“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-11
பிரச்சனை உங்களுக்கு மட்டுமில்லை!
காலையில் அலுவலகம் செல்ல கிளம்பி வெளியே வந்து பார்த்தால், நம் வாகனத்தில் காற்று இருக்காது;
எங்கேனும் வரிசையில் காத்திருந்தால், நம் வரிசை மட்டும் மெதுவாக நகரும்;
நீங்கள் கடன் வாங்கியவரிடம் சரியாக திருப்பி கொடுப்பீர்கள். ஆனால் உங்களிடம் வாங்கியவர்கள் யாரும் நாணயமாக நடப்பதில்லை;
கோவிட் பெருந்தொற்றால் வியாபாரம் பாதிக்கப்பட்டு நீங்கள் கடனாளி ஆகிவிட்டீர்கள்;
திடீரென்று மயங்கி விழுந்திருப்பீர்கள். மருத்துவ பரிசோதனையில் உங்களுக்கு வாழ்வியல் நோய்களான நீரிழிவு, இரத்த அழுத்தம் இருப்பதாக மருத்துவர் கூறுவார்;
இந்த எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் பொதுவாகச் சொல்லும் வார்த்தைகள் “பகவானே! எனக்கு மட்டும் ஏன் தொடர்ந்து கஷ்டம் வருகிறதோ?” என்று. நமக்கு வந்த கஷ்டம் தான் உலகிலேயே மிகவும் கொடுமையானது என்று நாம் எண்ணுகிறோம்.
சோமாலியா தேசத்தில் உணவிற்கு வழியில்லாமல் ஆயிரமாயிரம் மக்கள் இன்றும் சாகிறார்கள். உண்பதற்கு உணவு இல்லாமல் தவிக்கும் மக்களை விடவா உங்கள் கஷ்டம் பெரியது!
இந்த நிமிடம் உங்களின் கால்களை அகற்றாவிட்டால், உயிர் போய்விடும் என்று வருகின்ற மருத்துவ அவசரத்தை விடவா உங்களின் பிரச்சனை பெரியது!
கத்திமுனையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கி அடுத்த நிமிடம் நாம் உயிரோடு இருப்போமா என்று மனம் படபடக்கும் பிரச்சினையை விடவா உங்கள் பிரச்சினை பெரியது!
ஒரு உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களைப் போல மனிதர்கள் அனைவருக்கும் எண்ணற்ற பிரச்சனைகள் இருக்கின்றன. நீங்கள் எந்த சமயத்திலும் தனித்து விடப்படவில்லை.
உங்கள் வீட்டு அளவில் ஒரு லட்சம் ரூபாய்க்கு பிரச்சனை. அதே உங்கள் நாட்டளவில் ஒரு லட்சம் கோடிக்கு பிரச்சனை. உயிரிணங்கள் எல்லாவற்றிற்கும் பிரச்சனை என்பது தவிர்க்கமுடியாத வாழ்வின் அங்கம். எந்தப் பிரச்சினையும் உங்களுக்கு மட்டும் தனித்துவமாக இல்லை. உங்களை போல பலரும் அதே சிக்கலில் இருக்கிறார்கள். உங்களைக் காட்டிலும் அவர்களுக்கு சிக்கல் அதிகமாகவே இருக்கிறது.
நமக்கு வரும் எல்லாச் சிக்கல்களையும் பிரச்சனை என்ற கோணத்தில் பார்த்தால், பெரிய பிரச்சனை தான். அவைகளை சமாளிப்பது, நாம் முன்னேறுவதற்கான வாய்ப்பு என்கிற கோணத்தில் பார்த்தால், எல்லா பிரச்சினைகளிலும் ஏதேனும் ஒரு வழி தென்படும். வந்த பிரச்சினையின் காரணத்தை ஆராய்ந்து, அதை நிரந்தரமாக சரி செய்து அடுத்த நிலைக்கு முன்னேறுபவர்கள் வெற்றியடைகிறார்கள்.
என்னுடைய பிரச்சனை தான் உலகிலேயே பெரிதென்றும், அதைத் தீர்க்கவே முடியாது என்று எண்ணுபவர்கள், அவர்கள் எண்ணியவாறே தீர்க்கவே முடியாமல் திணறுகின்றனர். அதேசமயம், பிரச்சனையை தன் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக பார்ப்பவர்கள், வழி கண்டுபிடித்து சாதிக்கிறார்கள்.
இங்கு பிரச்சனையின் அளவு முக்கியமல்ல
அதை அணுகும் முறைதான்
அதன் முடிவை தீர்மானிக்கிறது;
நம்மைப் படைத்தவனும், நம்மவர்களும் இருக்கிறார்கள்,
தைரியமாக களம் காணுங்கள்,
மலையெனத் தெரிவதை மடுவெனப் போகும்;
வெற்றி நிச்சயம்!!
- [ம.சு.கு 20.10.2022]
Kommentare