


அடுத்தவரின் குழந்தை செய்த தவறை மன்னிக்கும் நாம், நம் குழந்தைகளிடம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. நம் குழந்தைகளிடம் அதிகமாக ஒழுக்கத்தை எதிர்பார்ப்பதால், அவர்கள் மீது நமக்கு கோபம் வருகிறது. அப்படி வரும் கோபத்தை குறைக்க / கட்டுப்படுத்த என்னதான் வழி?


 • எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொள்ளுங்கள்;

 • சிறுசிறு தவறுகளை சகித்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். மற்றவர்களிடம் கொடுத்து செய்யும்போது தவறுகள் வந்துதான் தீரும்.

 • சூடான விவாதங்களில் / கோபத்தை தூண்டும் சூழ்நிலைகளில், உடனடியாக பதில் அளிக்காதீர்கள். சற்று யோசித்துப் பின்னர் பதில் சொல்லலாம், அவசரமேதுமில்லை;

 • உணர்ச்சிவயப்படும் சூழ்நிலையில், ஆழ்ந்து மூச்சு விடுங்கள். கோபத்தை தவிர்க்க, மூச்சுப்பயிற்சி சிறந்ததொரு இயற்கை மருந்து;

 • மாற்றங்களை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.


கோபமெனும் கொடிய விஷத்தை,

கவனத்தோடு கையாண்டு

படிப்படியாய் விலக்கினால்,

வாழ்க்கை இனிதாகும்;

சமுதாயத்துடனான உறவு பலப்படும்;


- [ம.சு.கு 25.02.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page